செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

  1. புதுவையில் பிந்திய நிகழ்ச்சிகள்

பின்பு சில நாட்கள் கழிந்ததும் பழைய செட்டியார் வீட்டிற்கே குடிபோனோம். எங்கள் வீட்டில் எப்போதும் என் தாய் வீட்டார் நால்வரும் புருஷர் வீட்டார் நால்வரும் இருப்பார்கள். செலவிற்குப் பணத்திற்கு என்ன செய்வது என்று ஒருவரும் கவலைப்படுவதும் இல்லை. பாரதியாருக்கோ உறவினர் அயலார் என்னும் வித்தியாசம் இராது. ஆகையால் அவரது இஷ்டப்படி கடற்கரையிலும், மடுக்களிலும் சுற்றிக் கொண்டிருப்பார். இன்ன விதமாகத்தான் குடித்தனம் செய்தோம் என்று இப்போது சொல்ல முடியவில்லை. உள்ளன்பு கொண்ட சில நண்பர்கள், குறிப்பறிந்து நடப்பவர்கள், பாரதியாரிடம் தேவதா விசுவாசம் கொண்டவர்கள் பாதி ராத்திரியில் வந்து கதவைத் தட்டி உள்ளே வந்து தங்களால் இயன்ற அளவு பணம் கொணர்ந்து கொடுத்துவிட்டு வணங்கிச் செல்லுவார்கள். பாரதியாரும் அந்த உத்தம நண்பர்கள் செய்த உபகாரத்திற்குப் பிரதியாகத் தாம் இயற்றிய புதிய கவிதைகளை உண்மையான பாவத்தோடும், தனி உணர்ச்சி யோடும் தம் குழந்தைகளிடம் பாடிக் காண்பிப்பார். அவர்கள் அவைகளைக் கேட்டு மகிழ்ந்து உள்ளம் பூரித்துப் போவார்கள்: இரவு மூன்று மணி வரையில் அளவளாவியிருந்து ஸி.ஐ.டி.க்குப் பயந்து தலையை முக்காடிட்டுக் கொண்டு போவார்கள் நண்பர்கள்.
இவ்விதம் இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தன. அந்தச் சமயத்தில் அவரது மன நிலைமையை அவர் இயற்றிய “லக்ஷ்மி ஸ்தோத்திரம்” நன்கு விளக்கும்.
சில சமயம் அரிசி இராது. பாரதியார் மாடியில் பத்துப் பேர்கள் சிஷ்யர்களோடு, “பூணூல் வேண்டுமா? வேண்டாமா?” என்று வாதம் செய்து கொண்டிருப்பார். ‘யாகம்’ செய்யும் கருத்து என்ன என்ற சர்ச்சை பலமாக நடக்கும்.
ஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டார். கையில் 4 அணா இருந்தால் வாழைப்பழம் வாங்கி வந்து எல்லோரும் பரியாறுவது வழக்கம். பால்காரி கடனாகப் பால் விடுவாள். அந்தப் பாலைக் குடித்துவிட்டுச் சும்மா இருப்போம். இப்படியும் சில நாட்கள் கழிந்ததுண்டு. “அரிசி இல்லையென்று சொல்லாதே. ‘அகரம் இகரம்’ என்று சொல்லு” என்று சொல்லுவார். “இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்” என்ற வார்த்தை அவரது புண்பட்ட ஹிருதயம் கொதித்துப் புறப்பட்டதாகும்.
சென்னையிலிருந்து வந்த நண்பரொருவர் எங்கள் நிலைமையைக் கண்டு வருந்தி, “சுவாமி! எப்படித் தங்களுக்குச் சாப்பாடு நடக்கின்றது? நாலு பக்கமும் போலீஸ் பாரா! அயலிடங்களுக்குக் கடிதம் போக்குவரத்துக்கூடாது. அன்பின் மிகுதியால் தங்கள் வீட்டிற்கு வரக்கூட நண்பர்களுக்குப் பயம். அப்படித் தப்பித் தவறிவிட்டால் உடனே தண்டனை. பார்த்தவர்களுக்குப் பந்தோபஸ்து. அந்தோ! என்ன கொடுமை!! ஆனால் தாங்களோ அதி உற்சாகத்துடன் காணப்படுவது ஆச்சரியமே!” என்றார்.
“நான் என் கடமையைச் செய்கிறேன். அதனால் என்மனம் நிறைந்திருக்கின்றது. கீர்த்தியை சாப்பிடுகிறோம்” என்று பதிலுரைத்தார் பாரதியார்.
ஐரோப்பாவிற்குப் போகலாம் என்ற ஓர் எண்ணம் அவர் மாத்தில் உதித்தது. சர்க்காருக்கு மனுச்செய்து கொண்டதில் அனுமதியும் அதிருஷ்ட வசத்தினால் பாரதியாருக்குக் கிடைத்து விட்டது. நண்பர்கள் சிலருடன் ஜெர்மனிக்குப் புறப்பட ஆயத்தங்கள் நடந்தன. ஆனால் திடீரெனச் சர்க்கார் தேவதைகளின் மனம் மாறிவிட்டது. ‘ஐரோப்பா சென்றால் ஏதாவது கெடுதல் உண்டாகும்; போவது உசிதமல்ல என்று தடை உத்தரவு போட்டுவிட்டார்கள். தம் மீது இருக்கும் அநாவசியமான வாரண்டை ரத்து செய்துவிடும்படி சர்க்காருக்கு மனுச் செய்து கொண்டே இருந்தார். மேன்மை தங்கிய சக்கரவர்த்தி அவர்கள் திவ்ய சமுகத்திற்குக் கூடக் கடிதம் எழுதினார். ‘கவனிக்கப்படும்’ என்று வழக்கம்போல பதில் வந்ததேயன்றி, பிறகு கிணற்றில் கல் போட்டாற் போலவே முடிந்தது; பயன் ஒன்றும் ஏற்படவில்லை.
போலீஸ் சூப்பிரிண்டெண்டெண்டு ஜனாப் அப்துல் ரஹீம் என்பவர் எங்களைப் பார்த்து வர அனுப்பினார்கள். பின் ஆங்கிலேயரான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவரைப் பின்தொடர்ந்தார். கவர்னர் மாளிகையிலிருந்து பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். பாரதியார் பேட்டி கண்டார். ஆனால் பலன்தான் இல்லை. பாரதியார் ஆங்கிலத்தில் பேசும் திறமையை அதிகாரி மிகவும் புகழ்ந்தார் இதுதான் கண்ட பலன். “லண்டனில் ஆங்கிலம் கற்றுக் காண்டீர்களா?” என்று கேட்டாராம். “இல்லை திருநெல்வேலியிலும், காசியிலும் கற்றுக் கொண்ட படிப்புத்தான்” என்று பாரதியார் பதில் உரைத்தாராம்.
“இதுவரை நான் பார்த்த இந்தியர்களில், உயர்ந்த முறையான இங்கிலீஷ்ப் பேச்சை, நீங்கள் பேசித்தான் கேட்டேன்” என்று புகழ்ந்து பேசி, “தங்களைப் பற்றிச் சர்க்காரிடம் சொல்லுகிறன்” என்று சொல்லிச் சென்றார். ஆனால் பலன் ஒன்றும் இல்லை.
இந்தக் கோலாகலத்தில் ஒருநாள் எங்கள் தாத்தர் அப்பாஸ்வாமி சிவம் தமது பூஜா சாமான்களுடன் வந்து எங்கள் வீட் ட்டில் இறங்கினார். அந்தச் சாமான்கள் ஒரு வண்டி நிறைய இருந்தன. அவரை ‘வீர சைவர்’ என்றால் அது மிகையாகாது. நாங்கள் இருக்கும் வீடோ ‘ஸர்வமத ஸமரஸம்’ பொருந்தின இடம். அங்கே ஐந்தாறு மாதம் சமாளித்துக் கொண்டு அங்கே தங்கியிருந்தார். பேரனின் கல்வித் திறமையை அவ்விதம் தங்கியிருந்த காலத்தில் அவர் நன்றாகத் தெரிந்து கொண்டார். ஆசார சீலராக இருப்பினும் அவருக்குப். பாரதியாரிடத்தில் ஒருவகை அன்புண்டாயிற்று. அவர் வெறும் ஆசாரசீலர் மாத்திரமல்ல; பக்தி பரவசம் மேற்கொண்டவர். சுவாமிக்கு தீபாராதனை நடத்தும் சமயம் அவரும் நடராஜப் பெருமான் பேரில் அனேக பாடல்கள் பாடினார். அவர் ஓர் ஆசுகவி. நிந்தாஸ்துதியாகக் கவிகள் இயற்றுவதில் நிபுணர்.

