
- புதுமைப்பெண்
அவர் ஒரு புதுமைப் பித்தர்; அவருடைய நோக்கங்க ளெல்லாம் உயரிய நோக்கங்கள். சமுத்திரக் கரைக்கு எல்லோரும் செல்வது வழக்கம். பெண்கள் பர்தா வழக்கம் அவருக்குப் பிடிக்காது. ஆனால் பெண்கள் வரம்பு மீறி நாகரீகமென்று சொல்லிக்கொண்டு நடப்பதும் பிடிக்காது பெண்களை உள்ளே அடக்கி வைக்கக்கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்களோடு பழகவேண்டும். அங்ஙனமே ஆடவர்களும் ஸ்திரீகளும் மத்தியில் உள்ளத்தில் வேண்டும். இப்படி ஜாக்கிரதையுடன் சிறிது காலம் நடந்தால் மாசின்றி உறவாட தனியே ஒவ்வொருவர் மனமும் பரிசுத்தமாகிவிடும். மூடி மூடி வைப்பதால், புருஷர்களுக்குப் பின்னும் பெண்களைப் பார்ப்பதில் ஆசை அதிகமாக வரம்பு மீறியும் ஹேது உண்டா கின்றது. இத்தகைய கொள்கையை உடையவர் பாரதியார்.
இவ்விதமான ஏற்பாட்டினால் எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் பெண்கள் தாம் அவர்களை வரவேற்று உபசரித்து மாடியில் தங்கள் தகப்பனாரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் மூன்றாவது மாடியில் உலாவிக் கொண்டிருப் பார். அவர் மனதிற்கு நாம் நடப்பது, நினைப்பது முதல் தெரிந்துவிடும். காதும் கண்ணும் மிகக் கூர்மையுடையன.
பெண்கள் யாருக்கும் அஞ்சித் தலையைக் கவிழக்கூடாது. யாரேனும் விடர்கள் கெட்ட ஹிருதயத்தோடு உன்னை தோக்கினால், நீ அவனைத் தைரியமாகப் பத்து நிமிஷம் உத்துப்பார். அவன் வெட்கித் தலைகுனிந்து விடுவான். அல்லது அவன் முகத்தில் திடீரென்று உமிழ்ந்துவிட்டு அப்பால் செல்” என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வார்.
குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே விவாஹத்தையும், உருவனையும் பற்றிச் சொல்லிச் சொல்லி அவர்கள் மனத்தில் ஆசையை வளர்க்கக் கூடாது. அப்படி மாசற்ற மனத்தில் ஆசைக் கனவை மூட்டிவிட்டால் அவர்கள் மனத்தின்படி கணவன் அல்லது மனைவி வாய்க்காவிடின், மனமுடைந்து வாழ்க்கை ஒரு பாலைவனம் என்று தீர்மானித்துவிடுவார்கள்.
“மனத்தில் ஒவ்வொரு யுவதியும் தனக்கு ஒரு சுந்தர மனோகரனைக் கணவனாக எதிர்பார்த்திருந்து, தனது விருப்பத்தில் இடி விழுந்தாற் போல், கோரரூபமுடைய ஒரு ராக்ஷஸனைக் கணவனாகப் பெற்று, மனத்தில் நோயுண்டாகி, அந்த அதிர்ச்சி சரீரத்தையும் தாக்க, சிறு வயதிலேயே மரணமடையும்படியான நிலைமைக்கு ஆளாகின்றார்கள்” என்பது அவரது எண்ணம்.
அடிக்கடி மௌன விரதம் பூண்டு அவர் இருப்பதுண்டு. சேர்ந்தாற்போல் 15 அல்லது 20 தினம்கூட அவ்விதம் இருப்பார். பாட்டு மட்டும் பாடுவார். மற்றப்படி சம்பாஷணை கள் யாவும் எழுத்து மூலமாகவே நடைபெறும்.
ஒருநாள் மௌன விரதத்தில் ராக ஆலாபனை வெகு நன்றாக உள்ளமுருகும் வண்ணம் செய்து கொண்டிருந்தார்; நாங்கள் யாவரும் அதிலேயே லயித்திருந்தோம். உடனே எழுதுகோலை எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்தார். எங்கள் பெரிய பெண் அவரருகில் சென்று உற்று நோக்கினாள். அவள் சற்றுப் பதற்றக்காரி.
‘நான் கல்யா’ என்று பாரதியார் எழுதிக்கொண்டிருப் பதைப் பார்த்துவிட்டு, “கல்யாணமா” “கல்யாணமா” என்றாள். அவர் சிரித்துவிட்டு, “பொறுமையோடிரு. நான் கல்யாணி சுப்பிரமணிய பாரதி என்று பேர் கிடைக்கும் வண்ணம் அதியற்புதமாக அந்த ராகத்தைப் பாடி வழக்கப்படுத்திக் கொள்ளப் போகிறேன்” என்று எழுதிவிட்டு, “கல்யாணப் பந்தம் செய்து கொள்வது மிக எளிது. ஆனால், அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது” என்று முடித்தார். குழந்தை மனத்தில் அந்தக் ‘கல்யாணம்’ என்ற எண்ணத்தைப் பதியவிடக்கூடாது என்பதே அவர் நோக்கம்.
செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “பாரதியார் சரித்திரம்/செல்லம்மா பாரதி”
Comments are closed.