
“அப்பா , நல்ல வேலை. கொஞ்சம் நேரம் பிரீயா உக்கார முடியுது”
“சரியா சொன்ன. கடைசி ஒரு வாரமா அந்த ஹேமா பெண் நம்மளை மாத்தி மாத்தி விளையாடிட்டு இருக்கா. தூங்கும்போது கூட, அவளோட பெட்ல தான் இருக்கோம்.”
“கடையில் இருந்த நேரம் அவ்வளவு போர் அடித்தது. என்ன பண்றதுனே தெரியாம வெட்டியா முகத்தை முகத்தை பாத்துட்டு இருந்தோம். இந்த பெண் ஹேமா கிட்ட வந்த நாலு நாள் நல்லா இருந்தது. இப்ப பயங்கர டையர்ட் ஆயிடிச்சு”
“அது அப்படித்தான். இன்னும் ஒரு வாரம் நம்மள கையோடு வச்சிட்டு இருந்தா ஜாஸ்தி. குழந்தைங்க நாலு நாள் தான் புது பொம்மையை ஓட்டிகிட்டே இருப்பாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது.
“ஹி ஹி ஹி …..உனக்கு எப்படி புள்ளி விவரம் தெரிந்தது ?”
“நம்ப கடையில இருந்தோம்ல அங்க பேசிகிட்டு இருந்தாங்க.”
“ஆனால் , ஹேமாவை குறை சொல்லக் கூடாது நம்மளை நல்லா பாத்துக்கறால. புது டிரஸ், தினமும் தலையை சிவரது , ஸ்லீப்பர் போட்டு விடறதுனு சந்தோஷமா வெச்சுக்கறா “
“ஆமா , நேத்து தோசை கூட சாப்பிட குடுத்தா. நம்மளுக்கு பிரட் , பட்டர் தான் புடிக்கும்னு அவளுக்கு தெரியல பாவம் “
“எனக்கு ஒண்ணுமே கிடைக்கல. நீங்க மட்டும் பார்ட்டி டிரஸ்ல அழகா இருக்கீங்க. நான் மட்டும் , நீச்சல் உடையில் எப்பவும் இருக்கேன். தோசையும் இல்ல. சில பெண் குழந்தைக்கு, ஆண் பொம்மைகள் பிடிப்பதில்லை. இந்த இடத்தில நான் மாட்டிக்கொண்டேன் “
“ஆமாம் ஹேமாவுக்கு உன் மீது பிரியம் இல்லை தான். அவள் கொஞ்சம் வளர்ந்து விட்டப்பின் , அவள் பாய் பிரண்டாக நினைத்து உன்னை கொஞ்சுவாள்”
“இவள் என்ன ஏழு வயது இருக்குமா ? அது நடப்பதற்குள் என்னை யாராவது இங்கிருந்து தூக்கி போட்டு விடுவார்கள் “
“ஆம் . அதுவும் சரி தான். பொம்மைகளை குப்பையில் போடும் மனிதர்கள் எனக்கு பிடிப்பதில்லை. இந்த பூமியில் குழந்தைகளுக்கு பஞ்சம் இல்லை. ஒரு குழந்தை விளையாடி விட்டால் , மற்றொரு குழந்தைக்கு குடுக்கலாம். குப்பையில் போடுவது, நம்மளை உதாசீனம் படுத்துவது என்று அவர்களுக்கு புரிவதில்லை“
“நமக்கும் உணர்வுகள் உண்டு என்பதை அவர்களுக்கு நம்மால் தெரிவிக்க முடியவில்லையே “
“நமக்கு உணர்வு இருப்பதால் தான் , நம்மை குழந்தைகள் எங்கு சென்றாலும் எடுத்து செல்கிறார்கள். ஹேமாவை பாரு, அவள் அறையில் நமக்கென ஒரு தனியிடம். நமக்கென தனி டிரஸ் , சீப்பு , கண்ணாடி , வீடு என்று பாதுகாக்கிறாள். அவள் நம்மிடம் வந்து பேசும் போதும் இதமாக இருக்கும். சில நாட்களில் நம்மை மறந்து விட வாய்ப்பிருக்கிறது, ஆம். இருந்தாலும் , ஒரு மாதமோ இரண்டோ கழித்து எடுக்கையில் நம்மை புது பொம்மை போல் பாதுகாப்பாள். ஆனால் சில பெரியவர்களுக்கு தான் அது புரிவது இல்லை. இடம் அடைக்கிறது , தேவையில்லை என்றெல்லாம் சொல்லி குப்பையில் போட்டுவிடுகிறார்கள் “
“நீ பொம்மையாக இருப்பதால் , உன் உணர்வு தான் பெரிது என்று நினைக்கிறாய். மனிதன் உண்ணும் உணவையும், தண்ணீரையும் வீணடித்து குப்பையில் போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது தெரியுமா ? எத்தனை மக்கள் உணவில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.”
