இரு கவிதைகள்

அழகியசிங்கர்

  1. நடனம் முடிந்து விட்டது

இப்போது
எல்லாம் சரி ஆகிவிட்டது
மழை நீர்
வற்றி விட்டது
கரெண்ட் வந்துவிட்டதால் தாராளமாகக்
குளிக்க முடிந்தது

மாடிப்படிகளில்
வழுக்கல் கொஞ்சம்
எச்சரிக்கையாக நடந்தால்
சரியாகி விடும்

தபாலில் சேர்க்க
வேண்டிய
தபால்கள் இருக்கின்றன

பிரபஞ்சத்தில் ஒரு நடனம்
ஆடி முடிந்து விட்டது.

2. காற்று அரக்கன்

மழை பெய்து
ஓய்ந்ததால்
பக்கத்து வீடு
காணாமல் போய்விட்டது
அந்த வீட்டில்
இருப்பவர்கள்
திசை மாறிப் போய்விட்டார்கள்
காற்று அரக்கன்
நேற்று எங்களை விட்டுவைத்தான்
சாதாரண நிலைக்கு வர
இன்னும் சில நாட்கள் பிடிக்கும்