விரல் /வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

31.10.21 மாலை….

விடிந்தால் சதிஷ்-சத்யா திருமணம் ..

ஒரு மணி நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி தொடக்கம் ..
மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தடபுடல் …
‘100’ க்கு 75′ பரப்பு கொண்ட பெரிய முஹுர்த்த ஹால்…. ஒட்டிப் பிறந்தாற்போல் அமைந்த ‘டைனிங்’ ஹால்…
வரவேற்பைத் தொடரும் சுவையான விருந்தை ‘சுய -சேவை’ (buffet) முறையில் நடத்த திட்டம் …
கேட்டரிங் ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்த பணியாட்கள் அவரவர் பணியில் மும்முரமாய் ஈடுபாடு …
மண-மேடையின் பின் புலத்தை அலங்கரிக்கும் ‘க்ரீம் – மெரூண்’ வண்ண “டபிள் யூ ” எழுத்து வடிவில் கொசுவம் பிடித்த ‘ஷாட்டி’ன் ரகத் திரைச் சீலை .. அதில் ஊதா நிறத்தில் ‘பளிச்’ என்று அச்சிடப் பட்ட மணமக்கள் பெயர்கள் ..
ஜோடியை வாழ்த்த வரும் சுற்றம் மற்றும் நட்புறவுகள் மண மேடை ஏறவும்
வாழ்த்தியபின் கீழிறங்கவும் …
மேடையின் இருபுறமும் படிக்கட்டுகளில் விரிக்கப் பட்ட சிவப்பு வெல்வெட் கம்பளம் …
மேடையின் நடுவே… மணமக்கள் அமர்வதற்கு வெவ்வேறு வண்ண செயற்கை மலர்களால் அலங்கரிக்கப் பட்ட இரண்டு
‘குஷன்’ நாற்காலிகள்…என இவை ஒருபுறம் பிரத்தியேக குளிர் சாதன ஒப்பனை அறையில் தோழிகள் இருவர் சத்யாவிற்கு
அலங்காரம் செய்ய ஒருவர்க்கு ஒருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்கும் இனிய தருணம் ..
அமையப் போகும் இல்லற வாழ்வு பற்றிய சத்யாவின் இன்ப கற்பனை நொடிகள் …. என இவைகள்
மறு புறம் …

