வி சாந்தா/கொய்யா குறித்த ஒய்யார நினைவுகளில்…

 

முக நூல் பதிவு என்று நினைத்தால் அரசியல்,சினிமா தவிர நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சென்ற வாரம் அப்படி என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் எது தெரியுமா?

சத்தமில்லாமல் விவசாயிகள் செய்த சாதனை—

கொய்யாப் பழ விளைச்சல்தான் அது.

கொய்யாவின் மகத்துவம் லேசுப் பட்டதல்ல.  ஒரு  ஆப்பிள் பழம் தரும்  சத்துக்களை விட அதிகம் சத்து அளிக்கிறது. Pro biotic என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு செடி முழுக்கக் காய்த்து இலை தெரியாமல் காட்சியளிக்கும்.  பல வகைகள் உண்டு.

பழுத்ததும் மஞ்சள் நிறம் பெறும். உள்ளே pinkம் இல்லாமல், சிவப்பும் இல்லாமல் ஒரு Mixed color ல் விதைகளின் Superb segmentationல் காணப்படும்.  செமை இனிப்பானவையும் உண்டு. கொள்கை இல்லாத சில கட்சிகள் மாதிரி  சவசவ என்ற மொக்கைப் பழங்களும் உண்டு.

காயிலேயே இனிக்கும் ஒரு வகை.  தென்மாநில கொய்யாக்களுக்கு எருமை கொய்யா என்று  பெயர் வைத்தவர்கள் மீது வழக்கு போடலாம்  

கொய்யா மீது பல் மருத்துவர்களுக்கு விசுவாசம் கலந்த நன்றி இருக்கும்.  பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட ஒரு கொய்யாவிதை  பல்வலி ஏற்படுத்தி, மருத்துவர்களுக்கு மஹாலஷ்மி அருளை அளிக்கும்.  எனினும் அவர்கள் ‘அது மிகச் சிறந்த பழம்,பார்த்து, ஜாக்கிரதையாகச் சாப்பிடுங்கள்’ என்றே சொல்வார்கள்.

ஒரு கொய்யாச் செடி மரமாகவே வளரும். கூடை கூடையாகக் காய்த்துக் கொட்டும். அவ்வளவாய்த் தண்ணீர் விட வேண்டாம்.

ஒரு காலத்தில் கொய்யாச் செடியில் காய்த்த பழங்களைப் பள்ளிக்குச் செல்லும் முன்னர், அம்மா கூடையில் வைத்துத் தர, தெரிந்த, அறிந்த வீடுகள்தோறும் போய் பத்துப் பைசாவில் தொடங்கி நாலணா வரைக்கும் விற்றுவிட்டு வந்த சிறுவர்,சிறுமியர் பாதுகாப்பாகப் பணத்துடன் திரும்பி வந்தது உண்டு.

இப்போது கொய்யாச் செடியும் இல்லை.  விற்கப்பழங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் பாதுகாப்பும் இல்லை என்பது வேதனை.

இப்போதெல்லாம் ஏக்கர் கணக்கில் GROUP FARMING ஆக கொய்யா மிகவும் அழகாகச் செடிகளாக நட்டு வைக்கப்பட்டு காய்க்கிறது.

கிலோ அம்பதுன்னா வேண்டாம். நாப்பதுன்னா கொடு என்று இன்றுவரை பேரம் பேசும் பலருக்கு ஒரே வாரத்தில் 1600 ரூபாய் ஏறிய தங்கத்தின் விலைதான் இந்த

கொய்யாவின் விலையையும் நிர்ணயம் செய்கிறது என்பது ஏன் புரிவதில்லை?

சிருஷ்டிக்கப்பட்டபோதே இதன் மகிமையும் உருவானது. ஆனால் புரிந்து கொண்டாடுவதற்கான சூழல் இன்னும் வரவில்லை என்றே நான் கருதுகிறேன்.

