ப.மதியழகன்/காடு

காடுகளில் தொலைந்துபோனவர்கள்
நிம்மதி அடையலாம்
ஏனெனில் காடுகளில்
மிருகங்கள் மட்டுமே வாழும்
வெளிச்சம் புகாத
காடுகளின் இதயப்பகுதி
சூரிய ஒளியையே
சந்தித்திராதது
ரசிக்க யாருமில்லாஇடத்திலும்
காட்டுப்பூவாக இயற்கை
தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது
காடுகளைவிட்டு வெளியேற
முடியாத போது
காடுகளின் ஒருபகுதியாகிவிடுவது தான்
புத்திசாலித்தனம்
விருட்சங்களின் சோகக்கதையை
விடுகதையாக பாடிச்செல்கிறது
குயில்
மூங்கில்கள் புல்லாங்குழலாக
இங்குதான் தவமிருக்கின்றன
மனிதர்கள்
வனங்களையும் விட்டுவைக்கவில்லை
காலி மதுபாட்டில்கள்
அங்கும் சிதறிக்கிடக்கின்றன
சட்டங்கள் இல்லாத
கானகத்தில் விலங்குகள்
பசிக்காக மட்டுமே
வேட்டையாடுகின்றன
நாட்டில் விதிமுறைகள்
கடுமையாக இருந்தும்
குற்றம் செய்ய எவரும்
குற்றவுணர்வு கொள்வதில்லை
பாரதமும், இராமகாதையும்
காடுகளின் கதை சொல்லும்
நமது மூதாதையர்களும்
வேட்டையாடி வாழ்ந்தவர்கள் தானே
வனங்களில் எல்லா
மரங்களுக்கும் தெரியும்
புத்தருக்கு போதி மரத்தடியில்
ஞானம் பிறந்த கதை!