கோ யுன்/எனது அடுத்த வாழ்க்கை



தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


சியோ-உன் மலையின் காடுகளுக்குள் நுழைந்தேன். கடைசியாக வீடடைந்தாயிற்று.
நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.
நிழல்கள் நிழல்களின் மேல் குவிக்கப்பட்டிருந்தன.
நான் என்னோடு கொண்டுவந்திருந்த
குடித்திருந்த சில ஒளிக் கற்றைகளை
நான் என்னிடமிருந்து போகவிட்டேன். இரவு விழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் தோல்வியே இல்லாமல் சுதந்திரம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது.

நானும் கூட சிறுகச் சிறுக
கடந்த நூறாண்டுகளின் குப்பைகளை என்னை விட்டுப் போகவிட்டேன்.
அடுத்த நாள் காலை
எனது காலி சிலந்திவலைகளில்
பனித்துளிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
உலகில் பல்வேறு இறந்தகாலங்கள் இருக்கின்றன.
எதிர்காலம் சுருங்கிவிட்டது.
காற்றிற்கு அப்பாலான ஆக்கக்கூறுகள்
மென்மையாகக் காட்டுக்குள் நுழைந்தன.
கருவாலி மரங்களின் இலைகள்
கூடு திரும்பும் பறவைகளைப் போல
குறுவொலிகள் எழுப்புகின்றன.
திரும்பிப் பார்க்கையில்
நான் எழுதப்படிக்கத் தெரியாத தலைமுறைகளிடமிருந்து
வந்திருக்கிறேன். .

ஏதோ ஒருவகையில்,
ஏதோ ஒரு வகையில்,
தப்பமுடியாதவாறு பசையாய் அடரும்
ஒரு மொழியில் நான் சிக்கிக்கொண்டிருக்கிறேன்.

எனது அடுத்த பிறவியில் நானொரு மூச்சற்ற கல்லாய்
தரைக்குக் கீழே ஆழத்தில்
ஒரு ஊமை விதவையின் எலும்புக்கூட்டுக்குக் கீழ்
வைக்கோல் பைகளில் பொதியப்பட்ட பல புதிய
மௌனமான அனாதைகளின் கீழே
கிடப்பேன்.