எல்லையைப் பற்றி இரு கவிதைகள்


ஆர் வத்ஸலா

ஜன்னலை சற்றே
திறந்தவுடன்
சட்டென்று
உள்ளே வந்து விட்டாள் கெஞ்சும் பார்வையுடன் கொடியிடையாள்
வெயில்

அதட்ட நினைத்தவன் சும்மா இருந்தேன்
மழைப் பெண்ணை மட்டும் முழு மனதுடனா அனுமதித்தேன்?

தங்கள் இடம்
என் எதிரே
சற்று தொலைவில்தான் என்று
இவர்களுக்கு தெரிந்திருக்கும் வரை
இருந்துவிட்டுப் போகட்டுமே
ஒரு மூலையில்

என்னவளின் இருக்கை
காலியாக காத்திருக்கும்
என்னருகே
எப்படியும்
அவள் வரும் வரை

எல்லை – 2
ஆர் வத்ஸலா

அமர்ந்திருக்கின்றனர் இருவரும்
ஒரே மலையின் மேல்
குளிரில் விறைத்துக் கொண்டு
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டு
பாசமும் காதலும் நிறைந்த
நெஞ்சங்களுடன்

காத்திருக்கின்றனர்
கிராமத்திலிருக்கும் மனைவி
தபால்காரரிடம் வெட்கத்துடன் சொல்லி
காசு கொடுத்து
எழுத வைத்த செய்திகளை
சுமந்து வரும் காகிதங்களுக்காக

தந்தையின் இருமலை பற்றி
தாயின் கவலைகளை பற்றி
மகனின் பள்ளிக்கூட லூட்டியை பற்றி
குட்டி பாப்பாவின் முதல் பேச்சுப் பற்றின
சேதிகளுடன்
பாசத்தின்
எழுதாமல் விட்ட
விரகதாபத்தின் வாசத்தையும்
சுமந்து வரும் காகிதங்களுக்காக

அமர்ந்திருக்கின்றனர் இருவரும்
ஒரே மலையின் மேல்
குளிரில் விறைத்துக் கொண்டு
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டு
பாசமும் காதலும் நிறைந்த
நெஞ்சங்களுடன்

அவரவர் நாட்டின் எல்லைக்குள்

12/11/21 மதியம் 12 மணி