2

‘வந்தே பாரத்’ ரயில் வேகத்தில் சீறிக் கொண்டு அறைக்குள் நுழைய முற்பட்ட சுசிலாவின் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து விட்ட சத்யா, வருங்கால நாத்தனார் என்பதால் மரியாதை நிமித்தம் இருக்கையில் இருந்து எழுந்து “வாங்க அக்கா … ஏதாவது வேணுமா ?.”என்றாள் புன்னகை பூத்து ..
மாப்பிள்ளை பையனுக்கு அம்மா கிடையாது…சுசிலா-சுரேஷ் இருவரும் அவனின் ஒரே அக்கா-மாமா … அவர்கள் முன்னிருந்து நடத்தும் கல்யாணம் ..லா, சத்யாவின் உபசரிப்பை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவளின் தோழியரைப் பார்த்து…
” ரெண்டு பேரும் வெளியே இருங்க ….நான் சத்யாவோட தனியா பேசணும் ..”
இருவரும் ‘விருட்’டென்று அறையை விட்டு மறைந்தனர் …
சுசிலா குரலில் அப்படியோர் கண்டிப்பு …
“சத்யா ….! எங்கே…. உன் வலது கையை நீட்டு …
நீட்டினாள் ..
” என் சந்தேகம் உறுதியாயிடுச்சு …ஒன் அம்மாவை கூப்பிடு …நான் அவங்க கிட்ட பேசிக்கறேன் “
“அவங்க ரூம்ல இருக்காங்க! என்ன வேணும்னு சொன்னிங்கன்னா …”
” ஒண்ணும் இல்ல !..இந்த .. கல்யாணத்தை நிப்பாட்டணும் …”
“என்ன அக்கா ….?ஏதேதோ சொல்றிங்க .. என்ன உங்க சந்தேகம் ? கல்யாணத்தை ஏன் நிப்பாட்டணும்? என் ஆறாவது விரலால ஏதும் பிரச்னையா ?”
பதட்டத்தில் அவளை அறியாமலே கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் சத்யா
” கேள்வி கேக்கறத விட்டுட்டு சொன்னதைச் செய்… …இப்போ நீ கூப்பிடறயா இல்ல …நானே …..?… “
என்று கொதித்த சுசிலாவிடம்
“கோபப் படாதீங்க அக்கா ….நானே கூப்பிடறேன் ..”
மூக்கு முட்டக் குடித்தவனுக்கு மொத்த போதையும் ஒரே நொடியில் இறங்கினாற் போல் சற்று முன் சத்யாவின் கண்களில்
தோன்றிய இன்பக் கனவு, கற்பனை எல்லாம் அரை நொடியில் தவிடு பொடி ஆயின ..
ஒப்பனை அறையை விட்டு வெளியே வந்து
“அம்மா!.. அம்மா….!” சத்தம் போட்டு கூப்பிட்டாள்..
சத்யாவின்
குரல் கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த சத்யாவின் அம்மா…
“என்ன சத்யா … ரெடியா ?
… கொஞ்ச நேரத்தில ரிசெப்ஷனுக்கு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடு வாங்க …
ஒன்னோட மேக்-அப் முடிஞ்சுதா இல்லயா ?
“நீ ஒண்ணும்மா ! …நிலைமை தெரியாம! இங்க வேற ஒரு பஞ்சாயத்து ஓடிகிட்டுருக்கு .. ..
சுசிலா அக்கா உனக்காக மேக் அப் ரூமில வெயிட் பன்றாங்க… ரொம்ப கோவமா இருக்காங்க …
உன்கிட்ட உடனே பேசணுமாம் “
… ஒப்பனை அறை உள்ளே மெல்ல எட்டி –
பார்த்த சத்யாவின் அம்மா கதவைத் திறந்து நாற்காலியில் கோபமாக உட்கார்ந்து
நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த சுசீலாவைப் பார்த்து ….
“என்னம்மா சுசிலா ..? ஏதோ பேசணுமனு சொன்னியாமே ?
சொல்லி விட்டிருந்தா நானே உன் ரூமுக்கு வந்து இருப்பேனே … “
……உபசரித்தவளை ஒரு கேலிப் பார்வையோடு எதிர் கொண்டாள் சுசிலா.
” உபசாரத்துக்கு ஒண்ணும் கொறைச்ச இல்ல …ஒரு குடும்ப ரகசியத்தை மறைச்சுட்டு
மன சாட்சிங்கறது மருந்துக்கு கூட இல்லாம ‘ஹாய்’யா கல்யாணத்த நடத்தற நீங்க
என் பேரச் சொல்லாதிங்க .. காதுல எதையோ காய்ச்சி ஊத்தினா மாதிரி இருக்கு”
இருநூறு சத வீத வெறுப்பு வார்த்தைகளில் தெரிந்தது .. இல்லை …தெறித்தது !
“ஏம்மா அப்படி சொல்ற? நான் எந்த ரஹஸ்யத்தை மறைச்சேன்?
ஒன் பேர சொல்லக் கூடாதுன்னு நீ வெறுக்கற அளவுக்கு அப்படி என்ன தப்பு நடந்து போச்சு … ?
சத்யா ஏதும் மரியாதை குறைவா பேசிட்டாளோ?
” நான் குடும்ப ரஹஸ்யம்னு சொல்லியும் உங்களுக்கு புரியல இல்ல ?
சரி …விடுங்க ..எதுக்கு வள வளன்னு பேசிகிட்டு ?
எங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கலே ..
உடனடியா ஏற்பாடு எல்லாத்தையும் நிப்பாட்டுங்க …
இந்தக் கல்யாணம் நடக்காது …”
“இப்படிச் சொன்னா எப்படி ?
விஷயம் என்னன்னு தெரிஞ்சாத்தானே
ஏதாவது பண்ண முடியும் ? ..”
தப்பான உறவாப் போச்சு…. …
அதனால நிப்பாட்டியே தீர ணும்.
தன் நடுத்தர வயதுக்கு ஏற்ப சுசிலா சிறிதும்
யோசிக்காமல் ஒரு அவசர முடிவு எடுத்தாலும் சத்யாவின் அம்மா நிதானம் தவறாமல் …
“கொஞ்சம் மெதுவா பேசும்மா ! பிரச்னை என்னன்னு தெளிவா சொல்லு.
ஒன்னை விட வயசில மூத்தவங்கற முறையிலே சொல்றேன்…
… .. பக்தியோட சுவாமிக்கு நேர்ந்துக்கிட்டு….
பல கஷ்டத்துக்கு நடுவுல என் புருஷன் துணை இல்லாம இந்தக் கல்யாண ஏற்பாட்டை பண்ணியிருக்கேன் …
.இதுவரை நல்லாத்தான் போய்கிட்டிருந்தது….
இப்பொ திடு திப்புனு எல்லாத்தையும் நிப்பாட்ட சொல்றது எந்த வகையில நியாயம் …?
“நியாய அநியாயம் பாக்கறதுக்கு இப்போ நேரமில்லை …
கொஞ்சம் புரிஞ்சுகிட்டு நா சொன்னதை உடனே செய்யுங்க.. ….
அதான் ்நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது ..”
சத்யாவின் அம்மா இப்போது சற்று அதிகமாகவே எரிச்சல் ஆனாள்
“அட…..!என்ன பொம்பளம்மா நீ ? நான் இவ்வளவு எடுத்து
சொல்லியும் கெஞ்சியும் உன் இந்த முடிவுக்கான காரணத்தை
சொல்லாம மேல மேல பேசிகிட்டு போறே …. ..
இதெல்லாம் நல்லா இல்ல …. “
“ஆமாம்… நீங்க செஞ்சது எனக்கு நல்லா இல்லாதனால் தான் கல்யாணத்த நிப்பாட்டச் சொல்றேன்……
வேண்டாம் …அடிப்படை காரணம் தெரிஞ்சா துடிச்சு போயுடுவீங்க துடிச்சு! ….”
“பரவாயில்லை …… எதுவாயிருந்தாலும் சொல்லு …. “
“மாப்பிள்ளையும் ஒங்க பொண்ணும் அண்ணன் – தங்கை முறையாவுது .. எப்படி ..
உங்களுக்கு பரவாயில்லையா?
அதிர்ச்சியானாள் சத்யாவின் தாயார்..
இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல்
“ஏம்மா … .?..ஜாதக பொருத்தம் பாத்து எங்க கோத்திரம் என்னன்னு தெரிஞ்சு கிட்டுத் தானே
கல்யாணத்துக்கு சம்மதிச்சிங்க ? நாம ரெண்டு குடும்பமும் வெவ்வேற
கோத்திரம் தானே?…..அப்புறம் எப்படி உன் தம்பியும் என்
பொண்ணும் அண்ணன் தங்கையாக முடியும் ? …
நல்ல வேளை…. இங்க நம்மைத் தவிற யாரும் இல்லை .
.என் கிட்ட சொன்னா மாதிரி இதை
வெளியே யார் கிட்டயும் சொல்லிடாதே “
சத்யாவின் அம்மாவும் சளைக்காமல் சரிக்கு சரி பதில் விவாதம் செய்தாள்
“அப்படின்னா நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க …
சத்யா உங்க ஒரே பொண்ணா?
“ஆமாம் …”
“நெஞ்சை தொட்டு சொல்லுங்க ..”
“கற்பூரம் அணைச்சே சொல்வேன் …
எனக்கு அவ ஒரு பெண் தான் …
பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை”
“நீங்க பொய் சொன்னதா நான் சொல்லவே இல்லே..
ஆனா ஒரு பெரிய உண்மைய என்கிட்டே இருந்து மறைச்சுட்டிங்க.. சரி !
நான் இன்னும் புரியறா மாதிரி கேக்கறேன்.
சத்யா பிறக்கறதுக்கு முன்னே
உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது உன்மையா ?
என்று சுசிலா கேட்டுக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தாள் சத்யாவின் அம்மா.

