மா. காளிதாஸ் கவிதை

1.
ஒரேயொரு கொடுக்காப்புளி
கிடைத்தால் போதும்
இந்த வெப்பம் தணிந்து கொள்ளும்
தனக்குத் தானே.

2.
இளைப்பாற இடம் தேடும்
வெப்பத்தின் கால்களில்
எத்தனை ஆணிகள்!

3.
விளையாடித் தீர்ந்துவிடும்
இந்த வெப்பம்.
பிறகு குளிர் ஆடும்
ஒரு சின்னஞ்சிறிய கண்ணாமூச்சி.

4.
ஒரு சிறிய லென்ஸ் கொண்டு
குவிக்கிறான் குளிரை.
பற்றியெரிகிறது
இன்னொரு குளிர்.

5.
மீப்பெருவெளி அன்பு.
குளிரூட்டப்பட்ட தனி அறைகள்
காதலும் காமமும்.

6.
கோப்பைத் தேநீரில்
அவரவர்க்குத் தகுந்தாற்போல்
இரண்டறக் கலந்துள்ளது
கொஞ்சம் வெப்பம்
கொஞ்சம் குளிர்.

7.
முதல்முறை சுடும்போது
கொதிக்கிறது.
அடுத்தடுத்து சுட வைக்க
சுவை கூடிக் குளிர்கிறது.