நாகேந்திர பாரதி/மூன்றுகவிதைகள்

சனிக்கிழமை மாலை அழகியசிங்கரின் தலைமையில் நடந்த குவிகம் நேரடி கவியரங்கில் வாசித்த எனது மூன்று கவிதைகள்

எல்லாம் கொஞ்ச காலம்தான்

கல்லுச் சிலேட்டும்
சாக்பீஸ் துண்டுமாய்
எழுதிப் பழகிய
ஆரம்பப் பள்ளியின்
ஆட்டமும் பாட்டும்
எல்லாம்
கொஞ்சகாலம்தான்

வேட்டியும் சட்டையும்
போட்டுப் பழகி
விசுக்கென்று நடந்த
உயர்நிலைப் பள்ளியின்
சன்னலும் கதவும்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

ஹார்மோன் சதியால்
கண்கள் தடுமாற
பார்த்து மயங்கித்
தவித்துக் கிடந்த
காதல் பருவமும்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

கல்லூரி வாழ்வும்
ஹாஸ்டெல் வாழ்வும்
சினிமா படிப்பென்றும்
சிதறிக் கிடந்த
கண்ணாடிச் சில்லுகளின்
கவர்ச்சி வெளிச்சமும்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

வெயிலில் அலைந்து
வேர்வையில் குளித்து
படிகள் ஏறிய
வேலைத் தேடலில்
திணறிப் போன
வேதனை நாட்களும்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

இட்லியோ சாதமோ
சாப்பிட்டு முடித்து
பஸ்ஸோ ரெயிலோ
ஓடிப் போய் ஏறி
சரியோ தப்போ
வேலையை முடித்து
வசவோ வாழ்த்தோ
வாங்கித் தேறி
வாழ்ந்த பொழுதுகள்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

பெண்ணோ பிள்ளையோ
பெற்று வளர்த்து
மணமும் முடித்து
வாழ்வை அமைத்து
பேரன் பேத்தி
பார்த்து மகிழ்ந்து
ஓய்வுப் பருவம்
சேரும் நேரம்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

விட்ட கனவெல்லாம்
விரட்டிப் பிடிக்க
கதையும் கவிதையும்
பாட்டும் பேச்சும்
செய்து பழகி
நாட்கள் போக்கி
நகரும் மகிழ்வும்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

இந்த மேடைகளும்
இந்தப் படைப்புகளும்
இந்த நண்பர்களும்
இந்தக் களிப்பும்
எல்லாம்
கொஞ்ச காலம்தான்

அனைத்தும் அடங்கி
ஆவியில் ஒடுங்கி
அமைதியில் நுழைந்து
ஆனந்தம் அடைந்து
ஆண்டவன் திருவடி
அடையும் நேரம்
எல்லாம்
முடிந்த காலம்தான் .

வில்லோடு நிலவு
————

எப்போதும் ஒரு வில்
இருக்கிறது உன்னிடம்

எய்யும் அம்பில் தான்
ஏராள வித்தியாசம்

காதலில் வெற்றி என்றால்
மலராலே அம்பு

கண்ணீரில் மூழ்கி விட்டால்
நெருப்பாலே அம்பு

இரவின் இருட்டுக்குள்
குறி பார்த்து விடுகிறாய்

வில்லின் நாணினை
முறுக்கேற்ற நினைப்போரும்

வில்லின் நாணினை
முறித்து விட நினைப்போரும்

கலந்து கிடக்கின்ற
காதல் இரவிலே

பொழுது விடிகிறது
போதுமென்று போகிறாய்

பார்வை


இரைதேடிப் பறந்து விட்டுத்
திரும்பி வந்து

குஞ்சுகளைக் காணாமல்
திகைக்கும் வாயில் பார்க்கிறேன்

காத்திருந்து பூத்துவிட்டுக்
கழலும் பூவைக்

கண்ணீரால் விடை கொடுக்கும்
செடியின் மூச்சில் பார்க்கிறேன்

நேற்றிருந்த நாய்த்தோழன்
தெருவில் இன்று

காணாமல் போனதற்காய்த்
திகைக்கும் கண்களில் பார்க்கிறேன்

குருவியோ செடியோ
நாயோ இல்லை என் பார்வையில்

நம்பிக்கை உடைந்து போய்ச்
சிதறிப் போன

நண்பர்கள் பலரைப்
பார்க்கிறேன் நான்