
- கடவுள் குடிகொள்ளும் உள்ளம்
பிரெஞ்சு பாஷையைப் பாரதியார் நன்றாகக் கற்றார். தெலுங்கிலும் ப்ரேமையுண்டு. தியாகராஜரின் கீர்த்தனைகளை மிக ரஸிப்பார்; அவருக்குப் பிரியமானவை ‘நகுமோமு’, ‘சக்கனிராஜ’, ‘மாருபல்க’, ‘ஜெய ஜெய கோகுல பால’ முதலியன. அர்த்தத்தைச் சிதைத்து யாரேனும் பாடினால் அளவற்ற கோபமடைவார். தீக்ஷிதர் கீர்த்தனங்களும் பாடம் உண்டு. அவை போன்ற பந்தாவில் சில பாட்டுக்கள் இயற்றினார்.
“புதியதில் ஆசை; நைந்ததில் வெறுப்பு; பேசும் போது கிளிபோலக் கொஞ்ச வேண்டும்; கர்ண கடூரமாகப் பேசுவது கூடாது; பேச்சே ஒரு சங்கீதம் போல அமைய வேண்டும்” என்பன பாரதியாரின் தனிப்போக்குகள்.
ஒருநாள் நாங்கள் சற்றுக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று வந்து ஹார்மோனியத்தை எல்லாக் கட்டைகளையும் அழுத்திக் கொண்டு சுருதி போட்டார். திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்திவிட்டுப் பார்க்கையில் சிரித்தார். அவரது செய்கைக்குப் பொருளென்ன என்று கேட்டதில், “உங்களது இனிமையான சம்பாஷணை காதுக்கு இவ்விதந்தான் இருந்தது. இனியாவது இவ்விதம் அபஸ்வரமாகப் பேசாதீர்கள்” என்று கூறினார்.
தாயுமானவர் பாடலை அதியற்புதமாக ராகமாலிகையில் பாடுவார். திருவாய்மொழிக்கு அழகான மெட்டுக்கள் போட்டுப் பாடுவார்.
-பாரதியார் அபிநயத்திலும் பாவத்திலும் முழு ஹிருதயத்தோடு நடித்துக் களிப்பதிலும், ரஸிப்பதிலும் பொழுது போக்குவார். “பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி!” என்ற பாட்டை ஆவேசத்தோடு பாடும் போது, ‘காமப் பிசாசை’ என்றதும், காலால் ஓங்கித் தரையில் மிதிப்பார். ‘தாமதப் பேயை’ எதிரில் நிஜமாகவே வந்து நிற்கிறதென்று கையை ஓங்கி அறைவார். ‘தேம்பற்பிசாசை’க் கையில் திருகுவார். “இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசம் செய்யாதே!” என்று தலையில் அடித்துக் கொள்வார். நான், “என்னடா! தலையிலா பார்வதி சக்தியிருக்கிறாள்” என்று நினைப்பேன். அவரது உள்ளமும் சரீரமும் பராசக்தியோடு எப்போதும் லயித்திருந்தது என்பது எனக்கு எப்படித் தெரியும்.
“தகதீர் ஹமாரா இன்தினோ கைஸே பதல் கயீ.” இது ஒரு ஹிந்தி நாடகப் பாட்டு; அதில் ஒரு கதாநாயகன் ஒரு ராஜகுமாரனாக இருந்த சமயம் நாடிழந்து மிகக் கேவல ஸ்திதியில் இருக்கும்போது, “என் தலைவிதி எப்படியாய் விட்டது, பார்த்தாயா?” என்று மனம் நொந்து துயரத்தோடு பிரலாபிக்கும் சோகரஸப் பாட்டு. அப்பா அதே பாட்டை “பாரதி இன்று துயரம் நீங்கி ஜீவன் முக்தனாகிவிட்டான், எப்படி மாறிவிட்டான் பார்த்தாயா?” என்று களிப்புடன் பாடுவார்; “மாறுதல்தானே? எப்படி வேண்டுமானாலும் மாற்றலாமல்லவா?” என்பார்.
நமது பாரத தேசம் பரதனால் பரத கண்டம் என்று சிறப்புற்றது. அநேக காலங்களுக்குப் பின்பு அடிமை வாழ்க்கையின் பலனாய் உயிரற்றுப் போயிருந்த பரத கண்டத்தில் தென்னாட்டிற்குப் பாரதியென்ற பேர் கொண்ட ஒருவரால் புதுயுகம் தோன்றியிருக்கின்றது. ராமாவதாரத்தில் கூனிப் போகும்படி செய்து கூனியின் கூனலைக் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிமிர்த்தினான். தமது கவிதா சக்தியினால், மின்சார சக்தி கொண்ட பாக்களினால், தமிழ்நாட்டின் கூனலைப் பாரதி நிமிர்த்தினார். தமிழரின் முடியைக் ‘கோபுரம் போல’ நிமிர்த்த நிலை செய்தும் வண்ணம் ஆக்கியவர் பாரதியார்.
இன்றும் தெய்வ மந்திரச் சொல்லான ‘வந்தே மாதரம்’ என் காதில் விழுந்ததும் பாரதியாரின் விழிகளும், அன்பும், வீரமும் நிறைந்த சிவாஜியின் முகம் போன்ற அவரது முகமும் ‘இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்தது போல்’ இடிமுழக்கம் போன்ற குரலில் வீர ரஸத்தை அள்ளிவிடும் புதிய விடுதலைப் பாடல்களைச் சிங்கம் போல் கர்ஜிப்பதும் அகக்கண் முன் தோன்றிச் சிறிது நேரம் ஸ்தம்பித்துவிடச் செய்கின்றது. பட்டினத்தார் ஜனங்களுக்கு அறிவுறுத்துவதற்காகச் சிறிது காலம் குடும்பம் நடத்தியதுபோல் பாரதியும் நடத்தினார்.
வற்றாத கலைச் செல்வத்தை அளித்த அந்தப் பராசக்திக்கு ஸ்ரீ பாரதியார் தன்னை அறியாமலேயே முடிவணங்குவார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது பாரதியாரின் தனிமுறை. அதுவும் சக்தி அளித்த விசேஷ தெய்வஒளி பெற்ற தங்கப் பரிசு. ‘இந்நாளில் தேச சேவை எளிதாக இருக்கலாம். அந்நாளில் அரிகண்டம் யமகண்டம் என்று சொல்லுவார்களே; அதைவிடக் கொடியது. என்றாலும், அந்தப் பாரத சக்தியின் திவ்ய அருளினாலேதான் பாரதியார் எங்கும் பொங்கும் மங்கள கீர்த்தியைப் பெற்று விளங்கினார் என்பது வெளிப்படை.
செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”
Comments are closed.