திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்:

(முக நூலில் ஆர்.கந்தசாமி)

கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது.

நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது.

பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அவரது நாவலான காப்டன் கல்யாணம் பற்றி அவரிடம் கேட்டேன்.

“என்னுடைய அந்த நாவல் விகடனில் தொடராக வந்தபோது கூடவே தில்லானா மோகனாம்பாள் நாவலும் வந்தது. அதைப் பல்லாயிரக்கணக்கான பேர் ரசித்து வாசித்தார்கள். அதே இதழில் என் தொடர்கதை வந்ததால் அதை வாசித்த அத்தனை வாசகர்களும் என் கதையையும் வாசித்தார்கள் என்பதில்தான் எனக்குப் பெருமை. நான் கொத்தமங்கலம் சுப்பு எழுத்துக்களின் தீவிர ரசிகை!” என்று பண்பட்ட அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் அவர்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடாகியிருந்தது. பட்டிமன்றத்தில் நான் ஓர் அணியில் கலந்துகொண்டு பேசினேன்.

அப்போது தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரைப் பற்றிக் குறிப்பிட்டபோது தில்லானா மோகனாம்பாள் புகழ் கொத்தமங்கலம் சுப்பு பெயரையும் குறிப்பிட்டேன்.

பட்டிமன்றம் முடிந்தபிறகு என்னை ஏராளமான பேர் தொலைபேசியில் அழைத்து நான் கொத்தமங்கலம் சுப்பு பெயரைச் சொன்னது பற்றிக் கூறி, அதன் பொருட்டாகவே என்னைப் பாராட்டினார்கள். நானும் அவரது ரசிகன்தான் என்றாலும் அவருக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.

விமர்சகர்கள் வலியத் தூக்கிப் பிடித்து நிறுத்துகிற எழுத்தாளர்கள் கொஞ்சம்பேர் உண்டு. கால வெள்ளத்தில் மக்களால் அவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். தன் எழுத்தின் வலிமையை நம்பாமல், விமர்சகர்களது வாதத்தின் வலிமையை நம்பி இலக்கியம் படைப்பவர்களுக்கு அந்த கதி நேர்வது ஆச்சரியமல்ல.

ஆனால் எழுத்தின் தரத்திலேயே முக்கிய கவனம் செலுத்தி, சமுதாய உணர்வோடு எழுத்தைப் படைத்து, அதன்பொருட்டு வாசகர்களின் ரசனையை மட்டுமே நம்பி வேறு செல்வாக்கைத் தேடாத எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் என்றும் மறப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாசகர்கள் ஒருபோதும் அவரை மறக்க மாட்டார்கள்.

தமிழில் எழுதப்பட்ட ஓர் எழுத்து திரைப்படமாகவும் வந்து, எழுத்து பெற்ற அதே வெற்றியைப் பெற்றது என்றால் அந்தப் பெருமை தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு மட்டும்தான் உண்டு என்று தோன்றுகிறது. நாட்டியப் பேரொளி பத்மினியையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் மோகனாம்பாளாகவும் சண்முகசுந்தரமாகவுமே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளின் இன்னொரு பெருமை கோபுலுவின் கண்ணைக் கட்டி நிறுத்தும் அழகிய சித்திரங்கள். ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா போன்ற கொத்தமங்கலம் சுப்புவின் மற்ற நாவல்களுக்கும் கோபுலுவே ஓவியம் வரைந்தார் என்றாலும், தில்லானா மோகனாம்பாள் நாவலில் கோபுலு பெற்ற புகழ் அலாதியானது.

நன்றி: சிலிகான் ஷெல்ப்