ஹரணி கவிதை

{நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 19 நாள் – 23.3.2024}

000
ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அறுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வயதில்
ஒருவரேனும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவரேனும்
இரும்புக் கட்டிலில் படுத்தபடியே இளமைக்
காலத்தையும் வாழ்ந்த வாழ்வையும்
அசைபோட்டுப் படுத்திருப்பர்..

பணிவிடை செய்வோர் எல்லாத் தருணங்களிலும்
ஒத்திசைந்த அன்புடன் எதையும் செய்யமுடிவதில்லை
சிலகணமேனும் மனம் மாறும் எரிச்சலுறுவர்
வந்து தொலைக்கிறேன்.. பொழுதுக்கும்
இதே எழவாப்போச்ச என்ற சொற்கள் தெறிக்கும்..

குறையில்லை.. குற்றமுமில்லை.. நாளெல்லாம்
பணிவிடை செய்வோருக்கும் உண்டுதான்
அலுப்பும் சலிப்பும் அன்பையுத் தாண்டி
என்றுணர்ந்தே படுத்திருப்போர் அறிவர்..

மரணம் வரும்வரை வாழ்தலின் படலத்தில்
அவர்களின் எண்ணக்காதைகள் சிதைவுறும்
அமைதி ஒன்றே அவர்களின் ஆறுதல்காண்டமாகும்..
எல்லாம் தாண்டி அதையே வேண்டி நிற்பர்..

மனுதாக்கல் முடிந்து பிரச்சாரம் என்று கிளம்பி
இதோ வருகிறார்.. உங்கள் இல்லம் தேடி
உங்கள் உள்ளம் தேடி வருகிறார்..
உங்களைக் காப்பாற்ற ஓடோடி வருகிறார்
என்று மைக் பிடித்தவரும்…
நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. உங்களில் ஒருவன்..
உங்களுக்காக நான்.. உங்களின் உறவு..
உங்களுக்காக எதையும் செய்வேன்..
என்று நிற்பவரும்.. கூவிக்கூவி
நாளெல்லாம் ஓயாமல் ஒழியாமல் கத்திவருவர்
தெருவுக்குள்.. கட்டிலில் படுத்திருப்போரைக்
கணக்கில் சேர்க்காது.. அவலமே..