சுகன்யா சம்பத்குமார்/மகிழ்வித்து மகிழ்

நடராஜன் மாலை நேர காட்சிக்கு ஆயத்தமாய் கொண்டிருந்தான், திடீரென்று அவன் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது , அவனும் அதை துண்டித்து கொண்டே இருந்தான் . ஏனென்றால் , அவன் முதலாளி இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் முழு நேர கோமாளி காட்சியைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் . இவன் தொடர்ந்து துண்டித்து கொண்டிருந்ததை பார்த்து விட்டு ,”நடராஜா ,என்ன அவசரமோ என்னமோ , நீ போய் பேசிவிட்டு வா ,நான் அதற்குள் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார் .அவனும் வெளியே வந்து “என்னமா ஆச்சு , ஏன் விடாமல் அழைத்து கொண்டே இருக்கிறாய் “ என்றான் . அது ஒன்னும் இல்லடா , எனக்கு ரொம்ப நாளாக நெஞ்சு வலிக்கிறது என்று கூறுவேன் அல்லவா , இன்றும் மிகுந்த வலியாக இருந்தது உன் மனைவியை அழைத்துக்கொண்டு தான் மருத்துவமனைக்கு வந்துள்ளேன் , இப்பொழுது என்னை பரிசோதித்துவிட்டு அவளை உள்ளே அழைத்து சென்று ஏதோ பேசுகிறார்கள் , என்னவென்று தெரியவில்லை என்னிடமும் கூறமாட்டேன் என்கிறார்கள் , கொஞ்சம் நீ வாயேன் , கவலையாக உள்ளது “என்றாள் . இதைக் கேட்டுவிட்டு அவசர அவசரமாக முதலாளியிடம் கூறிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றான் , அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது , அவன் அம்மாவிற்கு இதயத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு அவன் 5 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். அவன் இடிந்து போய் உட்கார்ந்தான் “அவ்வளவு தொகைக்கு நான் எங்கே போவேன் “ என்று .அதுவும் அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என்றனர் , அவன் தன் மனைவியை அழைத்து “பார்வதி , இங்கே பாரு , நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை , அம்மா வருத்தப் படப் போகிறார்கள் , ஒன்று செய்வோம் ஓரிரு நாட்கள் அம்மா இங்கேயே இருக்கட்டும் , அதற்குள் நாம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்ய முடிகிறதா என்று பார்ப்போம் “ என்றான் , அவளும் சரி என்றாள் .அடுத்த நாள் இருவரும் அரசு மருத்துவமனையில் விசாரித்து விட்டு ,நடராஜனின் முழு நாள் கோமாளி காட்சி முடிந்த உடன் , அரசு மருத்துவமனைக்கு மாற்றி தன் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று இருந்தனர் ,அப்பொழுது அவன் தன் தாயாரை தற்பொழுது இருக்கும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு வெளியே வரும்போது சுமார் 20, 30 உள் நோயாளிகள் (ஜெனரல் வார்டில் உள்ளவர்கள்) தங்களுக்குள் பேசிக்கொண்டனர் ,( அதில் சிலர் ,புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ,சிலர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் , சிலர் இருதய நோயாளிகள் ,மற்றும் சிலர் வெவேறு உடல் உபாதைகளுடன் இருப்பவர்கள் ) அதில் சில பேர் கைகளில் அருகில் இருக்கும் மைதானத்தில் ஒரு நாள் முழுக்க நடக்க இருக்கும் கோமாளி காட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு விவரித்துப் பேசிக்கொண்டிருந்தனர் . அதில் அவர்களுடைய ஆசையையும் அவர்களால் போக முடியாத சூழ்நிலை பற்றியும் பேசிக்கொண்டு வருந்திக் கொண்டிருந்தனர் , இதைக் கேள்விப்பட்ட நடராஜன் , “நாமோ இன்னும் ஓரிரு நாளில் அரசு மருத்துவமனைக்குச் செல்லவிருக்கிறோம் , அதற்குள் நம்மைப் போல் ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்களுக்கு ஒரு சிறு சந்தோஷத்தைக் கொடுத்து விட்டுச் சென்றால் என்ன என்று தோன்றியது , இதை அவனுடைய முதலாளியிடம் விரிவாகச் சொன்னான் , அவர் தயாளு மனம் கொண்டவர் , அவன் கேட்டவுடனே சரி என்று கூறிவிட்டார் , அதுமட்டுமின்றி , அவரே அந்த மருத்துவமனையின் மேலதிகாரியிடம் அனுமதி வாங்குவதாகவும் கூறினார் , ஆகையால் அங்கிருக்கும் கோமாளிகளை அழைத்து , முதலில் முழு நேரக் காட்சியை இங்கே முடித்துவிட்டு , மருத்துவமனை உள் அரங்கத்தில் , என்ன காட்சியைக் காண்பிக்க முடியுமோ , அதைக் காண்பித்து அந்த நோயாளிகளை மகிழ்விக்குமாறு கூறினார் “ அனைவரும் உற்சாகமாக இருந்தனர் .