லக்ஷ்மி ரமணன்/ மனதளவில்..

நிமிஷாம்பாவை தரிசித்துவிட்டு கூட்டத்தில் மாட்டிக்கொண்ட அருண் வெளியேவர திண்டாட வேண்டியிருந்தது.தன்னை அழைத்து வந்த நண்பன் மாதவனை அவன்
தேடியபோது தூரத்தில் மரத்தடியில் நின்ற ஒரு இளைஞனுடன் அவன் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

மாதவன் ஒரு நல்ல வழக்கறிஞன். அவனுக்கு அந்த இளைஞனோடு என்ன தகராறு?
அருண் அவர்களை நெருங்குவதற்குள் அந்த இளைஞன் முகவாட்டத்துடன் போய்விட்டான்

“மாதவா என்ன பிரச்சினை? என்னிடம் சொல்ல உனக்குத் தயக்கமாக இருந்தால் வேண்டாம்.” என்றான்.

அதற்கு அவன் சிரித்துவிட்டு”பிரச்சினை எதுவும் இல்லை. நீ பார்த்த அந்தப்பையன்
எங்க பக்கத்து வீட்டில் இருக்கிற ஈஸ்வரன் சாரின் மகன் ராஜேஷ்.அவன் அம்மா கீதா எல்லாருமே எங்களோடு அன்பாகப்பழகு வாங்க. ஈஸ்வரன் சார் கொரோனா வந்து இறந்து போனதும் பிரச்சினை துவங்கியது. அவர்கள் வசிக்கும் வீடும் அடுத்துள்ள கிராமத்திலுள்ளநாலு ஏக்கர் நிலமும் அவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கியது .அதை மனைவி அல்லது மகனுக்கு அவர் உயில் எழுதிவைக்காதது பிரச்சினையாகிவிட்டது. ஈஸ்வரன் சாரின் தம்பி சொத்தில் உரிமை கொண்டாடி நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்துவிட்டார்.

ஈஸ்வரன் சார் சுய சம்பாத்தியத்தில் வாங்கின சொத்து என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து அதற்கு அவர் தம்பிஉரிமைகொண்டாட முடியாது என்று வாதாடி நான் வழக்கை ஜெயிச்சுக் கொடுத்தேன்.

அதற்கான தொகையை நான் வாங்கிக்கணும் என்று அவன் ரொம்ப வற்புறுத்தினான்.
நான் வேண்டாமென்று மறுத்துவிட்டேன். ரொம்ப அன்பான குடும்பம். இந்த சின்ன உதவியைக்கூடவா நான் செய்யக்கூடாது. அவன் ரொம்ப வற்புறுத்திச் சொல்லியும்
நான் மறுத்ததால் ஏமாற்றத்துடன் போனான். நீ பார்த்த காட்சி அதுதான்”

தொட்டதற்கெல்லாம் பணம் காசு என்று அலைகிற இந்தக்காலத்தில் தனக்கு இப்படி
ஒரு அன்பான நண்பனா?

அருண் அவனை அன்புடன் அணைத்துக் கொண்டான்.