ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 67/அழகியசிங்கர்


ஆசிரியர் பக்கம்

26.03.2024

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 67

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : நேற்று ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே? இன்று திரும்பவும் படித்தீர்களா?
அழகியசிங்கர் : இல்லை. ஆராச்சார் புத்தகம். 62 பக்கங்களுடன் நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி. இன்று அந்தப் புத்தகத்தைத் திறக்க முடியாத பொழுது.
மோகினி : வேற எதாவது படித்தீர்களா?
அழகியசிங்கர் : இல்லை இல்லை. மனைவியுடன் தங்க மாளிகைக் கடைக்குப் போய் காதுக்குப் போடுகிற தொங்கல் வாங்கிக்கொண்டு வந்தோம்.
மோகினி : அப்படித்தான் போய் விடுகிறது பொழுது.
அழகியசிங்கர் : மேலும் வீட்டில் சில ரிப்பேர்கள் பண்ண வேண்டியிருந்தது. அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆனால் இணையக் கால கவிதை அரங்கத்தைத் தினமும் நடத்தி வருகிறேன். 100 பக்கங்களுக்கு ஒரு இணையக் கால கவிதைகளைத் தயாரித்து விட்டேன். விருட்சத்தையும் தொடரவில்லை. எப்போதும் விருட்சம் முடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். முன்பெல்லாம் விருட்சத்தில் புத்தக மதிப்புரைகள் வரும். ஒருவரே எழுதித் தருவார். அவர்தான் ஐராவதம். மாம்பலம் ரயில்வே நிலையத்தில் அவரைப் பார்த்து புத்தகங்களைக் கொடுத்து விடுவேன். ஒரு வாரத்தில் படித்துவிட்டு எழுதி விடுவார். படித்த புத்தகங்களைத் திருப்பியும் கொடுத்து விடுவார்.
ஜெகன் : அதுமாதிரி ஒருவர் உங்களுக்கு இப்போது இல்லை.
அழகியசிங்கர் : உண்மைதான். விருட்சத்தை அடையாளப்படுத்தப் புத்தக மதிப்புரை அவசியமாக இருந்தது. விருட்சம் தொடக்கக் காலத்தில் கவிஞர் இந்திரன் அறிவுரைபடி புத்தக மதிப்புரையை ஆரம்பித்தேன்.
மோகினி : மிகக் குறைவான பக்கங்களில் நிறைவான பத்திரிகையாக இருந்தது விருட்சம்.
அழகியசிங்கர் : இப்போது பக்கங்கள் அதிகமாக இருந்தாலும் நிறைவு ஏற்படவில்லை. ஆர்வமும் குறைந்துகொண்டு போகிறது.
மோகினி : அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். திரும்பவும் முன்புபோல் துளிர்க்கட்டும் விருட்சம்.
அழகியசிங்கர் : நன்றி.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம். இரவு வணக்கம்.
(இரவு 11.05 மணிக்கு)