சுகன்யா சம்பத்குமார்/பூப்படைதல்

ரேகா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் , அப்பொழுது அவளின் 13 வயது மகள் அவந்திகா அவர்கள் படுக்கையறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள் .பரதநாட்டியம் வகுப்பு செல்ல வேண்டியவள் இங்கே என்ன செய்கிறாள் என்ற குழப்பத்துடன் உள்ளே நுழைந்தாள் ரேகா . அவந்திகாவின் கலைந்த முடி ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்தது போல ஒரு உள்ளுணர்வு , கை எல்லாம் ஒரே நடுக்கம் , ரேகாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள் அவந்திகா ,பயத்தில் அழ ஆரம்பித்து விட்டாள் அவளை உட்கார வைத்து “என்ன ஆயிற்று தங்கம் “ என்று கேட்கும்போது தான் உணர்ந்தாள் அவந்திகா பூப்படைந்து விட்டாள் என்று .அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை , உடனே அவள் கணவருக்கும் அவள் 15 வயது மகன் நரேஷுக்கும் தகவல் சொல்லிவிட்டு உள்ளே படுத்திருந்த தன் மாமியாரிடமும் கூறினாள் .அவள் மாமியார் பங்கஜம் “அப்பாடா , நல்ல படியாகப் பெரிய மனுஷி ஆகிவிட்டாள் , இங்கே பாரு அவந்திகா , இனி தான் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , வெளியில் எங்கும் தனியாகச் செல்லாதே , வீடு விட்டால் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் விட்டால் வீடு , உன் கராத்தே வகுப்பு சிலம்பம் வகுப்பு எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அந்த நேரத்தில் வீட்டு வேலை செய்யக் கற்றுக்கொள் , உன் அத்தை மகள் அர்ச்சனாவைப் பார் , அழகாகக் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் என் மகள் அவளுக்குத் திருமணம் செய்து முடித்துவிட்டாள் ,இப்பொழுது அவள் மிகவும் சந்தோசமாக இருக்கிறாள் “ என்றாள் . இது அனைத்தையும் கேட்டுவிட்டு அவந்திகா அழவே ஆரம்பித்துவிட்டாள் , “அம்மா , இன்னும் ஒரு வாரத்தில் , தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெறுகிறது , என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள் ,அதற்கு நீ என்னை அனுப்ப மாட்டியா ?? என்று கேட்டாள் .எல்லாவற்றையும் கேட்ட பின் ரேகா பேச ஆரம்பித்தாள் “அத்தை என்ன கூறுகிறீர்கள் , நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் , முதலில் பெரியவர்கள் நாம் குழந்தையை அச்சப்படுத்தி பேசுவது தவறு ,அவள் உடலில் ஏற்பட்டுள்ள இயற்கையான மாற்றத்திற்கு நாம் ஏன் அவளுடைய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் , சரி , எனக்கு ஒரு சந்தேகம் , இவளை விட இரண்டு வயது மூத்தவன் கிஷோர் , அவனுக்கு ஏன் நீங்கள் இன்னும் வீட்டு வேலைகளைக் கற்றுத்தரவில்லை , ஏன் ஆண்மகன் என்பதாலா ?, இந்த காலத்தில் ஆண்களும் சரிக்குச் சமமாக வீட்டு வேலை செய்கிறார்கள் , வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுங்கள் , அது நல்லது தான் , ஆனால் இருவருக்கும் சேர்த்து கற்று கொடுங்கள் , அது பிற்காலத்தில் நரேஷின் மனைவிக்கு உபயோகமாக இருக்கும் , மற்றுமொன்று கேட்கிறேன் ,நேற்று வரை நீங்கள் சுமமாக இருந்துவிட்டு இன்று குழந்தை பெரிய மனுஷி ஆனவுடனே அவளுக்கு ஏன் பொறுப்புகளைத் திணிக்கிறீர்கள் “ என்றாள் . அவள் கேட்ட கேள்விக்கு அவள் மாமியாரிடம் பதிலே இல்லை . ரேகா தொடர்ந்தாள் ,”குழந்தையைக் குழந்தையாகப் பாவியுங்கள் , இக்கால உணவு முறையினால் சில குழந்தைகள் சீக்கிரமே பூப்படைந்து விடுகின்றனர் . சிறு வயதிலேயே நிறைய மனரீதியான தொல்லைகளுக்கும் அச்சத்திற்கும் ஆளாகின்றனர் .நாம் அப்படி நம் குழந்தையை விடக் கூடாது , நீங்கள் கூறுவது போல் , என் பெண்ணை என்னால் கல்யாணத்திற்காகவும் அவள் புகுந்த வீட்டில் சென்று நற்பெயர் எடுப்பதற்காக மட்டுமே இன்றிலிருந்தே தயார் செய்ய முடியாது . அவள் அவளாக இருக்கட்டும் , பெரியோர்களை மதிக்கட்டும் , அனைத்து நல்ல விஷயங்களையும் கற்றுத் தெரிந்து கொள்ளட்டும்.
