அன்னையின் ‘உடற் கல்வி’

(அன்னையின் உரையாடல்கள் 1954 என்ற புத்தகத்திலிருந்து பதிவு செய்தது)

27 ஜனவரி 1954


{இந்தப் பேச்சு அன்னையின் ‘உடற் கல்வி’ என்னும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.)

கேள்வி: ஒருவனுடைய உடலமைப்பு அவனுடைய குணத்தை வெளிப்படுத்துகிறதா?

இல்லை. ஒருவனுடைய குணமே ஒற்றையான, சிக்கலற்ற விஷயம் அன்று, அதாவது, ஒருவனுடைய குணம் அவனுடைய உண்மையான ஜீவனை வெளிப்படுத்துவதில்லை. அது பல விஷயங் களின் விளைவாகும். உதாரணமாக, அவனுடைய மூதாதையர் பண்பு அவனுடைய குணத்தில் வெளிப்படலாம், அதாவது, தந்தையிடமிருந்து வருவது, தாயிடமிருந்து வருவது, இருவரிட மிருந்தும் சேர்ந்து வருவது, அவர்களுக்கும் முன்னாலிருந்து வருவது, பழைய வரலாறு, அவனுடைய பாட்டன் பாட்டி, முப்பாட்டன் முப்பாட்டி முதலியவர்களிடமிருந்தெல்லாம் வரு வதும், அதோடு, மிகச் சிறு பிராயத்தில், எவ்வித சுதந்திரமும் இல்லாத சிறு வயதில் வாழ்ந்த சூழ்நிலையிலிருந்து வருவதும், இவையெல்லாம் குணத்தை அதிக அளவில் பாதிக்கும். இந்தக் குணம் உடலமைப்பைப் பாதிக்கிறது. ஆகவே ஒருவனைப் பார்த்த வுடனே அவனுடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்று சொல்லிவிட முடியாது. அவனுடைய போக்குகளை விவ ரிக்கலாம், அவனுடைய கஷ்டங்களை அறியலாம், அவனுக்குள்ள வாய்ப்புகளை அறியலாம், ஆனால் அவனுடைய உணர்வு வளர்ச் சியடைந்து, அவனுடைய வளர்ச்சி விரும்பிச் செய்யப்படுவதாக வும் ஒழுங்காக அமைக்கப்படுவதாகவும் ஆகும்போதுதான் அவனு டைய உடல் அவனுடைய உண்மையான குணத்தை வெளிப் படுத்தும்.

கேள்வி: நோயின் காரணமாக உடல் உருத்திரிந்து விடும்போது?

அது விபத்தாக இருக்கக்கூடும். விபத்துகளுக்கான காரணங்கள் பல. உண்மையில் அவை இயற்கையில் சக்திகளுக்கிடையே நிகழும் மோதலின் விளைவாக, வளர்ச்சிக்கான சக்திகளுக்கும், முன்னேற்றத்திற்கான சக்திகளுக்கும், அழிவுக்கான சக்திகளுக்கு மிடையே நிகழும் மோதலின் விளைவாக ஏற்படுகின்றன. ஒரு விபத்து ஏற்பட்டு நிரந்தரமான விளைவுகள் உண்டாகின்றன என்றால் அது எப்பொழுதும் தீய சக்திகள், சிதைவின், சீர்கேட்டின் சக்திகள் ஓரளவு வெற்றி பெற்றதன் விளைவாகவே இருக்கும். அதைப் பார்க்க வேண்டும்.
சில தத்துவ போதனைகள், உதாரணமாக பிரம்மஞான போதனைகள் வினைப்பயன் என்பதை மிகவும் மேற்போக்காக, மனிதக் கருத்துகளின்படிப் புரிந்து கொள்கின்றன. அந்தப் போத னைகளை நம்புவோர், “ஓ! உனக்கு இந்த விபத்து ஏற்படக் காரணம் நீ போன பிறவியில் ஒரு தீய காரியம் செய்தாய், அதுதான் இப்பொழுது இந்த விபத்தின் வடிவில் உன்னிடம் திரும்பி வந்திருக்கிறது” என்று சொல்லுவார்கள். அது உண்மையன்று, சிறிதும் உண்மை அன்று. அது மனித நியாயம், அது இயற்கையின் நியாயமும் அன்று, இறைவனின் நியாயமும் அன்று.
இந்தப் பொருளில் உடலின் அமைப்பு மிகவும் முக்கிய மானதுதான். உதாரணமாக, ஒருவன் எப்பொழுதும் மனச் சோர்விற்கு இடம் கொடுக்கிறான், நம்பிக்கை இழந்துவிடுகிறான், தீயதே நடக்கும் என்று நினைக்கிறான், வாழ்க்கையில் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றால் இவையெல்லாம் அவனுடைய அடிப் படைப் பொருள்கூறினுள் சென்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒருவன், ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கும்போது தவறாது அதில் மாட்டிக் கொள்வான். அவனைப் போன்றவர்கள் ஒரு நோய் உண்டாகவோ ஒரு விபத்து ஏற்படவோ வழி இருந்த தென்றால் அதைத் தவற விடமாட்டார்கள். இந்த விஷயத்தில் பெரிய ஆராய்ச்சி நடத்தலாம் – அதே ஆட்கள் தாம் எப்பொழுதும் விபத்துகளில் மாட்டிக்கொள்வார்கள். மற்றவர்களும் அவர்கள் செய்கிற காரியங்களையே செய்கிறார்கள், விபத்து ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, ஆனால் எதுவும் அவர் களைத் தொடுவதில்லை. நீ அவர்களுடைய குணத்தைக் கவனித்தாயானால் முன் கூறப்பட்டவர்களிடம் தீமையே விளையும் என்று எதிர்ப்பார்க்கும் போக்கு இருப்பதைக் காண்பாய்; தங்களுக்கு ஏதோ தீங்கு நேரப் போவதாக அவர்கள் அநேகமாக எதிர்பார்ப்பார்கள் – அவ்வாறே நடக்கவும் செய்யும். அப்படி இல்லாவிடில் அவர்கள் அஞ்சுவார்கள். நாம் அஞ்சும்போது நமது அச்சம் நாம் எதை எண்ணி அஞ்சுகிறோமோ அதையே கொண்டு வரும் என்பதை நீ அறிவாய். விபத்து ஏற்படுமோ என என நீ அஞ்சினால் அது ஒரு காந்தம் போல் செயல்பட்டு விபத்தை உன் பக்கம் இழுக்கும். இந்தப் பொருளில், உனக்கு ஏற்படும் விபத்து உன்னுடைய குணத்தின் விளைவே என்று சொல்லலாம். நோய் விஷயமும் இப்படித்தான். சிலர் நோயாளிகள் நடுவிலும், கொள் ளை நோய்கள் உள்ள இடங்களிலும் நடமாடுவார்கள், ஆனா லும், அவர்களுக்கு நோய் வராது. வேறு சிலர் இருக்கிறார்கள், ஒரு நோயாளியுடன் ஒரு மணி நேரம் இருந்தால் போதும் அவர் களுக்கு அந்த நோய் வந்துவிடும். அதுவும் அவர்கள் உள்ளூற எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்த விஷயந்தான்.