ச.து.சு. யோகி/இன்றைய தமிழ் இலக்கியம்

1
காலம்
காலமே, அழிவிலாக் ககனமே,
அன்றும், இன்றும், என்றும் ஆவாய்!
2
நின்னுடை அகண்ட நித்திய வானில்
கண முதல் கற்பக் கணக்கெலாம் பார்க்கில் சிறிதும் பெரிதுமாய்ச் செல்லும் முகிற் கணம்.
3
ஆழ்ந்து அகன்ற நின் ஆர் கடல் அதனுள் வருடங்கள் சிற்றலை, மாதங்கள் நுரைத் திரள், நாட்கள் மொக்குள், நாழிகை மொக்குளின் உள்ளுறை காற்று, உருள் கணம் காற்றில் உதறும் நுண் துளி.
போலி எண்ணங்கள், கேலி கூத்துக்கள் யாவும் நின் மாருதச் சூழலில் அழியும்; வெற்றுரை ஆவேச வெறியில் உடைபடும் வயிர நெஞ்சக வண் சுடர் சிற்சில மட்டுமே அழியாது மலரும்; ஆதலால், உண்மைக்கு நீயே உரைகல்.
5
சிப்பி உடையச் சிரித்திடும் முத்தெனப் பழமைப் பேழையின் படல்களை உடைத்துப் புதுமை உதயப் புன்னகை பூப்பாய்! பழையதோர் உலகம் பண்ணிய மதுவைப் புதுமை உலகத்துப் பொங்கொளிக் கிண்ணியில் வார்ப்பாயாக, வாழ்த்தினோம், வழுதி !
6
செயல்பல நின்னைப் பிடித்திடத் திரிவன, நின்னுடை வேகம் நினைக்கவும் பெரிதே; ஆயினும்,
சிற்சில நலந்தரும் செயல்களும் நீயே
பிடித்துமே இனிமைப் பெருமைகள் காப்பாய்
7
பழமை போற்றுவோர் புதுமைகண்டு அஞ்சுவார்; ஆயிரங் காலமாய் அருமையாய் வளர்ந்த வளர்ச்சியைக் கணத்தில் நீ மாய்த்திடல் கண்டு, உளம் நொந்து அழுவர், ஒண் சுடர்க் கதிரோன் கழிவதற்கு அழுங்கிக் கருமுகில் போர்த்து அந்திவான் கண்ணீர் சிந்துமேல், இந்துவின் இளங் கதிர் இன்பமும் இழந்திடும் அன்றோ ?
8
அழுகிக் கீழ்விழும் பழங்கனிக் காய் மரம் அழுவதும் உண்டோ ? விழுந்திடாது எஞ்சிய புதுக்கனி காக்க விரும்பிடல் போல,
போனவை போக, நீ புதுமைகள் கொணராய்! காலமே, நின்னை வாழ்த்தினோம், காப்பாய்!
9
பழமை என்னும் இருட்டறை பரவும் சிற்றொளி விளக்கில் திரியலை, எண்ணெய் வரண்டது, சுடரும் மங்கியே இருளை மிகுதிப்படுத்தும் மின்மினி போன்றது. இருளைப் போற்றுவோர் போற்றுக, நாங்கள் புதுயுக மாந்தர் புத்தொளி வேண்டினோம்.
10
சிதையா நின்னைச் சிதைத்தான் மனிதன் ; ஆனால்,
ஒவ்வோர் சிதைவும் ஒவ்வோர் சிதைவொடும் பிரியா வண்ணம் பிணைந்தேயுளது ! அதனை மானுடன் அறியான்.
11
முசுட்டை இலையை முடைப் புழுவாகி நச்சிக் கறித்து நாளெலாம் உழைத்த பிச்சை வாழ்வைப் பெரிதாய் நினைத்து, பட்டுப் பூச்சி வான் பாய்ந்திடும் போது, அழுவதும் உண்டோ? ஆர்வத்தோடு அது விடுதலைபெற்று விண்ணில் பறத்தல் காண்! பழமையே நின்னைப் படக்கென ஒடிப்பேன்! நின்னுடைப் புதுமை வானத்து நீந்துவேன், காலமே! எனக்கு நின் புதுமைகள் காட்டாய்!
12
சென்றதோர் காலச் சிறப்பெலாம் பொங்கும் தாஜ்மஹால் இன்பத் தழலினைக் காப்போம்; ஆயினும், அதற்காய் ஆயிரங் காலமாய்
ஓட்டையாய் உளுத்து ஒடிந்திடும் குடிசையும் காப்போம் என்றிடல் பேதமை கண்டாய்.
13
பழங்கால மேகங்கள் வருங்கால மழை படைக்கும். ஆயினும்,
நிகழ் காலம் காற்றின்றிப்
புழுக்கமாய் நீண்டதுவே.
14
கிழவன் குழந்தைக் கிளர்ச்சியில் மகிழ்வான், முதியதோர் பழமை புதியதில் மகிழும், குழந்தை, கிழவன் போல் குற்றுயிராகிப் பழமைப் பாட்டனின் பருமனைக் கண்டு ஏங்கிடில், இளமையும், வளமையும், இன்பமும், யாவும் இழந்து அழியும். அதுபோல், நீவீரும் பழமை நினைவை எண்ணாதீர் ! பழமை அனுபவம் பாரில் நம்துணை; ஆனால், அது நம் அதிகாரி அன்று.
15
பழங்காலம் நிகழ்காலம் படைக்கும் ; நிகழ்காலம் வருங்காலம் வகுக்கும்; வளமையெலாம்
கொணர்ந்திடுவோம்,
காலத்தாற் கடந்த காட்சிகளைப் போற்றி செய்து, காலங் கழித்த கசடெல்லாம் விட்டுவிட்டோம், இறவாமல் இன்றுமுள இன்பங்கள்
போற்றிடுவோம்,
இறவாத புகழுடைய இன்பங்கள் படைப்போமே.