சுகன்யா சம்பத்குமார்/நன்றியுணர்வு

கோகுலின் பள்ளியில் அன்று ஓவியப் போட்டி .எல்லோரும் நல்ல நல்ல யோசனைகளுடன் வந்திருந்தனர் .சிறு குழந்தை தானே ,முதலாம் வகுப்பு படிக்கும் கோகுலுக்கு என்ன வரைவது என்று தெரியவில்லை , யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று யோசனை வரவே தான் நினைத்திருந்த ஒரு படத்தை வரைந்து முடித்தான் .அவனுக்குள் ஒரு நிம்மதி வரைந்த பேப்பரை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு வீரநடை போட்டுக்கொண்டு வீடு திரும்பினான் , ஆனால் அவன் நண்பர்களோ அவனை வெகுவாக கிண்டலடித்தனர் .”என்னடா கோகுல் , என்னத்த வரைந்து வைத்திருக்கிறாய் , உனக்குக் கண்டிப்பாகப் பரிசு கிடைக்காது “ என்று கூறினர் .அவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை , வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் எப்பொழுதும் போல் தன் பள்ளியில் நடந்தவற்றைக் கூறிவிட்டுத் தான் எதைப் பற்றி வரைந்தோம் என்பதையும் கூறினான் .அவன் அம்மா அவன் நெற்றியில் முத்தமிட்டாள் . இரண்டு நாள் கழித்து வரைதல் போட்டிக்கான முடிவுகள் தீர்மானிக்கப் பட்டு ஆசிரியர்களுக்குள் அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது . அப்பொழுது கோகுலின் நண்பர்கள் சிலர் ஆசிரியர்கள் அறை வழியாகச் செல்லும்போது , கோகுலின் ஓவியத்திற்கு மதிப்பெண் போடவில்லை என்றும் அவனுக்குப் பரிசு கிடைக்கப் போவதில்லை என்றும் கூறினார்கள் .குழந்தை தானே கொஞ்சம் வருத்தப்பட்டான் ,அதையே நினைத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லும்போது அவனை அறியாமல் கீழே விழுந்து விட்டான் . சட்டென்று அவனை அந்த வழியாக வந்த அவனுடைய ஓவிய ஆசிரியர் வந்து தூக்கி விட்டு பிறகு அவனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் . கோகுலை அவன் அம்மாவிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பும்போது ஒரு புகைப்படத்தைப் பார்த்தார் .பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டார் . அடுத்த நாள் காலை ஓவியப் போட்டி முடிவுகளை மொத்த பள்ளியின் முன்பு வாசித்தனர் . கோகுலின் ஓவிய ஆசிரியர் மல்லிகா தான் ,அந்த பள்ளியிலேயே முதன்மை ஓவிய ஆசிரியர் என்பதாலும் அவருக்கு அதே பள்ளியில் நிறைய வருட அனுபவம் இருப்பதாலும் அவர் பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் .அதே போல் அன்று அவர் மைக்கை பிடித்து ,”குழந்தைகள் எல்லோரும் மிக நன்றாக வரைந்தனர் , எனக்கு ஒரு வேண்டுகோள் ,தேர்ச்சி பெற்ற குழந்தைகள் ,அவர்கள் ஓவியத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன் “என்றார் .குழந்தைகளுக்கு மேலும் உற்சாகமாக இருந்தனர் .கோகுல் மட்டும் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்திருந்தான் .எப்படியும் அவனுக்குப் பரிசு இல்லை என்பதால் அவன் பெரிதாக இதில் நாட்டம் காட்டவில்லை . மல்லிகா ஆறுதல் பரிசு முதல் வாசிக்க ஆரம்பித்தார் .பெரிய வகுப்புகளுக்கான பரிசுகளும் அந்த அந்த குழந்தைகளின் விளக்கமும் முடிந்தது .இறுதியாக முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான பரிசு விவரத்தை வாசிக்க ஆரம்பித்தார் .அதே போல் ஆறுதல் பரிசு ,மூன்றாம் பரிசு ,இரண்டாம் பரிசு என்று வாசித்து விட்டு , முதல் பரிசை வாசித்தார் .