
வசந்ததீபன்
நிறைய கதவுகள் அடைபட்டிருக்கின்றன
நிறைய கனவுகள்
பூக்காது உதிர்ந்திருக்கின்றன
நிறைய கடவுள்கள்
பிறந்து கொண்டேயிருக்கின்றனர்
நகத்தைக் கடித்து
மூளையைக் கசக்கி
எழுதினேன் ஒரு கவிதை
காற்று போன பலூன்
மண்ணுள் புதையும்
பூவல்ல பெண்
முள் அல்ல பெண்
பூவாகவும் முள்ளாகவும்
இருக்கணும் பெண்
சென்ற இடங்களை
சொல்லத் துவங்கினேன்
சுவையானவைகளை விவரித்தேன்
கஷ்டங்களை கண்ணீரை
ஏனோ சொல்லவில்லை
நட்சத்திரங்கள் சிரிக்கின்றன
நானும் சிரிக்கிறேன்
நிலவே நீயேன் அழுகிறாய்?
நெருங்குகிறேன் விலகுகிறாய்
விலகுகிறேன் நெருங்குகிறாய்
நீடிக்கிறது ஊடல் விளையாட்டு…விளையாட்டு
காயாம் பூக்கள் பூத்திருக்கின்றன
காடெல்லாம் நீலக்கடல்
காற்றுவெளியிடையே அமுதம்
சிலுவையில் ஏசு தொங்குகிறார்
சாப்பாட்டு மேஜையில்
வறுத்த மாமிசம்
கடைசி விருந்து
நியாயம் மெல்லச் சாகுகிறது
அநியாயம் கை கொட்டிச் சிரிக்கிறது
நீதி வேடிக்கை பார்க்கிறது
ஆற்றில் அலையடிக்கிறது
எங்கும் மணல் வெளி
கானல் நீர்
பறவைகள் கூடு அடைகின்றன
அந்தி இருளுக்குள் விழுகிறது
மோனங்கள் மூண்டு எழுகின்றன
நிம்மதியான இடம்
நினைவுகளெங்கும் தொடரும்
தாயின் கர்ப்பகிரகம்
சிட்டுக் குருவிகள் திரிந்த நிலம்
சீதளக்காற்று வீசிய பூந்தோட்டம்
சாம்பல் பறக்கும் சுடலை
சாலையோரம் பூ மரங்கள் சிரிக்கின்றன
நீலவானில் வெண் புறாக்கள் நடனமிடுகின்றன
சாயங் காலத்திற்குச் செல்கிறேன்…செல்கிறேன்
கண்ணில் விழுந்தாள்
நெஞ்சுக்குள் உதித்தது நிலவு
திசையெல்லாம் ஒளிப்பிழம்பு…ஒளிப்பிழம்பு.
