கேரள இலக்கிய வெளியில்/போகன் சங்கர்

கேரள இலக்கிய வெளியில் ஒரு காலகட்டத்தில் மிக நல்ல வாழ்க்கை வரலாற்று நூல்கள் வந்து பெரும் வரவேற்பை பெற்றன. நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள் ஆமென், ஒரு பாலியல் தொழிலாளி யின் நினைவு குறிப்புகள் போன்ற பல நூல்கள் கேரளத்தின் சிந்தனையை பெருமளவு பாதித்தன. இதன் எதிர்மறை விளைவாக ஒன்று நிகழ்ந்தது. இந்த மாதிரியான முற்போக்கு நூல்களுக்கு அங்கே ஒரு பெரிய சந்தை விரிந்தது. அதன் விளைவாக பல போலி முற்போக்கு நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஒரு புகழ் பெற்ற உதாரணமாக இங்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருடன் மணியம் பிள்ளையின் கதையை சொல்லுவேன். கொல்லத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடிகாரர் மற்றும் திருடன் ஆன மணியம்பிள்ளையின் கதையை இந்துகோபன் என்ற எழுத்தாளர் மானே தேனே முற்போக்கு புரட்சியாளனே என்றெல்லாம் சேர்த்து கேரளத்தின் ஜெனேயைப் போல் அவரை ஆக்கிவிட்டார். ஒரு நேர்மையான, மனசாட்சி உள்ள, சமூகத்தால் திருடனாக்கப்பட்ட ஒரு நல்ல திருடன் பற்றிய கதை. இதுதான் ரன்னிங் தீம்.அந்த நூல் கேரளத்தில் மிகப் பெரும் வரவேற்பு பெற்றதோடு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரிய வரவேற்பு பெற்றது. அவரது வரலாற்றைப் படமாக்க இங்கு பெரிய போட்டியே நடந்தது. அந்த நூல் வந்த புதிதில் அதை படித்து விட்டு கிளர்ச்சியடைந்து அவரைப் பார்க்க பலர் கேரளம் சென்றார்கள். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் நேரில் அவர் எனக்கு ஒரு சாதாரண குடிகாரர் போல் தான் தெரிந்தார். கையில் தாயத்து மந்திர தகடு சாய் பாபா படம் என்று சற்று சுவாரசியமான குடிகாரர் என்றே தோன்றியது. இந்துகோபன் காட்டிய முற்போக்கு எதையும் அவரிடம் நான் காணவில்லை.ஆனால் என் மனம் அதை நம்ப மறுத்தது. அவரது வாழ்க்கை வரலாறு அதற்குள் கேரளத்தில் பல பல்கலைக்கழகங்களில் பாடமாகி இருந்தது. தமிழ்நாட்டிலும் சில இலக்கிய கூட்டங்களில் வந்து பேசியிருக்கிறார். அவர் அப்படியே இருந்திருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். கேரள சேனல்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லாமல் போனது. அவர்களுக்கு அவர் பேச்சை எங்கே வெட்ட வேண்டும் என்று தெரியும். தமிழ்நாட்டில் இருந்து ஒரு சேனல் போனது. அதில் அவர் திருடப் போன இடத்தில் நிறைய பெண்களிடம் சுகம் அனுபவித்ததாக தற்பெருமையோடு உளறுவதைக் கண்டபிறகு அங்கு இருக்கிற பெண்ணிய அமைப்புகள் கொதித்து எழுந்தன. அவர் பற்றிய நூல் கல்விக்கூடங்களில் இருந்து நீக்கப்பட்டது. இப்போது ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.