சுஜாதாவின் நினைவுகளுடன் ஒரு மாலை…/ஜெ.பாஸ்கரன்

71 வது ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்வில் பேராசிரியர் வ.வே.சு. அவர்கள், ‘சுஜாதாவின் படைப்புகளில் வளர்ந்த தமிழ் இலக்கியம்’ பற்றிப் பேசினார். உடன் உரையாடியவர், சுஜாதாவுடன் நெருங்கிப் பழகிய, அவரது பரம ரசிகர், திரு ரகுநாதன் ஜெயராமன்.
சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில் எப்படியெல்லாம் எடுத்தாண்டுள்ளார் என்பதனையும் வ.வே.சு. அவர்களும், ரகுநாதன் அவர்களும் தக்க ஆதாரங்களுடன் நிறுவினார்கள்! புதிய எழுத்தாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், அறிமுக எழுத்தாளர்களை, அதிலும் குறிப்பாக கவிஞர்களை, ஜனரஞ்சக பத்திரிகைகளில் குறிப்பிட்டு ஊக்குவித்தல், உலகின் பல பாகங்களிலிருந்தும் புதியனவற்றை தமிழுக்கு அறிமுகம் செய்தல் எனப் பல கோணங்களில் தமிழை வளப்படுத்தியவகையில், தமிழ் வளர்த்த சான்றோர்களில் சுஜாதாவும் இருக்கிறார் என்பதை சுவாரஸ்யமாகவும், அழுத்தமாகவும் நிரூபித்த ஒரு நல்ல நிகழ்வாக அமைந்திருந்தது. வ.வே.சு. அவர்களுக்கும், ரகுநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!
நிகழ்விலிருந்து சில துளிகள்:
1953 ல் (அவருக்கு வயது 18) ‘ஹிம்சை’ எனற அவரது முதல் கதை சிவாஜி பத்திரிகையில் வெளியாகிறது. அதுபற்றி சுஜாதா: “கதை வெளி வந்த போது திருச்சி நகரமே அலம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்துவிட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”.
தனித்துத் தெரிய அவர் உரைநடையில் செய்த மாற்றங்கள் – குறைந்த நீளமுடைய சொற்றொடர்கள் (brevity), உடனே வாசகனை உள்ளே இழுத்துப்போடும் துவக்கம், பாயும் நடை, யதார்த்தமான விவரனைகள், ஒரு சில வார்த்தைகளில் பாத்திரம், களம் ஆகியவற்றின் குணம் சொல்லுதல், அருகில் நடந்துகொண்டே பேசுவது போல கதை சொல்லும் பாணி என உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார்!
சிறுகதை பற்றி – உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீசுக்குக் கூட, உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின் சிறுகதை என்பதுதான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம். (சுஜாதா!)
எழுதுவதில் இரண்டு முக்கியமான அம்சங்களைக் கடைபிடித்தார் சுஜாதா.

  1. சுயபரிசீலனை – எழுதிவிட்டுப் படித்துப் பார்க்கும்போது சரியில்லை என்றால், கிழித்துப்போட நான் தயங்கியதே இல்லை. முதல் வாசகனான என்னை மீறி எந்தக் கதையும் சென்றதில்லை.
  2. மொழியில் ஈடுபாடு. தமிழை ஒழுங்காக அறிந்துகொண்டு, பின்னர் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி சில சுதந்திரங்களை எடுத்துக்கொண்டது.
    ஒரு லட்சம் புத்தகங்கள் கதையில் எரிந்த புத்தகங்களில் எத்தனை வார்த்தைகள் எரிந்து போயின என்று வருந்துகிறார் சுஜாதா.
    ‘நகரம்’ சிறுகதையில் மதுரையை சுஜாதா விவரிப்பது, யதார்த்தத்துடன், எள்ளலின் உச்சி. “மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்’ அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. (என்ன கவித்துவமான வரி – வ.வே.சு). சின்னப் பையன்கள் ‘டெட்டனஸ்’ கவலையின்றி மண்ணில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசீயம் கலந்த டீசல் புகை பரப்பிக்கொண்டு இருந்தன. விறைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோட்டீன் போதா போலீஸ்காரர்கள் ‘இங்கிட்டும், அங்கிட்டும்’ செல்லும் வாகன மானிடப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவித ப்ரெளனியன் இயக்கம் போல் இருந்தது (பெளதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்). கதர் சட்டை அணிந்த மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகை, பாலம், மதுரை!
    ‘நச்சுப்பொய்கை’ கதையில் எல்லாமறிந்த தருமர் யட்சனிடம் கூறும் கடைசி வரிகளை வாசிக்கும் எவரும் சுஜாதாவின் அறிவியல், நகைச்சுவை, கதை சொல்லும் பாணி எல்லாவற்றையும் ஒருங்கே அனுபவிக்க முடியும்! அசரீரி, ‘இறந்தவர்களில் நீ யாரை விரும்புகிறாயோ அவன் பிழைப்பான்’ என்கிறது. அதற்கு தருமன், “நான் எல்லாம் அறிவேன். எதிர்கால விஞ்ஞானமும், ரசாயனமும் எனக்கு அத்துப்படி. என் சகோதரர்கள் இறக்கவில்லை. மயக்கத்தில் இருக்கிறார்கள். கரைக்கு வந்து நல்ல காற்றை சுவாசித்தால் போதுமானது. மரத்தில் ஒளிந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே, உன் கேள்விகள் சுவார்ஸ்யமாக இருந்தன. நன்றி” என்று சொல்லிவிட்டுத் தன் சகோதரர்களைப் பார்க்கச் சென்றான்.
