
குவிகம் எஸ்.சுந்தர்ராஜன் அவர்களின் வலி சிறுகதை விமர்சனம்.
92 வயது கோகிலா உடல் முழுதும் வண்டி சரளைக்கற்களை கொட்டிய வலியுடன் மரணப் படுக்கையில் இருக்கிறார்.அவரின் நினைவுகளாக கதை நகர்கிறது.கோகிலாவைப் பார்க்க மறுநாள் பிரதம மந்திரி வர இருக்கிறார் .நாட்டின் உயரிய விருதான இன்னொரு மதர் தெரசா விருது கோகிலாவுக்கு வழங்கப்பட இருக்கிறது..
இன்னும் 24 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்கப்போகிற வரை பிரதமர் வரும் வரை வெண்டிலேஷனில் வைத்தாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்கள் பேசிக் கொள்வது கோகிலாவிற்கு தெளிவாகக் கேட்கிறது.பிரதம ருக்குப் பதிலாக ஓடிப் போன கணவனோ மகனோ வந்தால் நன்றாகயிருக்குமென்று நினைக்கிறார்.உடலின் வலியிலும் குமிழ் குமிழாக பொங்கி வருகிறது சிரிப்பு.இத்தனை வருட சாதனைக்கு தொண்டைக்குழியை விட்டு வெளியே வராத வலியும் சிரிப்புமே காரணமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது .
அதீத சந்தோஷத்தில் மாதாந்திர வலி போல் தோன்றுமொன்று எல்லாப் பெண்களுக்கும் உரியதென்று நினைக்கும் கோகிலாவிற்கு பிறகுதான் புரிகிறது அந்த வலி தனக்கு மட்டுமே வருகிறதென்பது..எனவே இது இறைவன் கொடுத்த வரமென நினைத்து வாழ்கிறாள்.முதல் வலி கணவனுடனான
முதல் தொடுகையின் போது ஏற்படுகிறது.அடுத்து முதல் பிள்ளைப் பிறக்கும் போதும் அடுத்தடுத்த பெண்குழந்தைகள் இரண்டு பிறந்து இறக்கும் போதும் கணவன் கோகிலாவை விட்டு ஓடிப் போன போதும் இட்லிக்கடை வைத்து பிழைப்பு நடத்துகையில் தனித்திருப்பவள் தானே என்று சிலர் தவறாக நடக்க முயற்சித்த போதும் பத்து வயதுப் பிள்ளையை தத்துக் கொடுக்க ஊர்ப் பெரியவர் வற்புறுத்திய போதும் வேலைக்குச் செல்வதாகக் கூறி விட்டு மகன் சொல்லாமல் கொள்ளாமல் மலேயா ஓடிப் போனதும் 42 வயதில் யாருமற்றுப் போன துக்கத்தில் அரளி விதை அரைத்து விழுங்கி வாழ்வை முடித்துக்கொள்ள முயன்ற போதுமாய் எத்தனை வலிகள் அதன் பிறகுதான் வாழ்க்கை கோகிலாவை ஓரிடத்தில் நிறுத்தியது.
யார் மூலமாகவோ டெல்லி வந்து ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் சேவை செய்ய ஆரம்பித்து உடல் ஊனமுற்றோர்,புற்றுநோய் பாதித்தவர் ஆதரவற்ற குழந்தைகள் என உதவி தேவைப்படும் அத்தனை பேருக்கும் கோகிலாமாவின் சேவைக்கரம் நீண்டது .50 ஆண்டுகாலஅயராத சேவை பத்மபூஷன் விருதைப் பெற்றுத் தந்தது.பாரத ரத்னாவுமே தரலாமே என மக்களை பேச வைத்தது.மரணப் பெருவலிகளை சிரிப்புடன் தாங்கிய கோகிலா வலிகளின்றி இறந்து போனார்
அடுத்த நாள் நாளிதழ்கள் நான்கு பக்கங்களுக்கு அவரைப் பற்றி .சொர்கத்தின் கதவுகள் அவருக்கென திறந்திருந்தாலும் நரகத்தில் உள்ளோருக்கு அவரின் சேவை தேவையாயிருக்குமாதலால் எல்லோர் மனத்திலும் கோகிலாமா வாக நிறைந்த அவர் நரகம் சென்று அங்கும் சேவை செய்வார் என எழுதின.
இக்கதை எளிமையான நடையில் இருந்தாலும் சொல்லும் செய்தி வெகு ஆழமானது. 42 வயது வரை வாழ்வில் வலிகளை மட்டுமே அனுபவித்த பெண்
ஆதரவற்றுப் போன பின் தன் ஆதரவுக்கரங்களை தேவையுள்ளோருக்கென நீட்ட நாடே அறியக்கூடிய பெண்மணியாக ஓர் உயரிய இடத்தைப் பிடிக்கிறார்.வாழ்க்கை எல்லோருக்கும் மலர்ப்படுக்கையாக இருப்பதில்லை.பெரும்பாலோருக்கு வாழ்க்கை போர்க்களமாகத்தான் இருக்கிறது.நாளும் போர்கள் விதம் விதமாய்…அதில் எதிர்த்து நின்று போரிடுவதாலேயே பண்பட்ட வாழ்க்கைப் பாதை அமைகிறது.புறமுதுகிடுவோர் எவரும் சாதனைக்குரியவர்களாவதில்லை.வலிகளை வேதனைகளை தோல்விகளைப் புறம் தள்ளி போராடத்துணிந்தால் வாழ்வெனும் போர்க்களத்தில் வெற்றி நிச்சயமெனும் வாழ்வியலைச் இயல்பாய் இக்கதை மூலம் புரிய வைத்த .கதாசிரியருக்கு
வாழ்த்துகளுடன்
.