வடமாநிலத்தவர்களின் FAVOURITE ஆன இந்த கொய்யாவை அவர்கள் உப்பு அல்லது செயற்கை மிளகாய்ப் பொடி தொட்டுச் சாப்பிடுவார்கள்.

நல்ல கொய்யாவைத் தேடிக் கடிப்பதில் அணில் கில்லாடி.  நமக்கு சில சமயம் வாய்த்துவிடும்:  மற்ற சமயங்களில் விஜய் சேதுபதி EXPRESSION மாதிரி நன்றாகவும் 

அமையும்; சப்பென்றும் போய்விடும்.

அளவோடு சாப்பிட்டால் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கும் உகந்தது.  குழந்தைகளின் பிரியத்துக்குகந்தது – அல்ல. நாம்தான் பழக்கவேண்டும். 

AR.V (மறைந்த என் அன்புத் துணைவர் திரு வெங்கடாசலம்) இந்த நல்ல பழக்கத்தினை ஐந்து வயதாக இருக்கும்போதே எங்கள் ஆண்டாளுக்குப் பழக்கி விட்டார். அப்பாடி!!!  (பதிவுக்குள் இரண்டுபேரையும் கொண்டு வந்துவிட்டேன்) காரணம் சொல்லி முடிக்கிறேன். (வழக்கமான ஆனால் மிகமிக முக்கியமான 2 பின் குறிப்புகளுடன்)

எங்கள் காரைக்குடி வீட்டில் ஒரு கொய்யாமரம் இருந்தது. பழங்களை கலெக்ட் செய்து தன் அம்மாவிடம் ஒப்படைக்கும் வேலையும் செய்துகொடுப்பாராம் AR.V.

நான் மணமாகி வந்தபோதும் வீடு தேடி வந்து கேட்பவர்களுக்கு எல்லாம் கொடுப்பதையும் ஒரு அக்கா வந்து வாங்கிக்கொண்டு போவதை எல்லாம் பார்த்திருக்கிறேன். 

அந்த மரம் இருந்த சைட் போர்ட்டிகோவுக்கு கொய்யா மரத்தடி போர்ட்டிகோ என்றே பெயர்.பள்ளத்தூர் காலேஜ் பஸ் மாணவிகள் காத்திருப்பார்கள்.

இப்போது கொய்யா மரமும் இல்லை. மாணவிகள் காத்திருப்பதும் இல்லை. THOSE DAYS ARE GONE. எஞ்சியிருப்பவை அந்தப் போர்ட்டிகோ படியில் அமர்ந்து நாங்கள் அரட்டை அடித்த மலரும் நினைவுகள் மட்டுமே. 

பின் குறிப்பு 1: என்னை எழுத வைத்தது சென்ற வார நாளிதழில் நான் படித்த ஒரு செய்தியும் பார்த்த புகைப்படமுமே. 

செய்தி: அபார விளைச்சல் காரணமாக கொய்யா விலை வீழ்ச்சி. கிலோ இருபது ரூபாய்க்கு சரிந்தது. இணைப்பு புகைப்படத்தில், ஒரு லாரி முழுக்க கொய்யாப் பழங்கள்.

பின் குறிப்பு 2: அன்றைய தினம் பழக்காரப் பாட்டி, கிலோ அறுபது சொன்ன விலையை நான் குறைத்துக் கேட்கவேயில்லை. அம்பதுக்கே போடறேம்மா என்று சொன்னபோது சரி என்று சொல்லி வாங்கிக் கொண்டேன்.  ஒரு இனிய நினைவு மிதந்து வந்தது: ‘இவ விலை குறைச்சுக் கேட்கவே மாட்டா. போனாப் போகுதுங்கன்னு

என்னை வில்லனாக்கிடுவா என்று சொல்லியவாறு அதே தொகையைக் கொடுப்பார் என் ‘ONE AND ONLY HERO AR.V.’

                                                                                                        (கட்டுரையாளர்: வி சாந்தா, இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி. மதுரையில் வசித்து வருகிறார்.)