என்னமோ என்றும் இல்லாத ஒரு மன நிறைவு அன்று அவர்களுக்கு . முழு நேரக் காட்சியும் முடிந்தது, அதே கோமாளி உடையில் , மனதில் ஒரு வலியுடன் நடராஜனும் , ஒரு தனி உற்சாகத்துடன் மற்றவர்களும் மருத்துவமனையின் உள் அரங்கத்தை அடைந்தனர் ,கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் காட்சியை நடிக்க ஆரம்பித்தார்கள் , அத்தனை நோயாளிகளும் உற்சாகமாகக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருக்கும் மருத்துவமனை ஊழியர்களின் உதவியோடு அந்த அரங்கத்திற்கு வந்தனர் . மிகுந்த மகிழ்ச்சியோடு வெகு நாட்களுக்குப் பிறகு அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர் . இதை மருத்துவமனையின் மேலதிகாரி கவனித்தார் . நிகழ்ச்சி மிகுந்த சிறப்புடன் நடந்து முடிந்தது , அனைவரும் நோயாளிகளுடன் மகிழ்ச்சியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர் , ஆனால் நடராஜன் மட்டும் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தன்னால் இந்த மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை தன் தாயாருக்குச் செய்ய முடியாத அவல நிலையை நினைத்து வருந்திக்கொண்டே தன் தாயாரை அழைத்துச் செல்ல வண்டி ஏதேனும் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான் .அதற்குள் அவன் மனைவி ஓடி வந்து “உங்களை மருத்துவர் அவசரமாகப் பார்க்க வேண்டும் என்கிறார் , சீக்கிரம் வாருங்கள் “ என்றாள் . அவனும் உள்ளே சென்றான் , அப்பொழுது அறுவை சிகிச்சைப் பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு அவன் தாயார் நலமோடு இருப்பதாகக் கூறினார் மருத்துவர் . அவன் கண்ணையும் காதையும் அவனால் நம்ப முடியவில்லை , அவன் எப்படி என்று கேட்க , நடராஜன் மற்ற நோயாளிகளை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் போது அவன் தாயாருக்கு மாரடைப்பு ஏற்படவே ,என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த போது , மருத்துவமனை மேலதிகாரி வந்து “நடராஜனின் தாயார் உயிர் போகும் தறுவாயில் உள்ளார் ,இப்பொழுது பணத்தைப் பற்றிச் சிந்திக்காதீர்கள் , நாம் மருத்துவர்கள் ,அதுமட்டுமின்றி நம் நோயாளிகள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பது இது தான் முதல் முறை , நாம் என்ன தான் நல்ல முறையில் பார்த்துக்கொண்டாலும் அவர்கள் மனம் மகிழும் படி இங்கு வந்துள்ள கோமாளிகள் அனைவரும் அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் .அதற்குக் காரணமாய் இருந்த நடராஜனுக்கு நாம் செய்யும் பிரதி உபகாரம் இதுவாக இருக்கட்டும் “ அவன் தாயாருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யுங்கள் , அதுமட்டுமின்றி இதே சர்க்கஸ் கம்பெனியில் இருந்து மாதம் ஒரு முறை இவர்கள் இங்கு வந்து மகிழ்விப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் “ என்றார் . இதை அனைத்தையும் கேட்டுவிட்டு நடராஜனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . பிறரை மகிழ்வித்தால் இறைவன் நமக்கான மகிழ்ச்சியைத் தருவார் என்பதை அன்று தான் அனுபவித்து உணர்ந்தான் நடராஜன் .