எழுத்தாளர் பொன்னேசன் அவர்களின் சாச்சி/சாந்தி ரஸவாதி

எழுத்தாளர் பொன்னேசன் அவர்களின் ‘சாச்சி’ என்று சிறுகதை குறித்து அழகிய சிங்கர் அவர்கள் 23/2/24 ஏற்பாடு செய்த கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த சோமு காலணிகளை மூலைக்கு ஒன்றாக கழற்றி போட்டு கத்த ஆரம்பித்தான். இன்னைக்கு அந்த பொம்பளை எங்க ஆஃபீஸுக்கே வந்துட்டா. அவன் விட்டுட்டு போய்ட்டானாம் எங்க போனான்னு தெரியாதாம். ஒரே அழுகை. அசிங்கமா போச்சு. அவமானமா போச்சு. அம்மா நினைத்துக் கொண்டாள் எப்போதும் சிடுசிடுப்பு சரியான துர்வாச பரம்பரை என்று

அவன் என்பது அந்த சாச்சா என்றால் சித்தப்பா, ஆனால் அவர்களுடைய ரத்த பந்தம் இல்லை. சோமவின் அப்பா தம்பி மாதிரி என்று கூட்டிக்கொண்டு வந்து குடும்பத்தோடு ஒட்ட வைத்து அவன் அம்மாவும் அவளை மைத்துனனாக ஏற்றுக் கொண்டதால் குழந்தைகளை சாச்சா என்று அழைக்குமாறு கட்டாயப்படுத்தி அவனுக்கு இடத்தை கொடுத்தாகி விட்டது. அவன் பெயர் லோகு. சரியான பிராடு. தன்னை உளவுத்துறை ஏஜென்ட் என்று சொல்லிக்கொண்டு தான் எப்படி நிராயுதபாணியாக குற்றவாளிகளை வளைத்துப் பிடித்த கதை என்று ஒரே உடான்ஸ். கல்யாணத்துக்கு முன் அப்பாவோடு ஒட்டிக்கொண்டது அப்பா குடித்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த போது காப்பாற்றினான் என்ற நன்றி பின் ஒரே அறையை பகிர்ந்து கொண்டு அவருக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரனாக வேலை பார்த்தவன் இப்போது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக ஒண்டிக் கொண்டான் அவ்வப்போது தலைமறைவாக போவான் யாரை ஏமாற்றுவானோ எப்படி பணம் சேர்ப்பானோ. ஒவ்வொரு முறையும் ஒரு கதை சொல்வான்.

இப்போதைய பிரச்சினை அவன் ஒரு இரட்டை நாடி பஞ்சாபி பெண் அவள் மூன்று குழந்தைகள் அவர்களோடு உறவாடுவது அந்தப் பெண்ணுக்கு வர வேண்டிய கிராஜுவேட்டி பணம் எல்லாம் வாங்கி தருவதாக அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று அதையே தன் குடும்பமாக வரித்துக் கொண்டான்.

அப்பா இறந்தபோது ஒரு மாதம் அந்த குழந்தைகள் சாச்சி யுடன் டேரா போட்டு பின்பு அம்மாவின் உறவினர்கள் முகச் சுளிப்பினால் அங்கிருந்து கிளம்பினான். கிளம்பும்போது என் மனசு அண்ணன் வீட்டிலேயே தான் சுத்திக் கொண்டிருக்கும் நான் எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவேன் என்று சொல்லிச் சென்றான்.

அப்பா இருக்கும்போது நடுக்கூடத்தில் விஸ்கி பாட்டில் திறந்து வைத்து குடிப்பான். அம்மா அவனுக்கு உபசாரமாக வெள்ளரிக்காய் சாலட் கொண்டு வந்து கொடுப்பாங்க. குழந்தைகளுக்கு இதெல்லாம் ஒப்புவதில்லை சோமு கௌரி இருவருக்கும்.

நண்பன் ஒருவன் மூலம் கேள்விப்பட்ட செய்தி, இப்பொழுது சாச்சா ஒரு சிந்திப் பெண்ணுடன் குடித்தனம் நடத்துவதாக. அவள் புருஷன் ஓடிப் போய்விட்டதால் அவனுடைய காரில் இருந்து எல்லாவற்றையும் இவன் தான் உபயோகிப்பதாக தகவல்.
இதெல்லாம் தான் சோமுவின் படபடப்புக்கு காரணம். எங்கே போனாலும் எல்லோரும் மானம் போற மாதிரி எதையாவது கேட்டு வைக்கிறார்கள்.

வீட்டில் சோமு பதற்றம் தணிந்து இரவு உணவுக்காக உட்காரும்போது வாசல் கதவை தட்டப்பட்டது ஓயாமல் அடித்த அழைப்பு மணி. சோமு கதவைத் திறந்து பார்த்தான். ரத்தம் முழுவதும் சுண்டி கண்கள் கலங்கி வெளியில் நின்ற அந்தப் பெண்மணி கூட நின்று இருந்த ஒரு பையன் வாய் கடை ஓரத்தில் எச்சில் ஒழுக மன வளர்ச்சி குன்றிய பையன் என்று தெரிந்தது. சோமு எதையாவது சொல்ல வாய் திறக்குமுன் அவன் அம்மா,’குழந்தை சாப்பிட்டானா உள்ளே வா ‘கதை இப்படியே முடிகிறது.

அம்மா போல அப்பா போல அண்ணா போல தங்கை போல இந்த உறவுகள் எதுவுமே சரியாக வராது. நிஜமான ரத்த பந்தம் தான் நமக்கு அவர்களிடம் ஒரு ஈடுபாட்டையும் பாசத்தையும் கொடுக்கும். எல்லை மீறி ப்போகும்போது, ஒழுக்கக்கேடாக நடக்கும் போது திருத்தவோ அவர்களை மற்றவர்களின் ஏச்சுப் பேச்சிலிருந்து காப்பாற்றவோ அவர்களை அப்படியே அங்கீகரிக்கவோ, ரத்த பந்தம் இருந்தால் தான் முடியும். குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் குடும்பத் தலைவி எப்படி இந்த மாதிரி ஒரு மனிதனை சகித்துக் கொண்டாள் கணவருக்காக என்பது கேள்விக்குறி.

எல்லாவற்றையும் விட கடைசியில் மனித நேயம் தான் வெற்றி பெறுகிறது. ‘குழந்தை சாப்பிட்டானா உள்ளே வா’ என்கிற ஒரே வரியில். அதுக்கப்புறம் என்ன நடக்கப் போகிறதோ நமக்கு தெரியாது. ஆனால் அந்த ஒரு வரி நம்மை கட்டிப் போடுகிறது. மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.