3

சுசிலா சமயோசிதமாய் அருகில்
சொம்பிலிருந்த பன்னீரை சத்யாவின் அம்மா முகத்தில்
தெளிக்க மெல்ல கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்து
விட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள் .

4

சுசிலா, …நான் உண்மையை சொல்லிடறேன்.
எனக்கு மூத்ததா ஒரு பையன் பிறந்தது உண்மைதான்.
அப்போ அவன் ஒரு மாதக் குழந்தை ..
தள தளன்னு அமுல் பேபி மாதிரி நல்லா வெயிட்டா இருப்பான்…
அன்னைக்கு நான், என் வீட்டுக்கார் என் குழந்தை மூணு
பேரும் மதுரை மீனாட்சியம்மனை தரிசிக்க கியூவில் காத்திருந்தோம்…
..ரொம்ப பெரிய பாம்பு வளைவு கியூ …அதுல கடைசியில நின்னு கிட்டிருந்தோம் நாங்க ரெண்டு பேரும் குழந்தையை எங்களுக்குள்ள மாத்தி மாத்தி கையில் வச்சு கிட்டிருந்தோம் ..ஒரு கட்டத்தில குழந்தை தூங்கிடவே அக்கம் பக்கத்துல ஆலேசனை சொல்ல சன்னதி கர்ப்ப கிரகத்திற்கு கொஞ்சம் வெளியே இருந்த சின்ன மேடையில ஒரு துண்டை போட்டு படுக்க வச்சிட்டு பக்கத்தில இருந் தவங்க கிட்ட எழுந்து அழுதான்னா எங்களை கூப்பிடச் சொல்லிட்டு கியூவில் எங்க இடத்தில் வந்து நின்னு கிட்டிருந்தோம் ..

