அழகியசிங்கர்/நேற்றைய (30.03.2024) ,நிகழ்ச்சி

நேற்று நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போது. ஆச்சரியமாக இருக்கிறது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது என்று சொல்லலாம். இசைக்குழு நான் ஆரம்பித்தேன். எனக்குப் பாட வராது. இனிமேல் முறையாகக் கற்றுக் கொண்டாலும் குரல் ஒத்துழைக்குமான்னு தெரியாது. ஒரு நாள் நாகேந்திர பாரதி சொன்னவுடன் இசை புதிது என்று புலனத்தில் ஆரம்பித்தேன். அன்றிலிருந்து நாகேந்திர பாரதியும், சாந்தி ரஸவாதியும்தான் செம்மையாய் நடத்தி வருகிறார்கள். ஆரம்பப் புதிதில் வானவில் ரவி வீட்டில் ஒரு இசை நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள்.
கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. புலனத்தில் எல்லோரும் பாடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் எல்லோரும் பலவித ராகங்களில் பாடுகிறார்கள். மாதம் ஒருமுறை சூம் கூட்டத்தில் சந்திக்கிறார்கள்.
இதைச் சிறப்பாக எடுத்துச் செய்பவர்கள் இரண்டு பேர்கள்தான். நாகேந்திர பாரதியும், சாந்தி ரஸவாதியும்.
இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெற என் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கிறேன்.
என் மீது அவர்களுக்கு அவ்வளவு அன்பு. நான்தான் இதை ஆரம்பித்தேன் என்று. ஆனால் அவர்கள் முயற்சி இல்லாவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது.
நேற்று (30.03.2024) முதல் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள். மயிலாப்பூர் கிளப் ஹால் 2 ல். இசையுடன், என் 70
வயது பூர்த்தி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அக்கூட்டத்தில் கலந்துகொள்ள நானும் மனைவியும் சென்றோம். நாங்கள் 5.15 க்குத்தான் நுழைந்தோம். அங்கே உட்கார்ந்திருந்த எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்களை இப்படியெல்லாம் வரவேற்பார்களா?
ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கப்போகிறது என்று எண்ணியவனுக்கு, அங்கு நடந்ததைப் பார்க்கும்போது எங்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது.
அங்குக் கூடியவர்களின் அன்பு எங்களைத் திகைக்க வைத்தது.
பின் ஒவ்வொருவராகப் பாட ஆரம்பித்தார்கள். முதலில் கர்நாடக இசை.
பாடிய எல்லோரும் திறமையாகப் பாடினார்கள். ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள்.
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் எங்களைச் சிறப்பித்துப் பேசினார்.
கர்நாடக இசை முடிந்தது. எல்லோரும் குறிப்பிட்ட கால வரைக்குள் பாடி அசத்தினார்கள்.
அடுத்த நிகழ்ச்சி எங்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். என்றால். நான் எப்போதும் மதிக்கக் கூடிய நண்பர் வானவில் ரவி. அவர் எனக்கு சந்தனமாலை அணிவித்தார். ஷோபனா ரவி மனைவிக்கு. இதைத் தவிர எனக்குச் சட்டையும், வேஷ்டியும். மனைவிக்குப் புடவை.
என் மனைவி நெகிழ்ச்சி அடைந்து விட்டாள். கேக் கொண்டுவந்தார்கள். கேக்கைத் துண்டுதுண்டாக வெட்டி எல்லோரிடமும் கொடுத்தேன்.
சிறிது நேரத்தில் பொன்னாடை போர்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பொன்னாடை அளித்தவர் யாரென்று தெரிவதற்குள்
காணாமல் போய்விட்டார்.
ஆக மொத்தம் இந்த நிகழ்ச்சி இசையுடன் அன்பை வெளிப்படுத்திய நிகழ்ச்சி.
என் எழுபதாண்டு வயதில் ஒரு முறைகூட இதுமாதிரி நடந்ததில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

5 Comments on “அழகியசிங்கர்/நேற்றைய (30.03.2024) ,நிகழ்ச்சி”

  1. சார், நீங்களும் உங்கள் மனைவியும் இன்னும் பல ஆண்டுகள் நீடூழி, உடல் ஆரோக்கியத்துடன்,மனதிடத்துடன்,
    அன்பும் அமைதியும் கலந்த இந்த உலகப்
    பூங்காவில் மணம் பரப்பி வாழவேண்டும் என்று இறைவனை
    வேண்டிக் கொள்கிறேன்.
    நன்றி.

  2. இந்தக் குழுவில் உள்ள அனைவரும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்கள் அயராத உழைப்பும், எளிமையும், அனைவரையும் ஊக்குவித்து அன்போடு அரவணைத்துச் செல்லும் பாங்கும், எங்களை என்றுமே வியக்க வைக்கும். நீங்களும், உங்கள் மனைவியும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  3. அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! தங்கள் இலக்கியப் பணி தொடரட்டும் ஐயா!

  4. மெளலி, உங்கள் எழுத்துப்பணியினை வெகு காலம் அறிந்தவன் என்ற முறையிலும், உங்களுடன் பணி புரிந்தவுடன் என்ற முறையிலும், என்னைப் பொருத்த வரை, இதற்கு முழு தகுதியான நபர் நீங்கள், நீங்கள்தான் என உறுதியாக நம்புகிறேன், உரக்க கூறுகிறேன் எல்லோருக்கும். வாழ்க நண்பா நீண்ட நாள், உடல் நலத்தோடும் மன வளத்தோடும்.
    நண்பன் குமரன்

Comments are closed.