
:சுயம்
–
இது நானா?
எனக்குள்ளேயா இச்சக்தி?
என் மூச்சா இச்சூறாவளி!
என் மனதிலா இவ்வானந்தம்!
என்னுள்ளா இப்பயமின்மை?
என் கால்களா ஊன்றிக் கொண்டன?
எனக்கா இச்சிறகுகள்?
எங்கே என் கேள்விகள்?
தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்
எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்?
ஓ! எனக்குத் தெரிந்து விட்டது
என் வாழ்வு இவ்வுலகம் எனக்கு இட்ட பிச்சையில்லை
என் சோற்றில் யார் பெயரும் எழுதப் படவில்லை
நான் ஜீவிக்க சமாதானங்கள் தேவையில்லை
சார்ந்து நின்ற குற்றத்திற்கு
ஆயுள் தண்டனை ஏற்க மாட்டேன்
பெற்ற உதவிகளை திருப்பி விட்டேன்
சகித்த அவமானங்களின் மூலம்
தீர்ந்தது கடன்!
இனி
உழைப்பேன் – ஆணைக்கு உட்படாமல்
சிந்திப்பேன் – தூண்டப்படாமல்
லட்சியம் செய்யேன் – அவமதிக்கும் பரிகசிப்பை
அனுபவிப்பேன் – என் பங்கு இன்பத்தை
என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம்
வெட்குவேன் – தவறும் போது சமாதானங்களை ஏற்காமல்
பெருமிதம் கொள்வேன் – வளரும் போது ஒப்புதலுக்குக் காத்திராமல்
மறவேன் இனி ஒரு போதும்
நான் மானுடம்
நான் தனி
நான் மட்டுமே நான்
“வத்ஸலாவின் தேர்ந்தெடுத்து கவிதைகள் (1991 – 2023)” தொகுப்பு
இரங்கல்
நான் செய்தித்தாள்
வாசித்துக் கொண்டிருந்தேன்
தொலைபேசியில்
ஏதோ ஒரு உறவு
“இன்னி ஹிந்து ஆபிச்சுவரி
பாத்தியா?”
என்றாள்
தயக்கத்துடன்
“இல்லையே” என்றேன்
மருமகனை கூப்பிடச்
சொன்னாள்
கூப்பிட்டேன்
கலவரத்துடன்
இரண்டே வார்த்தைகள்
“எப்போ”
“சரி”
தொலைபேசியை துண்டித்து
உள்ளே போனான்
மகளுடன் திரும்பினான்
மகளின் முகத்தில் பூசி நின்ற
கவலை என் முகத்தில் தெறித்தது
என் அருகில் அமர்ந்து
சொன்னாள்
“அவன்” போய்விட்டானாம்
எப்போதிலிருந்து
அவன்
“அவர்” இல் இருந்து “அவன்”
ஆனான்?
நினைவில்லை
முகம் உள்பட
எதுவும் ஞாபகமில்லை
வருத்தம் கோபம் வருத்தம்
அவன் மேல்
கடவுள் மேல்
இந்த அழகான
சமுதாயத்தின் மேல்
எதுவுமே ஞாபகமில்லை
உழைப்பில்
பாசத்தின் உறுதியில்
எல்லாம் கரைந்து விட்டது
அப்போது ஒரு வயது
குழந்தையாய் மடியில் தூங்கிய மகளையும்
என்னையும்
தவிக்க விட்டு போன பிறகு
கடந்த ஐம்பது ஆண்டுகளில்
ஏதோ ஒரு நாள்
அவன்
“அவர்” இல் இருந்து “அவன்”
ஆகிவிட்டிருந்தான்
இன்று
“அது” ஆகியுள்ளான்
“அப்படியா” என்றேன்
செய்தித்தாளை
விட்ட இடத்திலிருந்து
தொடர்ந்தேன்
“வத்ஸலாவின் தேர்ந்தெடுத்து கவிதைகள் (1991 – 2023)” தொகுப்பு

Arumai