வண்ணதாசன் கவிதை

அவர் வேலை பார்த்த
பள்ளிக்கூடம் வழியாகத்தான்
அருணாசலம் வாத்தியாரைத்
தூக்கிக்கொண்டு போனார்கள்.
காரை பெயர்ந்த
கரும்பலகைக்கு உள்ளிருந்து
எட்டிப் பார்த்தன
அகர முதல எழுத்தெல்லாம்.
‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’
ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்
தப்பிருக்கிறதா எனக் கவனிக்க
தலை சற்று அசைந்து
சாய்ந்தது போல் இருந்தது.
‘ உருவாய் அருவாய் …’
உதடசைத்து அவர் பாடுவதற்குள்
திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்தது
தெருவெல்லாம் பூ உதிர்த்த
அவருடைய தேர்.