பி. ஆர்.கிரிஜா/முல்லை அடுக்ககம்

அந்த குறுகலான தெருவில் சுரேஷ் தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும் போது நில நடுக்கம் ஏற்படுவது போல் ஒரு உணர்வு. என்ன செய்வது, அவன் பட்ஜெட்டிற்கு அந்த வீடுதான் வாங்க முடிந்தது.
தினமும் அவன் மனைவி கனகாவும் அம்மா மஞ்சுளாவும் திட்டாத நாட்களே கிடையாது. அலுவலகத்திற்கு சென்றாலும் அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. சட்டென்று வாசலில் இறங்கி நடக்க முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அனைத்து விதமான வாகனங்கள் மாட்டு வண்டி உட்பட. தப்பு செய்து விட்டோமோ என்று தினம் எண்ணி எண்ணி அவன் மன நிம்மதியே பறி போனது.
அன்று வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பினான். அவன் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். பதறி அடித்து முதல் மாடியில் அவன் வீட்டை அடைந்தான். அங்கு அவன் மனைவி கனகா அவனைப் பார்த்து ” நல்ல வேளை, நீங்க இங்க வீடு வாங்கினீங்க,. இல்லாட்டி உங்கம்மாவ இப்ப உயிரோட பாக்க முடியாது” என்றாள்.
” என்ன சொல்ற கனகா”?
“ஆமாங்க, உங்க அம்மா மதியம் மூணு மணிக்கு திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க, நான் கீழ ஓடி வந்து பார்த்தேன். அப்போ ஒரு ஆட்டோ கீழே வந்துச்சு. உடனே அம்மாவக் கூட்டிப் போய் பக்கத்துல கிளினிக் போய் டாக்டரைப் பார்த்துட்டு அந்த ஆட்டோவிலேயே வீடு வந்து சேர்ந்தோம். இப்ப அம்மா நல்லா இருக்காங்க. உள்ள ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க. . நம்ம தெருவே வந்து என்ன உதவி வேணும்னு கேட்டு வாசல்ல நிக்கறாங்க” என்று சொல்லி முடித்தாள் கனகா.
சுரேஷ் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான். வெளியே வந்து அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு மேலே வந்தான். அம்மா புன்னகையுடன் அவனைப் பார்த்து கையசைத்தாள்.
இப்போது அவன் தன் வீட்டு பால்கனியிலிருந்து தெருவைப் பார்த்தான். அவன் கண்ணுக்கு இப்போது அது இடைஞ்சலாகத் தெரியவில்லை.


07/04/2024

One Comment on “பி. ஆர்.கிரிஜா/முல்லை அடுக்ககம்”

  1. ‘முல்லை அடுக்ககம்’ குறுங்கதை பாமர மக்களின் மனித நேயத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறது. சிறுகதைக்கு உரிய பண்பை ஒட்டியே கதை செல்கிறது.எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Comments are closed.