சுகன்யா சம்பத்குமார் /முதிர்ந்த காதல்

ராமலிங்கம் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தார் . ஏனென்றால் 38 வருடம் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவிட்டு அன்று தான் ஓய்வு பெற்றார் . தன் இரண்டு மகன்களையும் நன்கு படிக்க வைத்து , அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து அவர்களின் முன்னேற்றத்தை ஓய்வு பெறுவதற்கு முன்பே பார்த்தவர் .
அவருடைய மனைவி கீதா அவருக்காகவே வாழ்கின்ற ஒரு இல்லதரிசி . அன்றைய ஆரத்தி தட்டோடு வாயில் காவலில் நின்று கொண்டிருந்தாள் கீதா.
ராமலிங்கமும் மாலை மரியாதையோடு , அலுவலக காரில் பெற்ற விருது மற்றும் காசோலையோடு கம்பீரமாக வந்து இறங்கினார் . அவர் உள்ளே நுழையும் விதத்தைப் பார்த்து தெருவே ஆச்சரியப்பட்டது .
உள்ளே நுழைந்தவர் தன் மனைவியிடம் காசோலையும் விருதையும் கொடுத்து சந்தோஷ பட்டார் . அவளும் அதற்குத் தகுந்தாற் போல் அவரிடம் அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள் . உடனே அவருக்குக் காபியைப் போட்டுக் கொடுத்துவிட்டு , அவருக்குப் பிடித்தார் போல் சமையலைச் செய்ய ஆரம்பித்தாள் .
இரவு உணவை நன்கு ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு , அமெரிக்காவில் இருக்கும் தன் இரு மகன்களுக்கும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் . அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை அப்பாவிடம் தெரிவித்தனர் .அடுத்த நாள் காலை வந்தது , எப்பொழுதும் போல் 5 மணிக்கெல்லாம் எழுந்து விட்டார் ராமலிங்கம் , வேலைக்குக் கிளம்ப வேண்டாம் , அதனால் நிறைய நேரம் இருப்பதாக உணர்ந்தார் . எனவே காலையிலேயே கிளம்பி ஒவ்வொரு கோயிலாகச் செல்ல ஆரம்பித்தார் .
காலை உணவு உண்டதும் கிளம்பி விடுவார் , திரும்பி மதிய உணவிற்குத் தான் வருவார் , பிறகு ஒரு சிறு தூக்கம் போட்டு விட்டு மறுபடியும் சாயந்தரம் அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வார் . இதையே அவர் தினமும் ஒரு வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும்போது அவருடைய கல்லூரி நண்பரைப் பார்த்தார் . பல வருடங்கள் கழித்துப் பார்த்ததால் இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர் . அவருடைய நண்பர் ராமலிங்கத்தை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று , அவரை மதிய உணவு சாப்பிடுமாறு வற்புறுத்தினர் . வேறு வழியில்லாமல் ராமலிங்கமும் ஒப்புக்கொண்டார் .
ராமலிங்கத்திற்கு அப்பொழுது தான் எல்லாம் புரிந்தது , இப்படி’ஒரு விஷயம் இருக்கிறது என்பதையே அவர் அன்று தான் உணர்ந்தார் . தன் நண்பனுக்கு உணவிற்கும் அறிவுரைக்கும் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அவர் மனைவியை அழைத்து “கீதா , இன்றிலிருந்து உனக்கு நான் ஒத்தாசையாக இருப்பேன் என்று கூறிவிட்டு , நடந்ததை எல்லாம் விவரித்தார் . கீதா சிறு புன்னகையுடன் சரி என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் .
அடுத்த நாள் காலை எழுந்து , வேகம் வேகமாகச் சமையலுக்குக் காய் கறிகளை வெட்டி கொடுத்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டார் ராமலிங்கம் .