இன்னொன்றும் சொல்கிறேன் , நீங்கள் கூறியபடி அர்ச்சனா ஒன்றும் சந்தோஷமாக இல்லை , தனக்கு ஒன்றுமே வராது , தான் ஒன்றிற்கும் லாயக்கு இல்லை ,என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாள் , எல்லாவற்றிற்கும் அவள் புகுந்த வீட்டில் அவளை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள் ,பாவம் எல்லாவற்றுக்கும் கணவனை எதிர்பார்த்து இப்பொழுது சிறைக்கைதி போல் இருக்கிறாள் , அவளுக்கென்று ஒரு தனித்துவம் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் , அந்த குழந்தை இன்று உண்மையாக நன்றாக இருந்திருக்கும் “என்றாள் .உடனே அவந்திகாவைப் பார்த்து ,”இங்கே பார் அவந்திகா , இது சகஜமான விஷயம் ,இனி நீ நன்றாகச் சாப்பிடு , நீ சாப்பிடுவது அத்தனையும் உனக்கு மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கும் . உன்னை நானும் உன் அப்பாவும் அந்த போட்டிக்கு அழைத்துச் செல்கிறோம் , உனக்குப் பிடித்ததைச் செய் , உடல் வலி ஏற்படுகிறதே என்று வருந்தாதே , அந்த வலி உன் உடம்பை திடமாக்கும் , உடற்பயிற்சி செய் ,மனதை நிம்மதியாக வைத்துக்கொள் ,இனி தான் நீ என்னுடனும் உன் அப்பாவுடனும் நிறையப் பகிரவேண்டும் , உனக்கு ஏதாவது/யாரையாவது பிடிக்கவில்லை என்றால் , எங்களிடம் தைரியமாகக் கூறு ,நாங்கள் இருக்கிறோம் , உனக்கு நீ தான் பாதுகாப்பு , வேறு யாராவது
வந்து சினிமா போல் இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று இல்லாமல் , உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பாரு , பயப்படாதே “ என்றாள் . அவந்திகா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு புன்னகை பூத்தாள் .அதற்குள் இந்த பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு அவந்திகாவின் அப்பா சரசரவென்று எங்கோ வெளியில் சென்று வந்தார் . அவந்திகா அவள் அப்பாவைப் பார்த்ததும் கட்டிப் பிடித்தாள் , அவர் தான் வாங்கிய அவந்திகாவிற்குப் பிடித்த சாக்லேட்டை அவளிடம் கொடுத்துவிட்டு ,”வெல்கம் டு ஒமன்ஹூட் , மீ டியர் “என்றார் .அதுமட்டுமின்றி அடுத்த வாரம் நடைபெறப் போகும் கராத்தே போட்டிக்கு ,தேவையான உடைகள் மற்றும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியத்திற்காகப் பாதாம் பருப்பு, திராட்சைப் பழம் என்றெல்லாம் வாங்கி வந்திருந்தார் , அவர் “அவந்திகா உன் அம்மா பேசியதைக் கேட்டேன் , அனைத்தும் சரியான வார்த்தைகள் , நாங்கள் இருக்கிறோம் “ என்றார் .அதுமட்டுமின்றி , தன் அம்மாவைப் பார்த்து “அம்மா நம் வீட்டு குறுகிய வட்ட சொந்தக்காரர்களை மட்டும் வைத்து குழந்தைக்குச் சடங்கு செய்துவிடுவோம் ,அவள் இன்னும் எங்களுக்குக் குழந்தைதான் “ என்றார் .நரேஷ் அவன் பங்கிற்கு , தன் தங்கைக்குப் பிடித்த விளையாட்டுப் பொருளைப் பரிசளித்தான் ……

One Comment on “சுகன்யா சம்பத்குமார்/பூப்படைதல்”

Comments are closed.