ப.மதியழகன்/இருளும் ஒளியும்

இரை தேடிப்போன
பறவைகள்
அந்தியில் கூடடடையும்
பரிதி மறைந்தாலும்
வானம் வர்ணங்கள்
வீசப்பட்ட சுவரென காட்சி தரும்
இருண்ட வானில்
நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கும்
மின்விளக்குகளால்
மாநகரமே பிரகாசமாக ஜொலிக்கும்
சாலைகளில் வாகனங்கள்
அணிவகுக்கும்
டீக்கடைகளில் மக்கள்
கூட்டம் மொய்க்கும்
கடற்கரை மணலில்
காதல் ஜோடிகளின்
காலடிகள் பதியத் துவங்கும்
முக்கால்வாசி வீடுகளில்
மெகாசீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கும்
தொழிலகங்களில்
பகல்நேரப்பணி முடிந்திருக்கும்
குழந்தைகள் கடவுளுடன்
விளையாடத் துவங்குவார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
இருள்நாகம் வெளிச்சத்தை
விழுங்கத் துவங்கும்
நடுநிசியில் பிரபஞ்சம்
கடவுளின் கருவறையில்
சிறிது நேரம்
இளைப்பாறும்
மீண்டும் வெளிச்சம்
தீயின் நாவுகளால்
இருளைத் துரத்தும்!