வானதி/பி. ஆர்.கிரிஜா

வானதி சரியாக காலை ஆறு மணிக்கு ரயில் நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் சித்தி இன்று ஊரிலிருந்து வருகிறாள். சித்தியைப் பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பழைய நினைவுகள் மனத் திரையில் வந்து போயின. சிறு வயதில் அவளை
சித்தி எத்தனை அன்போடு
கவனித்தாள். காலம் தான் எப்படி உருண்டோடி விட்டது. எனக்கே பேரன் பிறந்தாச்சு. சித்திக்கு தள்ளாமை வந்திருக்கும். 85 வயதில் இப்படி தனியாக வருவது கடினம்தான். சித்தியின் மனோ பலம் இவள் அறிந்ததே. அதற்குள் ரயில் வந்து விட்டது. ஒவ்வொரு பெட்டியாக பார்த்துக் கொண்டே வந்தாள். த்ரீ டயர் ஏஸி பெட்டியிலிருந்து மெதுவாக அவள் சித்தி
இறங்கிக் கொண்டிருந்தாள்.
இவள் வேகமாக அருகில் போய் சித்தியின் கையைப் பிடிக்கப் போன சமயம், திடீரென்று ஹாய் வானதி என்று குரல் வரவே திரும்பிப் பார்த்தாள் வானதி.
சித்திக்கு அருகில் சித்தியின் பெட்டியை பிடித்தபடி அவள் இவளைப் பார்த்து சிரித்தாள்.
வானதிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆம். அவளுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை படித்த ஷீலா சித்தியின் கையைப் பிடித்தவாறு. வானதிக்கு ஆச்சர்யம்.
“என்ன வானதி, என்ன தெரியல ? ” “ஷீலா” என்று அவளை அன்போடு அணைத்துக் கொண்டாள். நான் இந்த பெட்டியில் ஏறும் போது இந்த வயதான அம்மா யாரோடும் பேசாமல் முகத்தில் கவலையோடு இருந்தார். நான்தான் விடாமல் பேசுபவள் ஆயிற்றே, இந்த அம்மாவிடம் வலியப் போய் பேச்சுக் கொடுத்தேன். அவர்களும் என்னிடம் சரளமாகப் பேசினார். இதோ, இப்போது உன் முன்னாடி நிற்கிறேன். “வாட் அ
ப்ளசென்ட் சர்ப்ரைஸ்” என்று சொன்னபடி வானதியின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் ஷீலா.
சித்திக்கு வானதியைப் பார்த்ததில் நிம்மதியும், மகிழ்ச்சியும். வானதி நினைத்துப்
பார்த்தாள், சித்தியால் எப்போதுமே அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம், மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம். இன்று விட்டுப் போன நட்பு சித்தியின் மூலம் கிடைத்து விட்டது.
அந்தக் கடவுளுக்கு மனதிற்குள் நன்றி சொன்னவாறு இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் வானதி.


30/03/2024