சசிகலா விஸ்வநாதன்/தப்பித்துக் கொள்

நாவினிக்க நயந்து பேசிடுவார்;
மனதினிக்க புன்னகை புரிவார்
மருளாதே ,அவர் சொல்லில்;
மயங்காதே அவர் புன்னகையில்;
தானே தானைத் தலைவன் என,
தமுக்கம் அடித்துச் சொல்லி;
தனக்குத் தானே முடி சூடும் அற்பர் அவர்.
உன்னிடம் அதற்கான
அங்கிகாரம் பெற வந்த பிச்சைக்காரர்;அவர்.
நீ போடும் பிச்சையில்,
கோமான் ஆகி கொழிப்பர்.
காரியம் ஆனபின்,
குரல் உயர்த்தி,
கையாட்டி பேசிடுவார்.
கண்டும் காணாதவர் போல்,கண் மூடி நின்று,
கால் அகட்டி நிற்பார்.
முன்னை உதவியோரை நண்ணாதிருப்பார்.
அன்றைய நண்பரை எண்ணாதிருப்பார்.
மனதொன்று நினைக்க,
வாயொன்று பேச,
கையொன்று செய்ய,
தாறு மாறாகப் பேசி;
ஏறு மாறாக நடப்பார்.
அவரைத் தலைவன் என்று எண்ணாதே!
முதுகில் தட்டிக் கொடுக்காதே!
தலையைத் தட்டி விடு.
உன் தலை தப்பிக்கும்.
தப்பி விடு, அவரிடமிருந்து.