ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

தமிழில் : எஸ். ராஜேஸ்வரி

3

தூங்கப்போகுமுன் மாலைவெள்ளி நட்சத்திரத்தை அமைதியுடன் உன்னால் பார்க்க முடிந்திருக்குமென்று நம்புகிறேன். உன் இராப்பொழுது நல்லதாகவும், உன் அறைச்சாளரத்தின் வழியே நுழைந்த இதமான சூரிய வொளியோடு காலைப்பொழுது இனிதே துவங்கியிருக்கும் எனவும் நம்புகிறேன்.
அன்பைப் பற்றியும் அதன் அசாதாரணக் கனிவுநலம் பற்றியும் அதன் சக்தியைப் பற்றியும் எவ்வளவு குறைவாக நாம் அறிந்திருக்கிறோம்! எவ்வளவு சாதாரணமாக ‘அன்பு’ என்ற சொல்லை நாம் உபயோகிக்கிறோம்! படைத் தளபதி அச்சொல்லை உபயோகிக்கிறார்; கசாப்புக் கடைக்காரர் அச் சொல்லை உபயோகிக்கிறார்; செல்வந்தர் உபயோகிக்கிறார்; இளவயது ஆணும் பெண்ணும் அச்சொல்லை உபயோகிக்கி றார்கள். ஆனால், அன்பின் விரிந்து பரந்தத் தன்மையை, அதன் நிலைபேற்றை, அதன் அளவிடற்கரிய தன்மையைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா? எல்லா உயிர்களிடத்தும் அன்பு செயல் என்பது நிலைபேறு (eternity) பற்றிய விழிப்புணர்வு.
தொடர்பு கொண்டிருத்தல் எவ்வளவு உன்னதமானது! ‘குறிப்பிட்டவொரு உறவு’ என்ற வழக்கத்திற்கு எவ்வளவு சுலபமாக நாம் ஆட்பட்டு விடுகிறோம்! குறிப்பிட்டவொரு தொடர்பில், பல விஷயங்களை உள்ளபடியே ஏற்றுக் கொள்கிறோம், நிலைமையை ஒத்துக் கொள்கிறோம், எந்த மாறுபாட்டையும் நம்மால் சகிக்க முடிவதில்லை.
குறிப்பிட்டத் தொடர்பில், அனைத்திற்கும் வரையறை வகுக்கப்படுகிறது, மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டி விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. ஆக, தொடர்பு அவ்வளவு பலமாக இறுகக் கட்டப்படுவதால், அங்குப் புத்துணர்விற்கு எந்தவொரு வாய்ப்பும் இருப்பதில்லை, புதிய துளிர் துளிர்ப்பதற்கான வஸந்தத்தின் சுவாசம் அங்கிருப்பதில்லை. இவ்வாறு வரைமுறைக்குட்பட்ட உறவுகள், தொடர்பு என்றழைக்கப்படுகிறது.
தொடர்பு என்ற விஷயத்தை மிக நுணுக்கமாகக் கவனித்தால், அது, பொதுவழக்கில் தொடர்பு என்றழைக்கப் படுவதைக் காட்டிலும் சூட்சுமமானதென்பதையும் மின்னலை விட அதிவிரைவானதென்பதையும் பூமியை விட பரந்து விரிந்தவொன்று என்பதையும் நம்மால் காணமுடியும். தொடர்புதான் வாழ்க்கை என்றிருப்பதால், அது, பரந்து விரிந்ததாகவும் அதே நேரத்தில் சூட்சுமமானதாகவும் மின்னலைப் போன்றும் உள்ளது.
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். இந்நிலையில், தொடர்புகளை, மூர்க்கமானதாகவும் இறுக்கமானதாகவும் கட்டுக்குள் இருப்பதாகவும் நாம் ஆக்கி விட்டோம். இதனால், தொடர்பு, தன் அழகையும் மணத்தையும் இழந்து விடுகிறது. இதற்கெல்லாம் நாம் அன்புள்ளம் கொண்டிராததுதான் காரணம்.
