தஞ்சாவூர் ஹரணி கவிதை

000

நரிகளின் கூட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது
ஊளைகளே பெரிதினும் பெரிதாய்…
ஓநாய்களின் குரல்வளைகளைப் புலிகள்
வாய்ப்பற்களால் அழுந்தப் பற்றியிருக்கின்றன..
பறவைகள் தங்களின் நிழல்களையும்
அங்கிருந்து அகற்றிக்கொண்டேகிவிட்டன..
மயில்களும் குயில்களும் தவிர்த்து யாவுமே..
கிழமான்கள் தளர்ந்துவிட்ட கண்களாலும்
வலுவிழந்துவிட்ட கால்களாலும்
பற்கள் கொட்டிய வாயில் உலர்புல்லை
ஊறவைத்து மெல்லுகின்றன..
கொன்று தின்பதும் கொல்லுவதன்றி
வேறெதனையும் நானறியேன் என்று
உறுதிப்படுத்திவிட்ட சிறுத்தைகள் பற்களோடு
பற்களை உரசி சிக்கியுள்ள ஈரக்கறியை
அசைபோடுகின்றன..
நாங்கள் இலவசமாக எப்போது கூப்பிட்டாலும்
நடமிடுகிறோம் அகவிச் சொல்லுகின்றன மயில்கள்
பாடுவதில் எப்போதும் எங்களுக்கு விருப்பமே
என்றும் குயில்கள் பயத்தை மறைத்தபடி..
முயல்கள் தொடங்கி சிறுசிறு விலங்குகளைச்
சேகரித்து குகையிலடைப்பது இரைக்காக
மட்டுமன்றி வேட்டைக்காலத்தைக் கொஞ்சம்
குறைக்கலாமென்றும்..
உருப்பெரிதென்பதால் யானைகளை எல்லாம்
திட்டப்படி நடக்கக் கண்காணிக்கச் சொல்லலாம்
யானைகள் பதிலுரைப்பதற்கு முன்னமே
முறத்துக் காதுகளையும் சிறுபாறை தலையையும்
ஆட்டிக்கொண்டேயிருப்பதைச் சம்மதமென்று
எடுத்துக்கொண்டன..
சிங்கம் இப்போது சொன்னது
கூட்டத்தைச் சீக்கிரம் முடியுங்கள்
என்ன நடக்கிறது இங்கேயென்று மந்தியின் குட்டிக்குப்
பறந்தபடியிருந்த பட்டாம்பூச்சி சொன்னது
வனத்தை வளமாக்கப்போகிறார்களாம்..