இனிக்கும் தமிழ் -200/டி வி ராதாகிருஷ்ணன்


தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் …… நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு …… செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக …… துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை …… வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய …… அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தொந்தி சரிய மயிரே வெளிற … பெருத்த வயிறு சரியவும், முடி
நரைக்கவும்,

நிரை தந்தம் அசைய … வரிசையாயிருந்த பற்கள் ஆடவும்,

முதுகே வளைய இதழ் தொங்க … முதுகில் கூன் விழவும், உதடு
தொங்கிப்போகவும்,

ஒருகை தடிமேல் வர … (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது
வரவும்,

மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென … பெண்கள்
கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்,

இருமல் கிண்கிணென முன் … முன்னே இருமல் கிண்கிண் என்று
ஒலிக்கவும்,

உரையே குழற … பின்னே பேச்சு குழறவும்,

விழிதுஞ்சு குருடு படவே … கண்கள் மங்கி குருட்டுத்தன்மை
அடையவும்,

செவிடுபடு செவியாகி … செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும்,

வந்த பிணியும் அதிலே மிடையும் … வந்த நோய்களும், அவற்றின்
இடையிலே புகுந்த

ஒரு பண்டிதனும் … ஒரு வைத்தியனும்,

மெயுறு வேதனையும் … உடல் படும் வேதனையும்,

இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக … சிறு பிள்ளைகள்
சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத்
தொளைக்கவும்,

துயர்மேவி மங்கை யழுது விழவே … மிக்க துயரம் கொண்டு மனைவி
அழுது விழவும்,

யமபடர்கள்நின்று சருவ … யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர
போராடவும்,

மலமே யொழுக … மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும்,

உயிர் மங்கு பொழுது … உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில்

கடிதே மயிலின்மிசை வரவேணும் … முருகா, நீ விரைவில்
மயில்மேல் வரவேண்டும்.

எந்தை வருக ரகுநா யகவருக … என் அப்பனே வா,
ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே யினிவருக … குழந்தாய் வா, மகனே
இதோ வா,

என்கண் வருக எனதா ருயிர்வருக … என் கண்ணே வா, என்
ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக அரசே வருக … அழகிய ராமனே வா, இங்கே
வா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூ டிடவருக … பால் குடிக்க வா, பூ
முடிக்க வா,

என்று பரிவி னொடுகோ சலைபுகல … என்றெல்லாம் அன்போடு
கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா … வந்த மாயன் திருமால் மனம்
மகிழும் மருமகனே,

குறவரிள வஞ்சி மருவும் அழகா … குறவர் குல இளங்கொடியான
வள்ளி அணையும் அழகா,

அமரர்சிறை சிந்த … தேவர்களின் சிறைவாசம் ஒழிய,

அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா … அசுரக் கூட்டம்
வேரோடு மடிய அழித்த தீரனே,

திங்கள் அரவு நதிசூ டியபரமர் … நிலவும், பாம்பும், நதியும்
சூடிய பரமர்

தந்த குமர … தந்தருளிய குமரனே,

அலையே கரைபொருத செந்தி னகரில் … அலை கரையில்
மோதும் திருச்செந்தூரில்

இனிதே மருவிவளர் பெருமாளே. … இன்பமாய் வீற்றியருளும்
பெருமாளே.

                           –

ReplyForwardAdd reaction

One Comment on “இனிக்கும் தமிழ் -200/டி வி ராதாகிருஷ்ணன்”

Comments are closed.