சிறிது நேரம் கழித்து அவர் குளியல் அறையைச் சுத்தம் செய்யக் கிளம்பினார் .அவருக்கு அதில் முன் பின் அனுபவம் இல்லாததால் , பாதி சோப்பு போகியும் போகாமலும் அலம்பிவிட்டு வந்தார் . அடுத்த நொடி குளியலறைக்குச் சென்ற கீதா , திடீரென்று வழுக்கி விழுந்தாள் . சத்தம் கேட்டு போய் அவளைத் தூக்கி விட்டவர் ,உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் .
நல்ல வேலையாகத் தலையில் அடிபடவில்லை . கீதா வலியில் துடித்தாள் .ராமலிங்கமோ மனதிற்குள் வேண்டாத தெய்வம் , கீதாவிற்கு உதவி புரிகிறோம் என்று இப்படிச் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி .
விஷயம் கேட்டுப் பதறி அடித்து போன் செய்தனர் ,ராமலிங்கத்தின் மகன்கள் , உடனடியாக கிளம்பி வருவதாகவும் கூறினர் . அவர்களை ராமலிங்கம் சமாதான படுத்தி ,கீதாவைத் தானே பார்த்துக்கொள்வதாகக் கூறினார் .
கையில் பலத்த அடி என்பதால் , மருத்துவமனையில் கீதாவிற்குப் பெரிய கட்டாகப் போட்டு வீட்டிற்கு அனுப்பினர் .
உள்ளே நுழைந்தது முதல் ராமலிங்கத்தின் நண்பர் வீட்டு வேலையில் தன் மனைவிக்கு உதவுவதைப் பார்த்தார் . ராமலிங்கம் அவர் நண்பரைக் கூப்பிட்டு “என்ன டா இது , இந்த வேலையெல்லாம் நீ செய்கிறாய் ,உனக்கு இருக்கும் பண வசதிக்கு நீ ஆள் வைத்துப் பார்த்துக்கொள்ளலாமே , அதுமட்டுமின்றி உனக்கு வீட்டு வேலை செய்வதில் சங்கோஜம் இல்லை ?என்று கேட்டார் . அவர் நண்பர் சிரித்துக்கொண்டே ,”ராமலிங்கம் , எனக்கு ஓய்வு பெற்ற பிறகு பெரிதாக வேலை இல்லை , தினமும் என்னால் கோயிலுக்குச் செல்ல முடியாது , எனக்காக என் மனைவி ஆயிரம் விஷயங்களை விட்டுக் கொடுத்திருக்கிறாள்.
அவளுக்காக என்னால் பணம் சேர்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை , அதுமட்டுமின்றி ,ஓய்வு நேரத்தில் முழுவதுமாக அவளுடன் பேச ஆரம்பித்திருக்கிறேன் .உனக்குத் தெரியுமா , அவள் மிகவும் நன்றாகப் பாடுகிறாள் , எனக்கே மூன்று மாதங்களுக்கு முன்னதாக தான் தெரியும் ,”என்றார் . எங்களுக்குள் இப்பொழுது கணவன் மனைவி தாண்டி மிகுந்த நட்புணர்வு உருவாகி உள்ளது .” என்றார் .
அன்றிலிருந்து செஃப் ராமலிங்கத்தின் சமையல் தான் ,எல்லா வேலைகளையும், முடித்துவிட்டு கீதாவிற்குச் சாப்பாடு ஊட்டி விட்டார் . கீதா அதனை ரசித்துச் சாப்பிட்டு விட்டு நல்ல தூக்கம் போட்டாள் .
அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போதே நல்ல காபியின் நறுமணம் தெரிந்தது கீதாவிற்கு .அவளுக்குக் குளிப்பதற்கு உதவி செய்துவிட்டு அவிழ்ந்த அவளுடைய கூந்தலுக்குச் சிக்கு எடுக்க ஆரம்பித்தார் .அன்று தான் அவளுக்கு அவ்வளவு பெரிய கூந்தல் இருப்பதையே கவனித்தார் .வெகு நேரப் போராட்டத்திற்குப் பிறகு , அவர் மனைவிக்குப் பின்னல் பின்னிவிட்டு , காலையில் வாங்கி வந்த பூவை வைத்துவிட்டு அவளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் . அவளும் ஒரு சின்ன புன்னகையோடு தலையை வாரிக் கொண்டு , அவருடன் கிளம்பினாள் .
இந்த பழக்கம் பிடித்துவிட , சிறு குழந்தையைப் போல் , காலை சாயந்தரம் என்று இரு வேலையும் ராமலிங்கத்திடம் ஒரு சீப்பைக் கொண்டு கொடுத்து தலை வாரிக்க உட்காருவாள் கீதா , தங்கள் முதுமையில் ஏற்பட்ட இந்த காதல் , நட்புணர்வை நினைத்து இருவரும் நிம்மதியடைந்தனர் ….

One Comment on “சுகன்யா சம்பத்குமார் /முதிர்ந்த காதல்”

Comments are closed.