வே.கல்யாண்குமார்/பெருங்காயம்


..


ஒருகாயம் வந்தாலே தாங்காத உடம்புக்கு உட்காயம் தீர்க்கின்ற
மருந்தானாய் பெருங்காயமே!

சிறுகாயம் அல்லவே நீ
பெருங்காயம்.. என்று
பேறுபெற்ற மருந்தானாய் பெருங்காயமே!

வெங்காயம் சுக்கானால்
வெந்தயம் குழம்பானால் எங்கேயும் மணக்கின்றாய் என்னருமை பெருங்காயமே!

செரிமானம் தருகின்றாய் சிறிதளவு சேர்த்தாலும் நறுமணமாய் கமழ்கின்றாய் நற்காயம் பெருங்காயமே!

இக்காயம் பொய்யென்று இயம்பிவைத்த சித்தர்களும்.. அக்காயம் நலம்பெறவே அருமைமிகு மருந்தாக்கி மகிழ்வித்தார் பெருங்காயமே!

அஞ்சரைப் பெட்டிக்குள் இருக்கின்ற தங்கமே.. அம்மா அத்தை பாட்டிக்கு அடுப்படியில் சுவைசேர்க்கும் ஓர் அங்கமே!

எங்குமே கிடைப்பாய்.. எஃகுபோல் இருப்பாய் பொடிசெய்து சேர்த்தால் புதுச்சுவையை கொடுப்பாய்!

எப்போதும் இப்போதும் நினைத்தாலே மணக்கின்ற பெருங்காயமே! உன் நினைவினிலே பாடுகின்றேன் என் பெருங்காயமே!