மதுவந்தி/தொலைவு

.

நேற்றிருந்தார் இன்றில்லை
மனதுக்குகந்த கவிஞர் எனும் செய்தி
கேட்டதிலிருந்து, கண்கள் குளமாகி
மனசு கனத்து வேலையே ஓடவில்லை.

எதற்கென்றும் நிற்காதியங்கும்
உலகில் நிற்காமல் நானும்
வீட்டு வேலை அலுவலக வேலையென
மூழ்கி, வீடு திரும்பியபின்
மீண்டும் துயரம் திரையெனப்
படர்ந்தது.

கடைசி பஸ்ஸூம் போய் விட்ட
பஸ் ஸ்டாண்ட் போல
வேலைகள் ஓய்ந்த வேளையில்
தோழமையின் அலைபேசி அழைப்பு
வலிக்கும் மனசுக்கு இதமான
வார்த்தைகளில் கொஞ்சம் ஆசுவாசம்.

துயரம் மிகுந்த தருணங்களில்
விழி ததும்பும் நீர் துடைக்க
ஓர் விரல்.
ஆதுரமாய்ப் பிடித்துக் கொள்ள
ஒரு கை.
ஆதரவாய்ச் சாய்ந்து கொள்ள
ஒரு தோள்.
வேறென்ன வேண்டும்?

நாள் முழுதும் குறைவானபேச்சு,
வாடிய முகம், எதுவும் பாராமல்
ஏனென்று கேளாமல்
அருகிலேயே அமைதியாய்
உறங்கும் இணையரைப்
பார்த்தேன்.

மிகத் தொலைவிலிருந்ததாய்
உணர்ந்தேன்,
தூரமும் தொலைவும்
வெளியில் இல்லை, மனசில்தான்
எனத் தோன்றியது.

              .  16.02.24