கோ யுன்/காதோடு காதாய் பேசுதல்


——

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
—-

மழை பெய்கிறது,
நான் என் மேஜையில் அமர்ந்திருக்கிறேன்.
மேஜை மென்மையாகப் பேசுகிறது:
ஒரு காலத்தில் நானொரு மலர், ஒரு இலை, ஒரு தண்டு.
நானொரு நிலத்திற்குக் கீழ்
பாலைவனச் சோலை வரை நீண்டிருந்த வேர்.
மேஜையின் மேல் இருக்கும் இரும்புத் துண்டு பேசுகிறது;
நான் ஒரு காலத்தில் நிலவொளி இரவுகளில் தனியாக
ஊளையிட்டுக்கொண்டிருந்த அசைவின்மையின் உள்நாக்கு.
மழை நின்றுவிட்டது.
நான் வெளியே போகிறேன்.
முழுமையாக நனைந்த புல் என்னிடம் பேசுகிறது:
நான் ஒரு காலத்தில் உனது மகிழ்ச்சியும் துக்கமும்.
நான் உனது வரலாறும் பாடல்களும்.
இப்போது நான்
மேஜையோடு
இரும்போடு
பூமியோடு
பேசுகிறேன்.
ஒரு காலத்தில் நான் நீயாக இருந்தேன்
நீயாக இருந்தேன், நீயாக இருந்தேன்.
இப்போது நான் நீ. நான் நீ.

—-