அவர் இயற்றியவற்றில் ஒரு பாட்டு பின்வருமாறு:
(இராகம்
தேவகாந்தாரி)

என்ன மோகமடி உனக்கு
என் நடராஜ சாமி மீதினில்
(என்ன)
அன்னை சகிப்பா ளோடி அருந்தவம் செய்வதற்கு
சொன்னே னடியுனக்கு பொன்னம்பலத்தி லாடி (என்ன)

பாரதியார் சிறந்த உழைப்பாளி. நேட்டாலில் தமிழர்களின் நன்மைக்காக உழைக்கும் சங்கம் ஒன்றிற்குப் புதுவையிலிருந்தும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் பணம் சேகரித்து அனுப்பினார். அதற்காக ‘மாதா மணி வாசகம்’ என்னும் புஸ்தகம் ஒன்றும் அச்சடிக்கப்பட்டது. புதுவைலுள்ள ஸந்நியாசிகள், பெரியோர்கள் முதலானோர்கள் எங்களுடன் நெருங்கிப் பழகினார்கள். ஊராரும் மிக்க அன்புடன் இருந்தார்கள்.
குள்ளச்சாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, கோவிந்த சாமி என்றவர்கள் பாரதியாரின் பக்குவ நிலையறிந்து அவருக்கு ஞானாபதேசம் செய்தார்கள். அப்போதுதான் பாரதியார் புதுவையில் ‘பாஞ்சாலி சபதம்’, ‘ஞானரதம்’, ‘குயிற் பாட்டு’, தண்ணன் பாட்டு’ முதலியவைகளை எழுதினார். பாரதியாருக்கு வேண்டியவை நல்ல எழுதுகோல், வெள்ளைக் கடுதாசி, தனிமை. அச்சடிப்பதுபோல் வேகமாக எழுதிக் குவிப்பார். ஒரு நிமிஷமேனும் தொழிலின்றிருப்பதை விரும்பார். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆவலுண்டு. சரீரம் இடங்கொடுக்கவில்லை. ஒரு நண்பர் வீட்டில் கத்தி வீச்சுப் பழகல் ஓர் ஆறுமாத காலம் நடைபெற்றது.

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)