கியூ கொஞ்சம் நகர்ந்தது

திடீர்னு ஒரு சலசலப்பு அஞ்சாறு போலீஸ் காரங்க அங்கே வந்து கோவிலுக்குள்ள குண்டு வச்சிருக்கறதா தகவல் கெடைச்சதாகவும் உடனடியா எங்களை அந்த இடத்தை காலி பண்ணனும்னும் சொன்னாங்க .. உடனே எங்க எல்லோர் கிட்டயும் திடீர் பதட்டம்….
உடனே கியூ வெளியே போகறத்துக்கு வசதியா பின் நோக்கி திரும்பிடுச்சி…
நாங்க ரெண்டு பக்கமும் போக முடியாம நடுவில மாட்டி கிட்டோம் .. அப்படியும் ரொம்ப கஷ்டப் பட்டு
கர்ப்பகிரஹ வாசலுக்கு வந்து பாத்தோம் அங்கே குழந்தையைக் காணோம் …
அக்கம் பக்கத்தில இருந்தவங்க எல்லாரும் கலைஞ்சு போயிருந்தாங்க..
தேவஸ்தான ஆபிஸ்ல அவனை யாரேனும் ஒப்படைச்சிருப் பங்களோன்னு ஊகம்
பண்ணி அங்கேயும் விசாரிச்சோம் …எங்களுக்கு பொறுப்பில்லாதவங்க ங்கிற பட்டம் கிடைச்சதுதான் மிச்சம்
“சரி ..வச்சதா சொன்ன குண்டு வெடிச்சதா இல்லையா? ..”
“இல்ல ..அது ஏதோ போலித் தகவலாம் ..
அதுக்கப்புறம் பித்து பிடிச்ச்சா ப்போல் கோவில் பூராவும் குழந்தையைத்
தேடிட்டு ஒடம்பு மனசு ரெண்டும் சோர்ந்து போய் பக்கத்து
போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைண்ட் குடுத்துட்டு
கனத்த மனசோட வீடு வந்து சேர்ந்தோம்.
அதுக்கப்புறம் அடிக்கடி நடையா நடந்து
போலீஸ்ல விசாரிச்சோம் …குழந்தைய கண்டு பிடிக்க
முடியலன்னு சொல்லிட்டாங்க … அது மட்டுமில்ல ..
ஒரு நாள் போலீஸ் எங்க வீட்டுக்கே வந்து தொலைந்த
குழந்தை கிடைக்கலங்கற தகவல எழுத்து மூலம் சொல்லிட்டு
எங்க கிட்ட ஒப்புதல் கை எழுத்து வாங்கிட்டு அந்த கம்பளைண்ட்
பைல கிளோஸ் பண்ணிட்டாங்க ..
நாள் ஆக ஆக அந்த சோகத்தை நாங்களும் மறக்க ஆரம்பிச்சோம் …
அப்படியே ஒரு
ஏழு வருஷம் ஆச்சு … அதற்கப்புறம் எங்களுக்கு குழந்தை பாக்கியமே
இல்லே எங்க வெறுமையைக் கொல்ல குழந்தைகள் காப்பகத்தில் போய் ஒரு குழந்தையை
தத்து எடுத்து வளர்த்து வந்தோம் ..அந்த குழந்தைதான் சத்யா ..

இதுதாம்மா .. ..நடந்தது …

இப்போ சொல்லு…. எப்போவோ நடந்த இந்த சம்பவத்துக்கும் நீ சொன்ன அண்ணன் தங்கை முறைக்கும்
என்ன சம்பந்தம் ..? நான் ஏன் கல்யாணத்தை நிப்பாட்டனும் ? சத்யா நாங்க தத்து எடுத்து
வளர்த்தோங்கற உண்மையை ஒன் கிட்ட மறைச்சது தப்புத்தான்.
அதுக்காக கல்யாணத்தையே நிப்பாட்டணுமா ?

