ப.மதியழகன்/நிந்தனை

விடியல்கள்
விடை தெரியாத
கேள்விகளை எழுப்புகிறது
ஒவ்வொரு நாளும் கடக்கிறது
யுகங்களின் நீளமாய்
இறைச் செய்தியைக்
கொண்டு வந்தவர்களை
மதங்கள் கடவுளாக்கியது
கைவிடப்பட்ட உலகத்தில்
ஆன்மிகத்தைப் போதித்தவர்கள்
கலகக்காரர்களாகப் பார்க்கப்பட்டார்கள்
புத்தரும், இயேசும்
சமகாலத்தில் தூற்றப்பட்டார்கள்
மழையை வேடிக்கை பார்ப்பது போலவும்
பாம்பினைக் கல்லால் அடிப்பது போலவும்
தும்பியைத் துரத்திக் கொண்டு ஓடுவது போலவுமாய்
பால்யம் கடந்து போனது
உண்மைக்கும் பொய்க்கும்
வித்தியாசம் தெரியாமல் ஆயுளும்,
எழுதப்பட்ட ஒப்பந்தத்தில்
என் விதி என்னவாயிருக்கும்
புத்தரின் மீது
சாக்கடையை வாரி இறைத்தார்கள்
ஆனால் அவரது
மேனியிலிருந்து சந்தன மணம் கமழ்ந்தது
மனிதர்களின் அகஅழுக்குகள்
மலைபோல் குவிந்து
உலகத்தை நாற்றமடிக்கும்
கழிவுநீர் கால்வாயாகத்தான்
மாற்றி வைத்திருக்கிறது
சங்கரனின் மாயாவாதத்தை
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
இந்த உலகம் பொய்யென்றால்
சகலமும் பொய்யாகும்
எனது இருப்பும் கரைந்துவிடும் போது
முற்றிலும் இல்லாதவனாகி
விடுவேனல்லவா நான்!