பி. ஆர்.கிரிஜா/பாசம்

கண்ணனுக்கு அம்மா என்றால் கொள்ளை பிரியம். அம்மாவுடன் பசை போட்டு ஒட்டாத குறைதான். அம்மா எங்கு சென்றாலும் கூடவே செல்வான். அன்றும் அப்படித்தான், ஒரே வெய்யில். ஆனாலும் அம்மா வேலைக்கு செல்வதற்கு முன்பு வீட்டின் பின் புறத்தில் பாத்திரங்களை வேக வேகமாக தேய்க்க ஆரம்பித்தாள். கண்ணன் உடனே சற்றும் தாமதிக்காமல் ஒரு குடையை விரித்து அம்மாவை வெய்யிலில் இருந்து காக்க முற்பட்டான். ஒரு ஸ்டூலில் ஏறி நின்று குடையைப் பிடித்தவாறு அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நிற்பது சிறிது நேரம் கழித்துதான் அவன் அம்மாவிற்கு தெரிந்தது. அவள் தன் மகனின் பாசத்தை நினைத்து பூரித்துப் போனாள். வேகமாக வேலையை முடித்து விட்டு அவனை ஆரத் தழுவிக் கொண்டாள்.
“அம்மா நான் பெரியவனாகி நல்ல சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் உனக்கு உன்ன மாதிரியே ஒரு ரோபோ வாங்கி எல்லா வேலையும் செய்ய வைப்பேன் மா… நீ ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாம் மா ” என்று ஆசையாக சொன்னான்.
அவன் அம்மாவிற்கு சந்தோஷத்தில் தொண்டை அடைத்தது. அவள் ஒரு பள்ளியில் ஆயா வேலை
பார்க்கிறாள். இவனை பெரிய படிப்பு எப்படி படிக்க வைக்க முடியும் என்று நினைத்தவுடன் மனதில் ஒரே கலக்கம்.
அப்போது வாசலில் அழைப்பு மணி. வெளியே வந்து பார்த்தால் அவள் மாமா அங்கு நின்று கொண்டிருந்தார்.
” மாமா வாங்க, ஏது
இவ்வளவு தூரம்? “
“ஒரு மகிழ்ச்சியான செய்தி மா, உன் அப்பாவின் கேஸ்
கோர்ட்டில் ஜெயித்து அவருக்கு சேர வேண்டிய பணம் அவர் கைக்கு வந்து விட்டது. இனிமே உன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போச்சு. நீ இனிமே கவலப்படாம கண்ணனை நல்ல ஸ்கூலில் சேர்த்து படிக்க வை. உனக்கு சேர வேண்டிய பணத்தை உன் அப்பா செக்காக கொடுத்து அனுப்பி இருக்கார். அத கொடுக்கத்தான் நான் இப்ப இங்க வந்தேன் ” என்று சொல்லி முடித்தார்.
கண்ணன் ஒன்றும் புரியாமல் அம்மாவைக் கட்டிக் கொண்டு நின்றான்.
மாமாவும் அவனை அன்புடன் தழுவிக் கொண்டார்.
அவளும் அந்த இறைவனுக்கு மனதார நன்றி சொன்னாள்.