ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்/தனசேகரன் முத்தையா

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் பகுதி

பண்டித சசதருடன்

புதன், ஜூன் 25, 1884

ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே சென்றபோது, அருகிலுள்ள கல்லூரி சாலையில் சட்டர்ஜியின் வீட்டில் பண்டித சசதர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரைக் காண விரும்பினார். மாலையில் அவரைப் பார்க்கச் செல்வது என்று முடிவு செய்தனர்.

காலை 10 மணி இருக்கும். ஈசானின் வீட்டில் கீழ்த்தளத்திலுள்ள வரவேற்பறையில் குருதேவர் பக்தர்களுடன் அமர்ந்திருந்தார். ஈசானுக்குத் தெரிந்த ஓரிரு பாட்பாடா பிராமணர்களும் வந்திருந்தனர். அவர்களுள் ஒருவர் பாகவத பண்டிதர். குருதேவருடன் ஹாஸ்ராவும் மற்ற ஓரிரு பக்தர்களும் வந்திருந்தனர். ஸ்ரீசரும் ஈசானின் மற்ற பிள்ளைகளும் அங்கு இருந்தனர். ஒரு தாந்திரிக பக்தரும் வந்திருந்தார். அவர் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். அதைக் கண்ட குருதேவர் சிரித்துக்கொண்டே, ‘என்ன இவருக்கு முத்திரை குத்தியிருக்கிறதே!’ என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ம-வும் நரேந்திரரும் வந்தனர். இருவரும் குருதேவரை வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தனர். தாம் இன்னும் சில நாட்களில் ஈசானின் வீட்டுக்குச் செல்வதாகவும் நரேந்திரனை அழைத்துக்கொண்டு அங்கு செல்லுமாறும் குருதேவர் ஏற்கனவே ம-விடம் கூறியிருந்தார். ம-வைக் கண்டதும் குருதேவர் அவரிடம், ‘அன்று உன் வீட்டிற்கு வர நினைத்தேன். ஆமாம், உன் வீட்டு முகவரி என்ன?’ என்று கேட்டார்.

ம – : ‘சுவாமி தற்போது சியாம்புகூரில் தேலிபாடா பள்ளிக் கூடத்திற்கு அருகில் வசித்து வருகிறேன்.’

ஸ்ரீராமகிருஷ்ணர் :’இன்று பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லையா?

ம- : ‘இல்லை சுவாமி. இன்று ரத யாத்திரை விடுமுறை.’

நரேந்திரருடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு வீடு வறுமையில் வாடியது. வீட்டிற்கு மூத்த மகன் அவர். சிறு வயது சகோதர சகோதரிகள் ஓரிருவர் இருந்தனர். தந்தை ஒரு வக்கீலாக இருந்தார். அவர் சொத்து எதையும் விட்டுச் செல்லவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி நரேந்திரர் வேலை தேடிக் கொண்டிருந்தார். அவரது வேலைக்காக குருதேவர் ஈசான் முதலிய பக்தர்களிடம் சொல்லி வைத்திருந்தார். ஈசான் கண்ட்ரோலர் ஜெனரல் ஆபீஸில் ஓர் அதிகாரியாக இருந்தார். குருதேவர் நரேந்திரரைப்பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார்; ‘நான் உன்னைப்பற்றி ஈசானிடம் சொல்லியிருக்கிறேன். ஒருநாள் ஈசான் தட்சிணேசுவரத்திற்கு வந்திருந்தார் அல்லவா? அப்போதுதான் சொன்னேன்.அவருக்கு பலரைத் தெரியும்’ என்றார்.

பாட்டு ஆரம்பமாக இருந்தது. தம்புரா, தபேலா முதலிய பக்க வாத்தியங்கள் தயாராக இருந்தன. அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் மிருதங்கத்தில் தடவுவதற்காக ஒரு பாத்திரத்தில் மைதா மாவு கொண்டு வந்து வைத்தார். மணி பதினொன்று. நரேந்திரர் பாட வேண்டுமென்று ஈசான் விரும்பினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் (ஈசானிடம்): ‘இப்போதுதான் மைதா வருகிறதா! அப்படியானால் சாப்பாட்டிற்கு நீண்ட நேரம் ஆவது உறுதி.’

ஈசான்: (சிரித்துக்கொண்டே) ‘இல்லை சுவாமி, அவ்வளவு நேரம் ஆகாது.’