கோகுலால் துளி கூட நம்ப முடியவில்லை .ஏன் மற்ற ஆசிரியர்களால் கூட நம்ப முடியவில்லை ,அப்பொழுது மற்ற ஆசிரியர்கள் “டீச்சர் , முதல் பரிசு வேற ஓர் மாணவனுக்கு தானே கொடுத்தோம் , ஏன் கோகுலுக்கு அளித்தீர்கள் ,என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா “? என்று கேட்டனர் .அதற்கு மல்லிகா டீச்சர் ,”உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பதில் கூறுகிறேன் , அதற்கு முன்பு கோகுல் அவன் விளக்கத்தைக் கொடுக்கட்டும் “என்றார் .கோகுல் மைக்குக்கு அருகில் வந்தான் .பேசத் தொடங்கினான் .”அனைவருக்கும் வணக்கம் ,நான் வரைந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கொடுத்ததற்கு நன்றி , நான் ஓவியமாக என் அப்பாவைதான் வரைந்தேன் . அவர் ஒரு ராணுவ வீரர் , நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை , புகைப்படத்தில் தான் பார்த்துள்ளேன் , நான் பிறக்கும் முன்னரே அவர் இறந்து விட்டதாக என் அம்மா கூறினார் , அவர் மிகவும் அழகாக இருப்பார் .எனக்கு ரொம்ப நாளாக அவர் உருவத்தை வரைய வேண்டும் என்ற ஆசை , அதனால் ஓவியப் போட்டியில் வரைந்தேன் “ என்றான் . மல்லிகா டீச்சர் , அவன் பேசி முடித்ததும் ,மைக்கை வாங்கி பேசினார் .முதலில் முதலாம் பரிசு வேறு ஒரு மாணவனுக்குக் கொடுக்கப்பட்டது , இப்பொழுது இரண்டு முதல் பரிசுகளை அறிவிக்கிறேன் , ஏற்கனவே தன் திறமையால் பரிசு வாங்கிய மாணவனும் சோர்வடைந்து விடக் கூடாது , அதுமட்டுமின்றி இப்பொழுது கோகுலைத் தேர்வு செய்ததற்கான என் காரணத்தைக் கூறுகிறேன் , என்றும் அவன் அப்பாவினால் வெற்றியும் அன்று கீழே விழுந்த கோகுலை அவன் வீட்டில் சென்று விடப் போகும்போது தான் அவன் அப்பா அம்மாவின் திருமண புகைப்படத்தையும் ,அருகில் மாலை போட்டிருந்த படி அவன் அப்பாவின் ராணுவ உடை போட்ட புகைப்படத்தையும் தேசியக் கொடியையும் அருகில் பார்த்தேன் ,அதன் அருகில் இந்த ஓவியத்தைப் போன்றே இன்னொரு இதே ஓவியத்தையும் அவன் அப்பா புகைப்படத்திற்குக் கீழே பார்த்தேன் ,அப்பொழுது தான் புரிந்தது , கோகுல் அவன் அப்பாவை வரைந்துள்ளான் என்று .இந்த விஷயம் தெரியாமல் இருந்திருந்தால் கூட , இவன் ஓவியம் முதல் பரிசு பெற்றிருக்குமா என்று தெரியாது , ஆனால் நாட்டிற்காக ஒருவர் தன் குடும்பத்தை விட்டு எங்கோ சென்று , போரில் உயிர் துறந்துள்ளார் . அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பணம் காசு என்பது இரண்டாம் பட்சம் தான் .ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு நாம் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளோம் , இந்த ஓவியம் பூரணமாகவோ அழகாகவோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் அப்பாவை இழந்த ,அதுவும் ராணுவ வீரரான அப்பாவை இழந்த ஒரு மகனுக்கு
மரியாதையும் தான் கிட்டும் என்பதை உணர்த்தவே இந்த பரிசை அவனுக்குக் கொடுக்கிறேன் “ என்றார் . இதை மற்ற ஆசிரியர்களும் ஆமோதித்தனர் . அரங்கமே கோகுலுக்கும் அவன் அப்பாவிற்கும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.பரிசை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்ற கோகுல் அவன் அப்பா படத்திற்கு முன்பு இந்த பரிசை வைத்துவிட்டு அவன் அப்பா புகைப்படத்திற்கு முத்தமிட்டான் …..