அனங்கன்/தமிழச்சி

முறமெடுத்து புலிதுரத்திய
களம் நடுங்கும் கவிதையென்று…சங்காலப்புலவன் சொன்னான் கொஞ்சம் மிகையாய் .

காலந்தோறும் நடந்த படையெடுப்பில்…யானை உழுத சேறாகி காணாமல் போனாள் தமிழச்சி கொஞ்சநாளாய்.

கோடைமழை பெய்ததுபோல்
எப்பொழுதாவது ஒரு சிலரே
வாளெடுத்து நின்றார் பெண்ணில் முதல் ஆளாய்.

இருபது நூற்றாண்டுகள் எளிதாய்க் கடந்தாலும் பெண்
எழுச்சிகொள்ளவில்லை தானே சுயமாய்.

ஆணுக்குப் பெண் நிகரென்று
பெண் எழுதும் விரல் சொன்னாலும்…தீபம் கொழுந்துவிட்டு எரியவில்லை
பெரும் வனமாய்.

பொருளாதார விடுதலையில்
பெண் கால்விலங்கு உடைந்தாலும்….பெண் தன்விடுதலையாகவில்லை
ஒருமுகமாய்.

பெண் நுகரும் பொருளில்லை…ஆயுதம் அவள் அழகில்லை….
புலியாக வா பெண்ணே! புயலாய்….
புலிதுரத்திய கதைவேண்டாம்
சற்று மிகையாய்.


♦.