    கம்ப்யூட்டர் என்று எழுதிக்கொண்டிருந்தவர், கணிப்பொறி என்ற தமிழ்ச் சொல் அறிமுகப்படுத்தவுடன், அதையும் பின்னர் கணினி என்னும் சொல்லையும் பயன்படுத்தினார். Silicon Chip அவர் மொழியில் ‘சிலிகான் சில்’ ஆகியது!
    விஞ்ஞானக் கதை பற்றி: கதையில் விஞ்ஞானம் என்றில்லை. கதை எழுதும் விஞ்ஞானமும் இருக்கிறது! கதைமாந்தரே இல்லாத விஞ்ஞானக் கதை: “நடுக்கடலில் ஒரு காலியான படகில் நடைபெறுவது”!
    “தலைமைச் செயலகம்” மனித மூளைக்கு சுஜாதா வைத்த செல்லப் பெயர்! மூளை எப்படி இருக்கும்? சுஜாதா எழுதுவதைப் பாருங்கள்: “உடைத்துப் பார்த்தால் ஓர் ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும். ஈர அழுக்குக் கலர் கொசகொசப்பு, மூளை”
    ‘குண்டு ரமணி’ சிறுகதையில் பெரியாழ்வார் பாசுரத்தைக் கையாண்டு வாசகர்களை நெகிழ வைத்த இடத்தைப் பற்றி சிலாகித்தார் வ.வே.சு. (வேண்டுவோர் கதையைப் படிக்கலாம். பெரியாழ்வார் பாசுரம் -“வட்ட நடுவே முளைக்கின்ற முத்தே போல்…” தேடிப்பிடித்து வாசித்து மகிழலாம்!).
    இப்படி சுஜாதாவின் பரந்துபட்ட எழுத்துலகத்தைப் பற்றி வ.வே.சு. அவர்களும், ரகுநாதன் அவர்களும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். ரகுனாதன் சுஜாதா மற்றும் குடும்பத்துடன் ஆன தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அரங்கிலிருந்தோரை நெகிழ வைத்தார்.
    கீழாம்பூர், கல்கி ரமணன், இரா முருகன், அல்லயன்ஸ் ஶ்ரீனிவாசன், காத்தாடி, குவிகம் குழுமத்தினர், சுஜாதா வாசகர்கள் இவர்களுடன் திருமதி சுஜாதா – அரங்கம் நிறைய வி.ஐ.பி. க்கள்!
    இனிமையான ஒரு மாலைப் பொழுதாக ஆகிப்போனது – எந்த விருதுக்கும், புகழுக்கும் ஆசைப்படாமல், தனக்குத் தெரிந்த நல்லனவற்றையும், உலக விவகாரங்களைப் பற்றியும், சிலப்பதிகாரம், புறநானூறு, திருக்குறள், ஆழ்வார்கள் பாசுரம் பற்றியும் சுவாரஸ்யமான தமிழில் தமிழினத்திடம் சேர்த்த திருப்தியுடன் வாழ்ந்தவரைத் தமிழ் வளர்த்த சான்றோரில் ஒருவராகக் கருதுவதில் தவறென்ன?
    பி.கு: என் பார்வையில் சுஜாதா:
    நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் வாசகர்களைத் தன் எழுத்துக்களாலும், சிந்தனைகளாலும் கட்டிப்போட்டு வைத்திருந்த பெருமைக்குரியவர் ‘சுஜாதா’ என்னும் எஸ் ரங்கராஜன். எஞ்சினியர் என்றாலும், புதிய சிந்தனைகள், அறிவியல், கம்ப்யூட்டர், தொல்பொருளியல், ஆஸ்ட்ரோபிசிக்ஸ் (விண்மீன்கள், கோள்கள் பற்றிய அறிவியல்), பயோடெக், நரம்பியல், கர்நாடக சங்கீதம், தமிழ் இலக்கியம், சமூகவியல் எனப் பரந்துபட்ட வாசிப்பும், அவற்றை வாசகனுக்குப் புரியும் எளிய மொழியில், தமிழில் கொண்டுவந்த சாதனையாளர். எழுத்தினூடே, விரவியிருக்கும் மெல்லிய நகைச்சுவையும், உலகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து புதிய செய்திகளையும், வெளி இலக்கியங்களையும், அறிவியலையும் அளவாக அலசும் அறிவு ஜீவிதமும், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் பற்றிய தெளிவும், புனைவு வெளியில் அவர் காட்டும் மேதமையும் அவரை, அவரது வாசகர்களின் ‘வாத்தியார்’ ஆக்கியிருக்கின்றன!
    “வாழ்க்கையின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும், முதுகு வலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்! “ – சுஜாதா.