
இன்று காலை நீராடி
நான் முகம் திருத்த;
கண்ணாடி முன் நிற்க:
என் எழுபத்தைந்து அகவை
முகமும் கூடவே வந்து நின்றது.
வெண் சாமரம் நிரக்க;
கத்தரிக்கப்பட்ட
வெண் முடி…
வகிட்டின் குங்குமத்
திலகத்தின் எள்ளல் பார்வை.
பஞ்சுப் பொதி என்னும் வெண் கேசத்தின் மேல்!
பொருட்டல்ல அது.…
குள்ளமான மா நிறத்திற்கும்
ஒரிரு மாற்று குறைந்த உருவம்..
முகத்தில் அங்கும் இங்குமாய் கருமை நிழல்கள்..
சற்றே தூக்கின பல் வரிசை..
நாசியும் எடுப்பாய் இல்லையே!
மூக்குக் கண்ணாடியின் அழுத்தக் கோடு..
நாசியின் இருபுறமும்
காகத்தின் கால் போல்..
ஆ! இது என்ன!
காதருகில் சிறு கரும் புள்ளி !
“சட்” என ஒரு நினைப்பு!
சே! நான் சற்றே…
சற்றே அழகாய் இருக்கலாம்!
இருந்து இருக்கலாம்…
இந்த நினைப்பு பதின் வயதில் வந்ததே இல்லை..
இந்த நினைப்பும் கூடவே வந்தது.
வாழ்க்கையை எட்டிப் பிடிக்கும் விழைவு..
படிப்பு… தேர்வுகள் பணி.
இவைகளே என் முகமாய் இருந்தது.
இதில் முக அழகு பற்றி நினைக்க நேரம்தான் எங்கே?
இத்தனை நாட்களும்
என் முகம் எப்படி இருக்கும்… இருந்தது..
என்று எவரும் என்னிடம் உரைக்கவில்லை.
இன்றுதான் தெரிந்தது.
எனினும் நானே அறிவேன் …
நான் அழகானவள் அல்ல என…
என் அழகு என்பது
படிப்பு ஊதியம் நேர்மை திறமை
முயற்சி,துணிவு மட்டுமே…
அனைத்தும் அறிந்திருந்தும் கண்ணாடி சொல்லியது…
நீ சற்று … சற்றே அழகாக இருந்திருக்கலாம் என்று;
இத்தனை நாளும் முகம் பார்க்காமல்
ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேனா?
முகம் பார்க்கும் ஆடி இன்று சொல்லியது அதை…