பக்தர்கள் பலர் சிரித்தனர். பாகவத பண்டிதரும் சிரித்துக் கொண்டே ஒரு சுலோகத்தைச் சொன்னார். பிறகு அதற்குப்

பொருள் கூறினார்-

‘தத்துவ சாஸ்திரங்களைவிட காவியங்கள் மனத்தைக் கவரக் கூடியவை. காவியங்களைப் படிக்கும்போதோ கேட்கும்போதோ வேதாந்தம், சாங்கியம், நியாயம்,பாதஞ்ஜலம் என்று தத்துவ சாஸ்திரம் எல்லாம் வறண்டதாகத் தோன்றுகின்றன. காவியங்களைவிட மனத்தைச் சுண்டியிழுப்பது பாட்டு. பாட்டினால் கல்நெஞ்சும் கரைந்துவிடுகிறது. சங்கீதத்திற்கு இவ்வளவு கவர்ச்சி இருந்தாலும் ஓர் அழகான பெண் அருகில் வந்தால் காவியம் சுவை இழந்து விடுகிறது; சங்கீதம்கூட மனத்தைக் கவர்வதில்லை. மனம் முழுவதும் பெண்ணையே நாடிச் செல்கிறது. ஆனால் பசி வந்தாலோ காவியம், சங்கீதம், பெண் எதுவுமே பிடிப்ப தில்லை. அன்ன விசாரம் அதுவே விசாரம்.’

ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு) : ‘இவர் நல்ல ரசிகர்.’

வாத்தியங்களுக்கு சுருதி கூட்டினர். நரேந்திரர் பாட ஆரம்பித்தார். சிறிதுநேரத்தில் குருதேவர் ஓய்வெடுக்க மாடியில் உள்ள விருந்தினர் அறைக்குச் சென்றார்.அவருடன் ம – வும் ஸ்ரீசரும் சென்றார்கள். விருந்தினர் அறை தெருவை அடுத்து இருந்தது. இந்த அறையைக் கட்டியவர் ஈசானின் மாமனாராகிய க்ஷேத்ரநாத்.

ஸ்ரீசரை குருதேவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ம-: ‘இவர் படித்தவர், மிகவும் சாந்த குணம் உடையவர். சிறுவயதிலிருந்தே நாங்களிருவரும் சேர்ந்து படித்தோம். தற்போது வக்கீலாக இருக்கிறார்.’

ஸ்ரீராமகிருஷ்ணர்: ‘இப்படிப்பட்டவர் வக்கீலாக இருப்பதா?

ம-: ‘தவறுதலாக அந்த வழியில் போக வேண்டிய தாயிற்று .

ஸ்ரீராமகிருஷ்ணர்: ‘கணேஷ் வக்கீலைப் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது தட்சிணேசுவரக் காளி கோயிலுக்கு பெரிய மனிதர்களுடன் வருவான். பன்னாவும் வருவான் – பார்க்க ஒன்றும் பிரமாதமாக இருக்க மாட்டான். ஆனால் நன்றாகப் பாடுவான். என்னிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை உண்டு. கள்ளங்கபடமற்றவன். (ஸ்ரீசரைப் பார்த்து) சாரம் என்று நீ எதைக் கருதுகிறாய்?’

ஸ்ரீசர்: ‘ஆண்டவன் ஒருவர் இருக்கிறார், அவர்தான் எல்லாவற்றையும் நடத்துகிறார். ஆனால் அவருடைய குணங்களைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ அது சரியல்ல.

மனிதன் அவரைப்பற்றி என்ன அறிய முடியும்? எல்லையற்ற விஷயமல்லவா அது?

ஸ்ரீராமகிருஷ்ணர்; ‘தோட்டத்தில் எத்தனை மரங்கள், எத்தனை கிளைகள் என்றெல்லாம் கணக்கிடுவதில் உனக்கு என்ன பயன்? மாம்பழம் சாப்பிடுவதற்காக நீ தோட்டத்திற்கு வந்திருக்கிறாய், பழத்தைச் சாப்பிட்டுவிட்டுப் போ. இறைவனிடம் பக்தியும் பிரேமையும் பெறுவதற்காகவே மனிதப் பிறவி இருக்கிறது. நீ பழத்தைச் சாப்பிட்டு விட்டுப் போ.

நீ கள் குடிக்க வந்திருக்கிறாய். கடையில் எவ்வளவு கள் இருக்கிறது என்ற விவரத்தால் உனக்கு என்ன பயன்? ஒரு டம்ளர் கள் உனக்குப் போதும். எல்லையற்ற விஷயங்களை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?

‘ஆண்டவனுடைய குணங்களைப்பற்றிக் கோடிக்கணக்கான வருடங்கள் ஆராய்ச்சி செய்தாலும் ஒன்றையும் அறிந்து கொள்ள இயலாது.’

குருதேவர் சிறிது மௌனமாக இருந்துவிட்டு மீண்டும் பேசினார். பாட்பாடாவைச் சேர்ந்த ஒரு பிராமணரும் அங்கே உட்கார்ந்திருந்தார்.

புத்தகம் :ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் பகுதி

பக்கம் :218,219,220,221