
வசந்த தீபன்
கடல் கொந்தளிக்கிறது
கவிதையில் ஏறி பயணிக்கிறேன்
கரை காணுவதற்குள்
நான் மூழ்கிப் போகலாம்
பறவையின் நிழல்
நிலமெங்கும் படருகிறது
முட்டையிலிருந்து வெளி வந்த புழுக்களாய் ஜனங்கள்
பறவையை சுட்டு வீழ்த்த கவிதை செய்து கொண்டிருக்கிறேன்
காற்றில் பறந்து வரும்
ஒரு மல்லிகைப் பூ
ஒற்றையடிப் பாதை
மூடு பனி
குதித்தாடுகிறது சிற்றகல்
குலைந்தோடுகிறது இருள்
மனசெல்லாம் வெளிச்சம்
வானவில்லில் கண்கள் விழிக்கின்றன
வண்ணப்பூக்களில்
இதயங்கள் துடிக்கின்றன
வண்ணத்துப்பூச்சியின் முதுகில் மின்மினி பயணிக்கிறது
நட்சத்திரங்கள் தொலைவில் மின்னுகின்றன
ஆசைகள் நெஞ்சுக்குள்
சுற்றித் திரிகின்றன
கல் கரைந்து கொண்டிருக்கிறது
நதியின் புன்னகை
கரையோர புற்களின் குதூகலம்
நறுமணம் கமழும் தனிமை
பூக்களைக் கொளுத்தியது
கொடிகளை எரித்தது
வெயிலின் உக்கிரம்
நானே நல்ல மேய்ப்பன்
நானே தப்பி வந்த ஆடு
எனக்கு நானே மேய்ப்பன்
சீட்டு எடுத்தது கிளி
கிடைத்தது அதற்கு நெல்மணி
பிரித்த சீட்டுள் நரகம்
நாக்குத் துருத்திய காளி
அரிவாள் ஏந்தி நிறை போதை பூசாரி
தலை உலுக்காமல் நடுங்கும் ஆடு
கண்ணீர் கறையுள் தோன்றி மறையும்
நெஞ்சருக்கும் சித்திரங்கள்
