எம்.டி.முத்துக்குமாரசாமி/சப்போட்டாவின் கறுப்பு விதைகள்

அடைமழை இன்னும் காணா ஐப்பசி

என் கவிதைக்கு ஒரு பிடி

குறைந்ததால் வசனம் போல இருக்கிறது

வழக்கமாய் என்னைப் பின் தொடரும்

கறுப்பு நாய் இன்றும் தன்

தீக்கண்களால் என்னை உற்றுப்பார்க்கிறது

அம்மணக்குண்டி பெண்கள் என் ஃபேஸ்புக் டைம்லைனில்

ஹடயோகம் பயில்கிறார்கள்

நானொரு திராட்சைத் தோட்டத்து நரி போல

என் இதயத்தைக் கட்டுக்கோப்பாய் வைத்திருக்கிறேன்

உங்களுக்குத் தெரியுமா

சொல்ல முடியாததைச் சொல்வதற்கு

மழைக்கரத்தின் பூமி தொடா

நிராசை அவசியமென்று

அவரையும் இவரையும் உவரையும் போல

நான் இக்கு வைத்துப் பேசுவதில்லை

என் வீட்டு முற்றத்து முருங்கை மரம்

அதன் முற்றிய காய்களை

சலனமில்லாமல், சிறு வெடிப்புடன் உதிர்த்துவிடும்

மரத்திலேயே காயவிடாது

அந்தப் பெண் கூட கேட்டார்

மிஸ்டர் சோ அண்ட் சோ

உங்கள் முற்றத்தைத் தவிர உங்களுக்கு என்ன தெரியும்

அப்போது அவர் தோல் சீவிய கனிந்த சப்போட்டா பழத்தை

கடித்து சாப்பிட்டவாறே அதன் பளபளக்கும் கறுப்பு விதைகளை

அவரெதிரிலிருந்த சாம்பல் கிண்ணத்தில் அடுக்கிக்கொண்டிருந்தார்

அதிலொரு விதை என்னைப் பின் தொடரும்

நாயின் கண் போலவே இருந்தது என

நான் சொல்ல நினைத்தேன் , சொல்லவில்லை

இப்படி சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டுவிடுவதால்தான்

என் பெயர் எல்லா இடங்களிலும்

விட்டுப்போய்விடும், அதனால் எனக்குக் கவலை

ஒன்றும் இல்லை, அடைமழை பெய்யாமல் அடி மன ஆசை

சொல்லாகாதுதானே?

இப்படி நான் முன்னுக்குப் பின் முரணாய்

ஏதாவது பேசிவிடுகிறேன், எனக்கு

ஆரம்பிக்கவும் தெரிவதில்லை

முடிக்கவும் தெரிவதில்லை

ஏதாவது ஒரு போரைத் தொலைக்காட்சியில்

காட்டிக்கொண்டேதான் இருக்கிறார்கள்

உக்ரைன் போர் ஆரம்பித்தபோது நான்

நிலக்கடலை கொறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன்

அப்புறம் கடலை கொலாஸ்டிரால் என்பதால்

(டாக்டர் அறிவுரைப்படி)

காஸாப் போர் நடக்கும்போது, பார்த்துக்கொண்டே

சாத்துக்குடி ஜூஸ் (சர்க்கரை இல்லாமல்) குடிக்கிறேன்

வீட்டிலிருந்து வெளியே போகிறேன்

வீட்டிற்கே திரும்பவும் வந்துவிடுகிறேன்.

ஃபேஸ்புக்கை திறப்பதற்கே பயமாக இருக்கிறது

இந்த ஹடயோகம் பயிலும் பெண்களை நினைத்தால்.

மீள் பகிர்வ