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுசிலா …
சொல்றேன் …ஆனா நீங்க கொஞ்சம் பொறுமையா
நான் சொல்றதயும் கேட்டு என்னையும் மன்னிக்கணும் ..
அன்னிக்கு நீங்க கோவில்ல தவற விட்டதா சொன்ன
அந்த ஆண் குழந்தைதான் நாளைக்கு உங்க பொண்ண கல்யாணம்
பண்ணிக்க போற மாப்பிள்ளை… அதாவது என் தம்பி ..
எப்படி ? இது என்ன புதுக் கதை?
கொஞ்சம் பொறுங்க விவரமா சொல்றேன் ..
சமீபத்துல இறந்து போன எங்க அப்பாவுக்கு போலீஸ் உத்யோகம் ..
அப்போ எனக்கு அஞ்சு வயசு ..
என்னோட அம்மா இரண்டாவதா பிள்ளை உண்டாகி இருந்தாள் . டெலிவெரி கொஞ்சம் சிக்கல் ஆகி ஆண் குழந்தை ஒண்ணு இறந்தே பிறந்தது ..இந்த விஷயத்தை மயக்கமா இருந்த என் அம்மா கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சு கிட்டிருந்த போது அப்பாவுக்கு ஒரு போன் கால் வந்தது ..அதில் மிகவும் அவசர கோவில் டியூட்டியாய் மீனாட்சியம்மன் சன்னதிக்கு வரும்படி சொல்லியிருந்தார்கள்.அப்பா அங்கே போன போது ஒரு கைக் குழந்தை கர்ப்ப கிரகத்துக்கு வெளியே அழுது கிட்டிருந்ததை பாத்தார்… உடனே ஒரு கான்ஸ்டபளிடம் கோவில் நிலைமையை ஒரு ஐந்து நிமிடம் சமாளிக்கச் சொல்லிவிட்டு…. அம்மாவுக்கு மயக்கம் தெளிந்த பிறகு குழந்தையை அம்மாவுக்கு பிறந்ததாக கொடுத்து நம்ப வைத்து விட்டார் …இந்த ரகசியத்தை சாகும் தருவாயில் என்னிடம் சொன்னார்.
அவன் கையில் இருக்கும் அதே மாதிரி ஆறு விரல்களை
இப்போ நான் சத்யாவின் கையில் பாத்தேன் உடனே புரிஞ்சு கிட்டேன் ..
வேற சாட்சியே வேண்டாம் .. சதிஷ் சத்யாவுக்கு அண்ணன் முறைதான் ..
என்றாள் சுசிலா உறுதியுடன் ..
“அங்க தான் நீ தப்பு பண்ணிட்ட …அவசரப் பட்டு வித்தியாசமான
விரல் ஒத்துமையை வச்சு ஒரு முடிவுக்கு வந்துட்ட …ஆறு விரலோட பிறந்தது சதீஷின் குத்தமும் இல்ல ..
ஆறு விரல் கொண்ட சத்யாவை தத்து எடுத்தது எங்க தப்பும் இல்ல ..இந்த விரல் விஷயம் ஒரு விபத்து போல் அமைந்தது .
சுசிலா…. ஆறு விரல் ஒத்துமை இருக்கறதாலயே ரெண்டு பேரும் ரத்த வழி அண்ணன் தங்கை ஆகிட முடியாது ..
அதனால இந்தக் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கலாம் … நடக்கும் ..நான் நடத்துவேன்
தன் கோபம் எல்லாம் முழுமையா தணிந்த சுசிலா
“உங்க கிட்டே இருந்து குழந்தை உண்மையை வர வழைக்க நெனைச்சு அந்த
வேகத்தில கொஞ்சம் மொறட்டுத் தனமா நடந்துக்கிட்டேன் ..என்னை மன்னிச்சுடுங்க ..
அப்போ …எல்லோரும் ரிசெப்ஷன் அட்டெண்ட் பண்ண உடனே மண மேடைக்கு கிளம்புங்க..
சத்யா !என்ன பாத்துகிட்டு நிக்கற? சந்தோஷமா ரிசெப்ஷனுக்கு புறப்படு”
என்ற சுசீலாவைப் பார்த்து எப்படியெல்லாம் தன்னை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாத்திக்கிறா இந்த சுசிலா என்று அசையாமல்
சிலையாய் நின்றனர் சத்யாவும் அவள் அம்மாவும். .