அன்பு செலுத்துவதுதான் அனைத்திலும் மேம்பட்ட உன்னதமான ஒன்று என்பது தெள்ளத் தெளிவு. அன்புடைமையில் தன்னை முற்றிலுமாக இழத்தல் என்பது இருப்பதால் அது மேன்மையான ஒன்றாகிறது.
வாழ்க்கையில் புத்துணர்வும், புதுமையும் இருப்பது மிகவும் அவசியம். அவ்வாறில்லையெனில், வாழ்க்கை இயந்திரகதியில் இயங்கும் இயல்பினதாய் ஆகிவிடும்; அன்பு என்பது ஒரு பழக்கவழக்கமல்ல, சலிப்பூட்டும் ஒரு விஷயமல்ல.
நம்மில் பெரும்பாலோர் வியப்புணர்ச்சியே இல்லாதவர்களாய் உள்ளனர். எதுவும் அவர்களை அதிசயிக்க வைப்பதில்லை, வியப்படைய வைப்பதில்லை, எதையும் அறிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் இல்லை. எதையும் ஆராயப்புகாமல், சுய பாதுகாப்பிற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பாதுகாப்புணர்வானது, சுதந்திரமாய் செயல்படுவதைத் தடுக்கிறது. மற்றும், நிச்சயமற்றதை அதிசயிக்கும் வியப்புணர்ச்சியை அழித்துவிடுகிறது.
தற்சமயத்திலிருந்து வெகுவாக விலகியிருக்கும், தூரத்திலிருக்கும் எதிர்காலத்தை நாம் முன்னிலைப் படுத்துகிறோம். புரிதலுக்கான கவனம் எப்பொழுதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கும். கவனத்தோடு இருக்கும் போது உறுதியான நிலைப்பாட்டுணர்வு அங்கு கட்டாயம் இருக்கும். செயலுக்கான நோக்கத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமானக் காரியம்; நோக்கமே தீச்சுடராய் ஒளிர்ந்து, புரிந்து கொள்ள ஒருவரை சதா தூண்டுகிறது.
நோக்கத்தில் தெளிவோடு இரு உன்னால் முழுமையாக அப்போது பார்க்கமுடியும் – பின்பு, செயல்கள் இனிதே நிறைவேறும். ஒருவரின் இன்றியமையாத தேவை, நிகழ்காலத்தில் தெளிவுடன் இருப்பது என்பதே. கேட்பதற்கு சுலபமானதாகத் தோன்றினாலும், இது அவ்வளவு சுலபமானதல்ல. விதை விதைப்பதற்கு, நிலத்தைப் பண்படுத்த வேண்டும், களை அகற்ற வேண்டும், நிலத்தில் விதையை ஊன்றியபின், விதையின் வீரியமும் சக்தியும் அதை முளைக்க வைத்து வளர்த்து கனிகளை நல்க உதவும்.
வெளிப்புற அழகு என்றுமே நீடித்திருப்பதில்லை. உள்முகக் களிப்பும் ஆனந்தமும் இல்லையெனின் வெளிப்புற அழகு, பாழ்படும். வெளிப்புற அழகை மற்றும் தோலை வசீகரமாக்குவதற்கு உழைக்கும் நாம், உள்முக அழகை வளர்ப்பதில் சிறிதளவும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், உள்முக அழகே, வெளியழகை எப்பொழுதும் மிஞ்சும். உட்புறத்தில் கொட்டையினுள் இருக்கும் புழு, ஆப்பிளின் கவர்ச்சியை, சுவையைக் கெடுக்கிறது.
ஆணும் பெண்ணும் கூடி வாழும் வாழ்க்கையில், குற்றங்குறைகளை மறப்பதற்கும், ஒருவர் மற்றவரிடம் கீழ்ப்படிந்து போவதோ அதிகாரம் செலுத்துவதோ இல்லாமல், இணக்கத்துடன் வாழ்வதற்கும், மிகுந்த அறிதிறன் வேண்டும். உறவுமுறை என்பது வாழ்க்கையின் மிகச் சிரமமானக் காரியமாக இருக்கிறது.

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

1
.