“ஆம் , உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? ஒரு சின்ன பையன் அப்பாவிடம் காசில்லாத காரணத்தால் , தன் உணவுக்கு செலவழிக்கும் காசை பொம்மைக்கு செலவிட சொன்னான். அந்த பையனின் அப்பா அவனுக்கு தெரியாமல் அழுதார். பாவம் அவர். “
“ஞாபகம் இருக்குது. அந்த மாதிரி கஷ்டப்படும் மக்களுக்கு உணவை கொடுக்கலாம் வீணடிக்காமல்”
“இங்க பாரு , இப்படி குறட்டை விட்டு தூங்கறவன் பக்கத்துல இருக்க தட்டை . படுக்கை அறையில் சாப்பிட்டதும் இல்லாமல் , பாதி சாப்பாடு மிச்சம். இனிமேல் அது குப்பைக்கு தான் போகும் “
“ஏ ஏ ஏ அவன் உருண்டு வரத பாத்த நம்ம மேல தான் விழ போறான் போல். அ ஆ ஆ …..எரும மாடு “
கட்டிலிலிருந்து கீழே விழுந்தாலும் கண்ணை திறக்க முடியாமல் கஷ்டப் பட்டான் ரமேஷ். கண்களை மெதுவாக தேய்த்து கண்ணை திறந்தான். இரவு நேரம் முழுவதும் வேலை பார்த்ததால் உடல் மிக டயர்டாக இருந்தது. மணி எட்டு தான், இன்னும் சிறிது நேரம் தூங்கி கொண்டிருந்திருக்கலாம். தான் கண்ட விசித்திரமான கனவு அவனை சீக்கிரம் எழுப்பி விட்டதை நினைத்து வெறுப்படைந்தான். மறுபடியும் படுக்கைக்கு சென்று படுத்தான். அவன் படுக்கைக்கு அருகில் இருந்த மேஜையில் அவன் பாதி தின்று வைத்த இரவு உணவு இருந்தது. கண்டது கனவு தானா என்று ஒரு நிமிடம் யோசித்தான்.
“அய்யோ இங்க இருக்கா . மாமா நான் இந்த பொம்மைகளை வீடெல்லாம் தேடினேன். இங்க எப்படி வந்துச்சு “ என்று சொல்லிக்கொண்டே மாமாவின் அறைக்குள் வந்தாள் ஹேமா, ரமேஷின் அக்கா மகள்.
ரமேஷ் அவள் செல்லும் திசையில் திரும்பி பார்த்தான். அங்கே நான்கு பொம்மைகள் இருந்தன. மூன்று பெண் பொம்மைகள், அழகான பார்ட்டி உடையில் . மற்றும் ஒரு ஆண் பொம்மை , நீச்சல் உடையில்.
ரமேஷால் அவன் காணும் காட்சியையும், கண்ட கனவையும் நம்ப முடியவில்லை .
“ஹேமா நீ இந்த பையன் பொம்மையை விளையாடுவது இல்லையா ? “ என்று கேட்டான் .
அவளும் “ஆமா மாமா. உங்களுக்கு எப்படி தெரியும். பார்பி மட்டும் தான் எனக்கு பிடிக்கும், இந்த பெண் பொம்மைகளை பார்பி என்று அழைப்போம். இந்த பையனுக்கு கென் (ken ) என்று பெயர். எனக்கு கென் பிடிக்கவில்லை. “
“இந்த பொம்மைகளை எப்ப வாங்கின “
“ஒரு வாரம் முன்னாடி, சீதா அத்தை வாங்கிட்டு வந்தாங்க. உனக்கு ஒன்னு தெரியுமா , நான் இவங்களுக்கு நேத்து தோசை கூட வெச்சேன். உன்ன மாதிரி இவங்க மிச்சம் எல்லாம் பண்ண வில்லை. கொடுத்த தோசை முழுவதும் முடிச்சாங்க. “
ரமேஷ் வியந்து போனான். தன்னை சுற்றி நடப்பது உண்மையா. இல்லை அவனுக்கு பொம்மையின் பாஷை புரிந்து விட்டதா என்று தெரியவில்லை.
“சரி . முடியும் போது, அவங்களுக்கு பிரட் பட்டர் ஜாம் வை . இந்த “கென் “ பொம்மையை நான் எடுத்து வேற யாருக்காவது கொடுத்து விடவா ?” என்றான் ரமேஷ்.
“ஓகே ….” என்று சொல்லிவிட்டு பொம்மைகளை எடுத்து ஓடினாள் ஹேமா.
ரவிக்குமார்)
