ஜெ.பாஸ்கரன்/அமரர் தேவன் அறக்கட்டளை விருது 2024

எழுத்தாளர் தேவனை அறியாதவர்கள் கூட ‘துப்பறியும் சாம்பு’ வை நன்கு அறிவர்! அப்படிப்பட்ட ஒரு மிகச் சிறந்த பாத்திரப் படைப்பு ‘சாம்பு’. நகைச்சுவை எழுத்தில் தனி முத்திரை பதித்தவர் ‘தேவன்’ என்கிற ஆர் மகாதேவன் அவர்கள். அவர் காலத்தில் அவரது படைப்புகள் அச்சில் வரவில்லை. பின்னர் மறைந்த எழுத்தாளர் திரு சாருகேசி மற்றும் திரு பசுபதி (கனடா) ஆகியோரின் முயற்சியில் அவரது படைப்புகள் அச்சேறின.

மறைந்த தேவன் அவர்கள் நினைவாக, சாருகேசி குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்கள், ஓவியர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கத் தொடங்கினர். திரு சாருகேசி மறைவுக்குப் பிறகு, அவருடைய சகோதரி திருமதி சாந்தி லக்‌ஷ்மணன் தேவன் அறக்கட்டளையை நிர்வகித்தும், விருதுகளைத் தொடர்ந்து வழங்கியும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றி வருகிறார். கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர், பதிப்பாளர் திரு ராஜன் ஆகியோர் இந்த அறக்கட்டளையின் செயல்பட்டிற்கு உறுதுணையாக இருந்து, ஆண்டு தோறும் அமரர் தேவன் அறக்கட்டளை விருது வழங்கும் விழாவினைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டு (2024) விருது அளிப்பு விழா சனிக்கிழமை மாலை (9-3-2024) மயிலை கோகலே சாஸ்திரி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இறை வணக்கப் பாடலுக்குப் பின், தலைமை தாங்கிப் பேசிய கீழாம்பூர், அறக்கட்டளை பற்றியும், விழா பற்றியும் விளக்கினார். சிறப்புரை ஆற்ற வந்திருந்த திரு ரகுனாதன் ஜெயராமன் அவர்களை வரவேற்று, தேவன் அவர்களைப் பற்றிய உரையை கேட்க அவரும் ஆவலாய் இருப்பதாகக் கூறினார். விருது பெறும் எழுத்தாளர்கள் திருமதி காந்தலக்‌ஷ்மி சந்திரமெளலி, திரு நாவலர் நாராயணன், டாக்டர் ஜெ.பாஸ்கரன் ஆகியோரையும் அறிமுகம் செய்து, அவர்களது படைப்புகள் பற்றியும் பேசினார். இராமகிருஷ்ணா மடம் சுவாமிஜியுடன், மடத்து விழாவிற்கு திரு சோ அவர்களை நேரில் அழைக்கச் சென்றதை சுவைபடக் கூறினார். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த திரு அண்ணாதுரை அவர்கள், தேவன் அந்தப் பக்கம் வந்திருப்பதை அறிந்து, கூட்டத்தைச் சிறிது நேரம் நிறுத்தி, அவருக்கு வழிவிடச் சொன்னாராம். அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் எப்படியெல்லாம கொண்டாடப் பட்டார்கள் என்பதற்கான சிறந்த உதாரணமாக கீழாம்பூர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்கள்.

தேவனின் படைப்புகளிலிருந்து சுவாரஸ்யமான பகுதிகளை எடுத்து, சுவைபடப் பேசினார் ரகுநாதன். எத்தனை முறை கேட்டாலும் (வாசித்தாலும்) அலுக்காத எழுத்து தேவன் அவர்களுடையது – ரகுநாதன் உரையில் அது இன்று மீண்டும் தெளிவாகியது! சுவாரஸ்யமான பேச்சு! தேவன் படைப்புகளில் சிலவற்றையாகிலும் திரைப்படமாக எடுத்து, பட்டி தொட்டிகளெல்லாம் அவர் புகழைப் பரப்ப வேண்டும் என்றார் ரகு!

விருதாளர்களையும், ரகுநாதனையும், கீழாம்பூர் மற்றும் ராஜன் அவர்களையும் வரவேற்றுப் பேசினார் திருமதி சாந்தி லக்‌ஷ்மணன். விழாவில் அவரது மகிழ்ச்சி பொங்கும் முகம், அறக்கட்டளையின் சேவைகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது.

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் பயனாடை போர்த்தி, அமரர் தேவன் அறக்கட்டளை விருது 2024 பாராட்டுப் பத்திரம், விருதாளர் பெயர் பொறித்த தங்க நாணயம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் (ஆரோக்கியமான கருப்பட்டி வெல்லம் – பனை ஓலைப் பெட்டியில்!) வழங்கி கெளரவிக்கப்பட்டது! உடன் இணைப்பாக ‘தாமிரவருணி கேள்வி பதில் (முதல் பாகம்)’ புத்தகம் வழங்கப்பட்டது.

விருதாளர்கள் தங்கள் ஏற்புரையில் தேவன், பாக்கியம் ராமசாமி, சாருகேசி ஆகியோரின் நினைவலைகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டனர்.

குவிகம் குழுமத்தினர், விருட்சம் ஆசிரியர் திரு அழகிய சிங்கர், கல்கி ஆசிரியர் திரு ரமணன், ஆடிட்டர் ஜேபி, காத்தாடி ராமமூர்த்தி, கலைமகள் வாசகர்கள், தேஜஸ் பவுண்டேஷன் அன்பர்கள், வல்லபா-விகேஎஸ் தம்பதியினர், திரு ராஜகோபால் என அரங்கு முழுதும் நண்பர்கள்!

தேசீய கீதத்துடன் விழா இனிதாக நிறைவடைந்தது.

பாதுஷா, மைசூர் போண்டா, உ.கி. போண்டா, பொடி இட்லி, சட்னி, காப்பி என விழா தொடங்குமுன் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மதிப்புமிகு தேவன் அறக்கட்டளை விருதுக்கு என்னையும் தேர்வு செய்த தேர்வாளர்களையும், அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்களையும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் – விருது, மேலும் என்னை மேம்படுத்திக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள ஓர் ஊக்கப் பரிசு என்று உணர்ந்து கொள்கிறேன்.

தேவன் அவர்களை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்ற அவா எழுகிறது – அது இந்த நிகழ்வின் வெற்றி.

+3

All reactions:

55Balasubramanian Kalyanaraman, Siragu Ravichandran and 53 others