ஆர்க்கே

தலைக்குள்ளிருந்தது
ஒரு சொல்.
புத்தி விட்டு
என்னை விட்டு
அது கிளம்பும் வரை
அதனுள்
உணர்வூறியிருந்தது.
அது வடிவம் மாறும் நேரம்
அதன் வெளியேற்றம்
தடுத்து வைத்திருக்கிறேன்.
அதன் வலி
அதன் ஒளி
அதன் த்வனி
அதன் ஆன்மா
நான் நினைத்ததும்
உணர்ந்ததுமான
அதே மனோநிலையை
அதே நிலையில்
உனக்கும் கடத்துமா
உனக்குள் கிடத்துமா
எனத் தெரியவில்லை.
அது தலைப்பா
துவக்கமா நடுவா முடிவா
உள்ளேஹா வெளியேவா
என்பதும் புரியவில்லை.
உன்னிடம் சொல்லவும்
சொல்லாமல் இருக்கவும்
அதுதான் இருக்கிறது-
இப்போது என்னிடம்!
