விளக்கு எரிய தூண்டுதலாக இருந்தால் போதும்!/காத்தாடி ராமமூர்த்தி

தகவல் : முகநூலில் கந்தசாமி ஆர்

விளக்கு எரிய தூண்டுதலாக இருந்தால் போதும்!சென்னை, ஆழ்வார் பேட்டையில் வசிக்கும், பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி:

இப்போதெல்லாம், யாராவது என்னிடம் வயதை கேட்டால் நான் பிறந்த ஆண்டான, 1938 என்று கூறாமல், 38 என்று மட்டும் கூறுவேன். புரிந்து கொள்ளாமல் விழிப்பர்.

என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த எனக்கும் மேடை நாடகங்களின் மீது ஈடுபாடு வந்தது. சென்னையில் விவேகானந்தா கல்லுாரியில் படித்தபோது, தமிழ் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு, சாம்பு என்.எஸ்.நடராஜன் வாயிலாக கிடைத்தது.

தேவன் எழுதிய, ‘கோமதியின் காதலன்’ நாடகத்தின் மூலம், 1953ல் மேடையேறினேன். விவேகானந்தா கல்லுாரியில் படித்துவிட்டு வெளியே வந்ததால், ‘விவேகா பைன் ஆர்ட்ஸ்’ என்ற பேனரில், பகீரதன் எழுதிய, ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். அதில் நடித்த சோவின் அறிமுகம் கிடைத்தது.

அவர் எங்களுக்காக, ‘என்னிடம் கிடைத்தால்’ என்ற நாடகத்தை எழுதி கொடுத்தார். அதில், ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர், உதவி ஆசிரியர், கார்ட்டூன் ஆர்டிஸ்ட் ஆகப் பணிபுரியும் ‘இடும்பன், ஆட்டம் பாம், காத்தாடி’ என, மூன்று கதாபாத்திரங்கள்…

அதில், ‘காத்தாடி’ பாத்திரத்தை நான் ஏற்றேன். அது வித்தியாசமான நகைச்சுவை நாடகமாக அமைந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த நாடகத்துக்குப் பின், என் பெயரில் ‘காத்தாடி’ ஒட்டிக் கொண்டது. சுந்தரேச ராமமூர்த்தியான நான், காத்தாடி ராமமூர்த்தியானேன்.

கடந்த 1966ல், ‘ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்’ என்ற நாடக கம்பெனியை துவங்கினேன். இன்று வரை நாடகங்கள் போட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக என் நாடகக் குழு இயங்கி வருவதை பெருமையாக நினைக்கிறேன். என் சக நடிகர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தான் அதற்கு காரணம்.

தற்போது, 85 வயதாகிறது. இந்த வயதிலும் அவசரமாக எங்கேயாவது போக வேண்டும் என்றால் என் இருசக்கர வாகனத்திலேயே போய் விடுவேன்.

ரசிகர்களின் ஆதரவும், கைதட்டலும், ஆரவாரமும் தான் என்னை இன்றும் இளமையாக வைத்திருக்கின்றன. காலையில், 20 நிமிடங்கள் நடப்பதை தவிர வேறு எந்தப் பயிற்சியும் இல்லை.

எதிர்காலம் நம் கையில் இல்லை. உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அந்த பாதையில் செல்லுங்கள்.

‘அவன் நல்லாயிருக்கானே’ என்று நினைக்காதீர்கள். நன்றாக இருப்பவர்களை எடுத்துக்காட்டாக நினைத்தபடி, நீங்கள் நன்றாக இருக்க வேண்டிய முயற்சிகளில் தொடர்ந்து பயணப்பட்டபடியே இருங்கள்.

யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள்; விளக்கு எரிவதற்கான துாண்டுதலாக மட்டும் நாம் இருந்தால் போதும்.

நன்றி: தினமலர்